குப்பை மேட்டை வைத்து கப்பம், வியாபாரம் | தினகரன்

குப்பை மேட்டை வைத்து கப்பம், வியாபாரம்

மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்தார். முழு அளவில் விசாரித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஒருமாத காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த நீதிபதியிடம் கேட்கப்படவிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இத்தகவலை வெளியிட்டார்.

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிவால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் சூழ் நிலையில் அரசு இது தொடர்பில் சாட்டுப்போக்கு கூறி தப்பிக்கமாட்டாது. ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குப்பை மேட்டை வைத்து ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தியதை நாம் அறிவோம். குப்பையை கொண்டு செல்லும் வண்டிகளிடமிருந்து ஆயிரம் ரூபா முதல் 1500 ரூபா வரை பெறப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக இடம்பெறும் வியாபாரமாகும். இதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது உறுதியான தீர்வு காணப்படவேண்டும். சரியான திட்டம் வகுத்துச் செயற்பட வேண்டும். காலத்துக்குக் காலம் இதனை மாற்றிககொண்டிருக்க முடியாது.

மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும், நிவாரணமும் ஒரு தீர்வாக அமையமாட்டாது. (இன்று) வெள்ளிக்கிழமை கூடி ஆராயவுள்ளோம். காத்திரமான நடவடிக்கை எடுக்க பணிப்புரை வழங்கியுள்ளேன். எதிர்காலத்தில் குப்பைமேடுகளின் தாக்கம் மக்களை பாதிக்க இடமளிக்கப்படக்கூடாது.

பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி தடையாக இருக்காது. அதிகாரிகள் உரிய முறையில் செயற்படத் தவறியுள்ளனர். விசாரணைகளின் பின்னர் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எத்தகைய தரத்தினரானாலும் தப்புவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

இந்தக் குப்பைகளை கொட்டுவதற்கு யாருமே தமது ஊர்களில் இடமளிப்பதாக இல்லை. எல்லோரும் எதிர்க்கின்றனர் எனது ஊரான பொலநறுவையில் மெதிரிகிரியவில் பெரிய காட்டுப் பகுதியில் குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டபோது குப்பையை வண்டிகளில் எடுத்துச் செல்லும்போது வீதிகளின் இருபுறங்களிலுள்ள மக்கள் தம்வழியில் கொண்டுசெல்லக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சில அரசியல் சக்திகள் மக்களை தூண்டி அரசுக்கு எதிராகச் செயற்படவைக்கின்றனர். இதுதான் அவர்களது அரசியல் தர்மம் அது குறித்து நாம் கவலைப்படவில்லை. மக்களை பாதுகாக்கவேண்டும்.

இந்த குப்பை விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வுகாணப்பட வேண்டும். இப்படியே இதனை விட்டு வைத்தால் எமது நாடு குப்பை மேடாகவே மாறிவிடும்.

மாற்று வழி தேடவேண்டும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளில் கையாளப்படும் புதிய தொழில நுட்பங்களை பெற்றுக்கொள்வது குறித்து ஆராயப்படும்.

தொம்பே தொகுதியில் கிரிந்தி வலையில் குப்பை கொட்டும் இடத்துக்கு தினசரி 90 மெட்ரிக் தொன் குப்பை தேவைப்பட்டது. ஆனால் நாளாந்தம் கொண்டுபோனது 10 மெட்ரிக தொன் குப்பை மட்டுமே என கண்டறியப்பட்டுள்ளது. எனினும் ஆவணப் பதிவில் 90 மெட்ரிக் தொன் என பதியப்பட்டுள்ளது. இந்த அநியாயக் காரர்களை விட்டு வைக்க முடியுமா? எனக் கேட்கின்றேன்.

தனிநபர் விசாரணை முடிந்ததும் அடுத்த நடவடிக்கை குறித்து கவனம் செலுத்துவோம் இவ்வருட இறுதிக்குள் இந்தப் குப்பை மேட்டு பிரச்சினைக்கு முற்று முழுதான தீரவு காணப்படவேண்டும் அது குறித்து ஆராய விஷேட குழுவொன்று அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எம். ஏ.எம்.நிலாம்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...