Saturday, May 4, 2024
Home » தமிழரசு கட்சி தொடர்பான வழக்கு மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தமிழரசு கட்சி தொடர்பான வழக்கு மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

by mahesh
April 25, 2024 6:45 am 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்.

இந்த வழக்கு நேற்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இவ்வழக்குக்கு 07 பிரதிவாதிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், 02ஆம், 04ஆம் பிரதிவாதிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவான ச.குகதாசன் ஆகியோர் சார்பாக ஆஜராகியிருந்தேன். சுமார் மூன்று மணிநேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக, சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும். இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில் வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வாதி தரப்பில் கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதனை வாதி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தேன்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT