Monday, April 29, 2024
Home » இனநல்லிணக்கத்தை பேணி வருகின்ற சிறந்த அரசியல் தலைவர் ரவூப் ஹக்கீம்

இனநல்லிணக்கத்தை பேணி வருகின்ற சிறந்த அரசியல் தலைவர் ரவூப் ஹக்கீம்

by sachintha
April 16, 2024 9:39 am 0 comment

அகவை 64 இல் தடம்பதிக்கிறார்

இலங்கை முஸ்லிம் அரசியலில் சர்வதேசமறிந்த தலைவர்,சிறந்த அரசியல் இராஜதந்திரி, சட்ட முதுமாணி, கவிஞர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், மும்மொழித்தேர்ச்சி மிக்கவர் என பல்வேறு துறைகளில் தடம்பதித்த ஆளுமைமிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி அகவை 64 ஐ எட்டியிருக்கிறார்.

கண்டி குருந்துகொல்லையை பிறப்பிடமாகவும் கலகெதரயை வசிப்பிடமாகவும் கொண்ட நூர் முஹம்மத், ரவூப் ஹக்கீமின் தந்தைவழி பாட்டனார் ஆவார். சிங்கள மற்றும் தமிழ் மொழியாற்றல் மிக்க அவர் கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருந்தார். அவர் திருக்குர்ஆனில் சில பகுதிகளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்ததோடு, சிங்கள மொழியில் ‘இஸ்லாம் யனு குமக்த’ (இஸ்லாம் என்பது என்ன?) என்ற கேள்வி, பதில் அமைப்பிலான நூலையும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்.

‘சத்திய இஸ்லாம் சன்மார்க்க வினா, விடை’ என்ற ஐந்து கடமைகளின் விளக்கத்தை தமிழில் புத்தகமாக வெளியிட்டுமிருந்தார். சிங்கள பாடசாலையொன்றிலும் கூட முதன் முறையாக முஸ்லிம் அதிபராக நியமிக்கப்பட்ட நூர் முஹம்மது அவர்கள், கலகெதரயில் ‘வாத்தியார் அப்பா’ என அழைக்கப்பட்டார்.

இவ்வாறான சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்த அப்துல் ரவூப், ஹாஜரா தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தையாக 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி நாவலப்பிட்டியில் அப்துல் ரவூப் ஹிப்பதுல் ஹக்கீம் பிறந்தார்.

கல்வி மற்றும் தொழில்:-

ரவூப் ஹக்கீமின் ஆரம்பகால கற்றல் நடவடிக்கைகள் தந்தையோடு இணைந்து குடும்பமாக புலம்பெயர்ந்த பாடசாலைகளில் இருந்தாலும், ஆறாம் தரத்திற்கு அவர் தன் தந்தையின் கிராமமான கலகெதரவிலுள்ள ஜப்பார் மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்டார். சிறுவயதிலேயே சிறந்த பேச்சாற்றலைக் கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட அனைத்து மொழி, வயது பிரிவுகளிளுமான மிகச்சிறந்த பேச்சாளருக்கான மலேஷிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கேடயத்தையும் வென்றிருந்தார். கலகெதரையில் பயின்று கொண்டிருந்த போது அக்காலப்பகுதியில் ஏழாம் தரத்தில் நடாத்தப்பட்டுவந்த ‘நவோதய’ புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறப்பாக சித்தியடைந்ததன் காரணமாக 1973 இல் கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியில் கற்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

அவர் ரோயல் கல்லூரியில் தமிழ் நாடக மன்றத்தின் தலைவராக இருந்தார். ரோயல் கல்லூரியின் விவாதக் குழுவில் நான்கு வருடங்கள் உறுப்பினராக இருந்து பின்னர்அதன் தலைவராவும் அணியை வழிநடத்தினார்.

1976ம் ஆண்டு பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் ரவூப் ஹக்கீம் ரோயல் கல்லூரியிலிருந்து பங்கேற்று அந் நாட்டின்சிற்பி முஹம்மத் அலி ஜின்னா பற்றி சிறப்பாக எழுதியதற்காக தங்கப்பதக்கத்தை வென்றதோடு, பின்னர் 1979 ஆம் ஆண்டில் சிறந்த பேச்சாளருக்கான இராமநாதன் நினைவு விருதையும் வென்றார்.

பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு சட்டக் கல்லூரியில் இணைந்தார். அங்கும் தனது திறமைகளால் மிகச்சிறப்பாக அவர் செயற்பட்டார். சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் இருந்தார்.

இங்கிலாந்தின் சொலிசிடர் பரீட்சையில் தேறியிருந்த ரவூப் ஹக்கீம் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் .

கண்டி மாநகர சபை உறுப்பினராக இளம் வயதில் தெரிவு செய்யப்பட்ட பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான இஸ்மாயில் முஹம்மத் குத்தூஸ் அவர்களின் ஒரே மகளான ஷானாஸ் என்பவரை ரவூப் ஹக்கீம் திருமணம் செய்து கொண்டார்.

ரவூப் ஹக்கீம்_- ஷானாஸ் தம்பதிகளுக்கு செய்னப், செய்தூன் என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

ரவூப் ஹக்கீம் முதன் முதலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே அரசியலுக்குள் பிரவேசித்தார். சட்டக்கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும்போது முதன் முதலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பைச் சந்தித்தார். அதனையடுத்து அவருடன் அரசியலில் இணைந்தார்.

1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃப்பின் வேண்டுகோள்களின்படி சிறப்பாகச் செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் ஹக்கீம் அயராது பாடுபட்டார். 1992 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

ரவூப் ஹக்கீமின் ஆளுமை பண்புகள்,கட்சி செயலாளராக சிறப்பாக செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற் கொள்ளப்பட்டதால் 1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34 ஆவது வயதில் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

1998ம் ஆண்டு அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களுக்காக ஜெய்சீஸ் அமைப்பு வருடாவருடம் வழங்கும் சிறந்த இளைய அரசியல்வாதிக்கான விருதை வென்றுள்ள ரவூப் ஹக்கீம், கொழும்பு மாவட்ட பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றவராவார் .

1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப்பதவியில் இருந்து அகற்றி, தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக ஹக்கீமை அஷ்ரஃப் பதவிமாற்றம் செய்தார்

2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மரச் சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.

2000 ஆம் ஆண்டு அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சி தலைமைத்துவத்திற்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.

2000 ஆம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப்ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை, முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தோடு செயற்படும் தலைவராக ரவூப் ஹக்கீம் விளங்குகின்றார். அவர் சிங்கள மக்களோடும்,தமிழ் மக்களோடும் சிறந்த உறவைப் பேணி வருகிறார். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இனநல்லுறவைப் பலப்படுத்தும் தலைவராக ரவூப் ஹக்கீம் உள்ளார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்…

ஓட்டமாவடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT