Tuesday, April 30, 2024
Home » ஈகையையும் சமூக ஒற்றுமையையும் பறைசாட்டும் ஈகைத் திருநாள்

ஈகையையும் சமூக ஒற்றுமையையும் பறைசாட்டும் ஈகைத் திருநாள்

by Gayan Abeykoon
April 11, 2024 3:28 pm 0 comment

உலகெங்கிலுமுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் தங்களது ஆன்மீக மேம்பாட்டிற்காக உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் நோன்பு நோற்று, குர்ஆன் திலாவத் செய்து, திக்ர்களில் ஈடுபட்டு ஸகாத், ஸதகாக்களை வழங்கி இரவு வணக்க வழிபாடுகளையும் மேற்கொண்டு அல்லாஹ்வின் அன்பையும், மன்னிப்பையும் நரக விடுதலையையும் ஆதரவு வைத்து நோன்பைப் பூர்த்தி செய்துவிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமுகமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் நோக்கிலும் ஈதுல் பித்ர் திருநாளை கொண்டாடுகின்றனர்.

என்றாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப் பிரகாரம் பெருநாளைக் கொண்டாட வேண்டும். பெருநாளுடைய (ரமழான் மாதம் முடிந்து) ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதும் ஸகாத்துல் பித்ரைக் கொடுக்க வசதியுள்ளவர்கள் (தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் பெருநாளுடைய தேவைக்கு மேலதிகமாக உள்ளவர்கள்) மீது கடமையாகின்றது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஸகாத்துல் ஃபித்ர் நோன்பாளியிடமிருந்து நிகழ்ந்த வீணான செயல்கள் மற்றும் தீய வார்த்தைகளுக்கு குற்றப்பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகின்றது.’ என்று குறிப்பிட்டார்கள்.

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றும் நேரம் ஷவ்வால் பிறைக் கண்டதிலிருந்து ஆரம்பமாகும். இதனை பெருநாள் தொழுகைக்கு முன் கொடுப்பது சுன்னத்தாகும். ஆனால் பெருநாள் தொழுகையை விட அதனைப் பிற்படுத்துவது மக்ரூஃவாக அமைவதோடு பெருநாள் தின (சூரிய அஸ்தமனத்தை) விட அதனைப் பிற்படுத்துவது ஹராமாகவும் மாறிவிடும். அதேநேரம் ரமழான் மாத பிறை கண்டதிலிருந்து பேணுதலுக்காக அதனை நிறைவேற்றி வருபவர்களும் உள்ளனர். இதுவும் அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

ஈகைத் திருநாளைப் பொறுத்தவரை தொழுகைக்கு முன்பு உண்டுவிட்டு நேரகாலத்தோடு பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் செல்வது சுன்னத்தாகும்.

பெருநாள் தொழுகை வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா). பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் சிலர் பெருநாள் குத்பா பிரசங்கத்தை கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெருநாள் தொழுகை ஒரு ஸுன்னா முஅக்கதாவாக இருப்பது போலவே பெருநாள் குத்பாவைக் கேட்பதும் ஒரு ஸுன்னா முஅக்கதாவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெருநாள் தினத்தில் சந்திக்ககூடியவர்கள் தங்களுக்கு மத்தியில் ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்’ என்று துஆ செய்து வாழ்த்து தெரிவித்தல் அவசியமானது.

பெருநாள் தினங்களில் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் சொல்ல வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்றாகும். குறிப்பாக ஈதுல் பித்ரைப் பொறுத்தவரை ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதிலிருந்து தொழுகையை நிறைவேற்றும் வரை தக்பீர் சொல்வது ஸுன்னாவாகும். அதேபோன்று அதிகமதிகம் பிரார்த்தனைகளிலும் ஈடுபட வேண்டும்.

பெருநாள் தினத்தில் அவசியமான செலவுகளைப் போதுமாக்கிக் கொள்வதோடு ஏழைகள், சிரமத்திலுள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு தர்மங்களை வழங்கவும் முயற்சிப்பதும் சிறப்பானது.

அதேநேரம் உற்றார் உறவினரை அரவணைப்பது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது, அவர்களுடனான உறவைப் பலப்பலப்படுத்திக் கொள்வது, பகைமைகள் இருப்பின் அவற்றை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக் கொள்வது போன்ற உன்னத செயற்பாடுகளின் மூலம் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, எமது பெற்றோர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கு ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளத் தவறலாகாது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம் நு​ைழய மாட்டான்’ என்று எச்சரித்துள்ளார்கள்.  (ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம்)

மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், பலவீனமானவர்கள் என்பதனால் நாம் எமது வீட்டில், காரியாலயத்தில், ஊரில் சக மனிதர்களோடு உறவாடுகின்றபோது ஒரு சிலரோடு பகைமை, அதிருப்திகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அரியதொரு சந்தர்ப்பமாக இத்தினத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உலகில் இரண்டு விடயங்களை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறான். அவற்றில் ஒன்று, நீண்ட ஆயுள் மற்றையது தன்னுடைய வாழ்வாதாரத்தில் பரகத் என்பனவாகும். இரத்த உறவைப் பேணி வாழ்ந்தால், தன் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைப் பேணி வாழ்ந்தால் சுகமாக வாழலாம், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இலங்கை பல்லின சமூகத்தவர்கள் வாழும் ஒரு திரு நாடாகும். அதனால் இங்கு வாழும் ஏனைய சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்து செயற்படுவது எமது பொறுப்பாகும். குறிப்பாக நாம் பெருநாளை கொண்டாடும் போது அவர்களுடைய உணர்வுகள் புண்படுகின்ற அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்த்து கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெருநாளின் ஊடாக சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் மேலும் மேம்படுத்துவதிலும் சிரத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

அதேநேரம் பெருநாள் தினத்தில் அண்டை அயலவர்களுக்கு நாம் அதிகம் உபகாரம் செய்ய வேண்டும். அவர்கள் முஸ்லிம்களாகவோ முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களைச் சந்தித்தல், அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல் போன்றவற்றை மேற்கொள்ளல் என்பன சிறந்த செயற்பாடுகளாகும். இவற்றின் ஊடாக சாந்தியும் சமாதானமும் ஐக்கியமும் நிலவக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

அஷ்ஷேக் ஏ.எச்.எம் 

மின்ஹாஜ் முப்தி 

(காஷிபி, மழாஹிரி)

நிந்தவூர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT