Monday, April 29, 2024
Home » அரசியல் தீர்வை தாமதப்படுத்தும் செயல் தேவையற்றதுடன் வாக்குகளை சிதறடிக்கும்
தமிழ்த் தரப்பு பொது வேட்பாளர் தெரிவு

அரசியல் தீர்வை தாமதப்படுத்தும் செயல் தேவையற்றதுடன் வாக்குகளை சிதறடிக்கும்

ஈ.பி.டி.பி. யின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

by mahesh
April 10, 2024 8:30 am 0 comment

நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவோ பேசி தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதற்கே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சில தமிழ் அரசியல் தரப்பினரது செயற்பாடுகள் அமைவதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாட்டினது சமகால அரசியல் சூழலுக்கேற்ற வகையில் ஒரு தரப்பினர் அல்லது தரப்பு வெற்றி பெறும் வேட்பாளராக இருப்பாரென தெரிந்திருந்தும், அதற்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ள ஜனாதிபதி வேட்பாள​ரையே இன்றுவரை தமிழர் தரப்பிலிருந்து ஆதரிக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கியமான வரலாறு இருந்து வருகிறது.

அதாவது தமிழ் மக்களுக்கும், வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவுள்ளவருக்கும் இடையே புரிந்துணர்வு அற்ற வகையில், அல்லது நேரடியாக சென்று தமிழ் மக்களின் தேவைகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ள இயலாத வகையில் தமது சுயநல அரசியலை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினரால் என்றுமே தமிழ் மக்கள் நன்மைகளை பெற்றுக்கொண்டது கிடையாது.

ஆனால் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஏதாவதொரு காரணத்தை கூறி தமது தெரிவு இவர்தான், இவரை ஆதரியுங்கள் என்று கூறி தமிழ் மக்களை ஆதரிக்குமாறு திசைதிருப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலை மாறி தமிழ் தரப்பிலிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவுசெய்து நிறுத்துவது தொடர்பில் சில தமிழ் கட்சிகள் முனைகின்றனர். இதேநேரம் சிலர் பொது வேட்பாளர் தேவையறற்றதென கூறுகின்றனர்.

ஆனால் சிலர், சுயநலன்களுக்காக தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பதனூடாக தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இல்லாது செய்து பிரச்சினைகளை நீடித்த பிரச்சினையாக வைத்துக்கொள்வதற்கே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT