Thursday, May 9, 2024
Home » IPL 2024 GT vs PBKS: ஷஷாங், அஷுதோஷ் அதிரடி பேட்டிங்; குஜராத்தை வென்ற பஞ்சாப்

IPL 2024 GT vs PBKS: ஷஷாங், அஷுதோஷ் அதிரடி பேட்டிங்; குஜராத்தை வென்ற பஞ்சாப்

by Prashahini
April 5, 2024 8:49 am 0 comment

நடப்பு IPL சீசனின் 17ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக துடுப்பாட்டம் செய்திருந்தனர்.

200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ஷிகர் தவன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். தவன், 1 ஓட்டங்களில்போல்ட் ஆனார். பேர்ஸ்டோ, 13 பந்துகளில் 22 ஓட்டங்கள்எடுத்தார். பிரப்சிம்ரன் சிங், 24 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார். சாம் கரன் 5 ஓட்டங்களிலும், சிக்கந்தர் ரஸா 15 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

ஷஷாங் சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து 39 ஓட்டங்கள் சேர்த்தனர். ரஷித் கான் வீசிய 16ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி, மூன்றாவது சிக்ஸருக்கு முயன்று ஆட்டமிழந்தார் ஜிதேஷ். இம்பேக்ட் வீரராக அஷுதோஷ் சர்மா களம் கண்டார். அவருடன் இணைந்து ஷஷாங் சிங் இன்னிங்ஸில் அதிரடி காட்ட 43 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

17 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த அஷுதோஷ், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. வெற்றிக்கான ஓட்டங்களை 19.5 பந்துகளில் பஞ்சாப் அணி எட்டியது. ஷஷாங் சிங், 29 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் அணியின் ஓப்பனர்களாக சுப்மன் கில், ரித்திமான் சாஹா களமிறங்கினர். பொறுமையாக தொடக்கம் கொடுத்த இந்த இணையை ரபாடா 3ஆவது ஓவரில் பிரித்தார். 11 ஓட்டங்களில் ரித்திமான் சாஹா அவுட்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமான விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். அவரை ஹர்ப்ரீத் ப்ரார் 10வது ஓவரில் 26 ஓட்டங்களுக்கு விக்கெட்டாக்கினார். 10 ஓவர் முடிவில் குஜராத் 2 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களை சேர்த்திருந்தது.

சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் கைகோத்தார். ஆனால் அவரும் 33 ஓட்டங்களில் கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கரும் 8 ஓட்டங்களில் நிலைக்காமல் சென்றுவிட்டார்.

இதனிடையே கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தார் கில். 4 சிக்சர்களை விளாசி, 48 பந்துகளில் 89 ஓட்டங்களை குவித்தார். நடப்பு தொடரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்த குஜராத் 199 ஓட்டங்களை சேர்த்தது. சுப்மன் கில் 89 ஓட்டங்களுடனும், ராகுல் தெவாட்டியா 23 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் ராபாடா 2 விக்கெட்களையும், ஹர்ஷத் படேல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஷஷாங் சிங் ஜொலித்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குழப்பத்துக்கு மத்தியில் ஷஷாங் சிங்கை வாங்கி இருந்தது பஞ்சாப் அணி நிர்வாகம். ஷஷாங் சிங் என்ற ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் 32 வயதான ஷஷாங்கை பஞ்சாப் அணி, ரூ.20 இலட்சத்துக்கு வாங்கி இருந்தது.

அடுத்த சில நொடிகளில் தவறான வீரரை வாங்கியதை அறிந்து அவரை திருப்பி கொடுக்கும் முடிவிலிருந்த பஞ்சாப் நிர்வாகம், தங்கள் அணியின் வீரராக பின்னர் ஏற்றுக் கொண்டது. இது குறித்து பஞ்சாப் அணி விளக்கமும் கொடுத்தது.

32 வயதான அவர், உள்ளூர் கிரிக்கெட்டில் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் அளவிலான T20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடி உள்ளார். குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்த போதும் பொறுப்புடன் ஆடி 29 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

“நான் இது போன்ற இன்னிங்ஸை நினைத்து பார்த்தது உண்டு. அதை இப்போது மெய்பிக்க செய்ததில் சிறப்பாக உணர்கிறேன். வழக்கமாக பேட்டிங் ஆர்டரில் நான் 7ஆம் இடத்தில் களம் காண்பேன். இந்தப் போட்டியில் 5ஆம் இடத்தில் ஆடினேன். இரண்டு அணிகளும் தலா 200 ஓட்டங்கள் குவித்தது அருமை. பந்துக்கு ஏற்ப நான் ரியாக்ட் செய்தேன். அதற்கான சரியான ஷாட்களை ஆடினேன்.

இதற்கு முன்னர் அதிக ஆட்டங்களில் விளையாடியது இல்லை. பஞ்சாப் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் என்னை சப்போர்ட் செய்கின்றனர். எனக்கு அது நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என குஜராத் உடனான ஆட்டத்துக்கு பிறகு ஷஷாங் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஹைதராபாத், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT