Sunday, April 28, 2024
Home » நோன்பு தரும் இறையச்சத்தின் மகத்துவம்

நோன்பு தரும் இறையச்சத்தின் மகத்துவம்

by Gayan Abeykoon
March 29, 2024 11:30 am 0 comment

றுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் நபியவர்களுக்கு முன்பிருந்த சமூகங்களுக்கும் விதிக்கப்பட்டவை தான். என்றாலும் நபியவர்களுடைய உம்மத்தினருக்கு அவை சில மாற்றங்களுடன் கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் தான் நான்காவது கடமையாகிய ரமழானில் நோன்பு பிடித்தலும் அமைகிறது. நபியவர்களுடைய சமூகத்தின் நோன்பின் அடைவாக அல்லாஹுத்தஆலா தக்வாவை குறிப்பிட்டுள்ளான்.

தக்வா என்பது ஒருவரை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் தூண்டுகோலாகும். தக்வா உள்ளவர்களுக்கு நிச்சயமாக வெற்றி இருக்கிறது (ஸூரா நபஉ 31), இறுதி வெற்றி தக்வா உள்ளவர்களுக்கே இருக்கிறது (அல் அஃராப் 128) போன்ற வசனங்களின் ஊடாக அல்லாஹுத்தஆலா இதனையே உணர்த்துகின்றான். அல்லாஹ்தஆலாவைப் பற்றிய அறிவும், மறுமை பற்றி அல்லாஹுத்தஆலா வெளிப்படுத்தியவைகளும் அன்றைய சமூகத்தில் ஏற்றுக்கொள்வதற்குக் கஷ்டமான புதிய விடயங்களாக இருந்தன.

அல்குர்ஆன் என்ற அற்புதத்தைக் கூட அவர்களால் நம்பமுடியாமல் இருந்தது. இந்தச் சமூகத்தில் தான் அல்லாஹுத்தஆலா, ‘இது வேதநூல், இதில் சந்தேகமில்லை, தக்வா உள்ளவர்களுக்கு இது நேர்வழியைக் காட்டும்’ என்று அறிவித்தான். இந்த வசனங்களின் மூலம் இவ்வேதத்தை எதிர்மறையாகப் பார்த்து இதில் சந்தேகம் கொள்பவர்களுக்கு இது நேர்வழி காட்டாது. நேர்மறைச் சிந்தனையுடன் இதனை அணுகுபவர்களுக்கு இது நேர்வழி காட்டும் என்ற கருத்து புலப்படுகிறது.

இந்த வகையில் தான் நோன்பும் தக்வா (இறையச்சம்) வை வளர்ப்பதற்காக விதியாக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று என்பதில் இருந்து முன்பிருந்த சமூகத்தாரும் நோன்பு பிடித்திருக்கிறார்கள், அவர்களால் அது சாத்தியமாகி இருக்கிறது, உங்களாலும் அதனைச் சாத்தியமாக்க முடியும் என்ற தக்வாவை அல்லாஹுத்தஆலா மனிதனில் இந்த நோன்பினூடாக ஏற்படுத்துகின்றான்.

உண்ணாமல் பருகாமல் போதிய நேரகாலம் நித்திரை கொள்ளாமல் ஒருவரால் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு நோன்பு ஒருவரைக் கொண்டு வருகிறது. தன்னால் முடியாது என்றிருந்த பல நிலைப்பாடுகளை இந்த ரமழான் மாதத்திலே பலரும் மாற்றிக் கொள்கிறார்கள். இது தான் நோன்பு மனிதனிடத்திலே விட்டுச் செல்லக்கூடிய தாக்கம். இந்தத் தாக்கத்தின் விளைவாக அவனால் அடுத்த 11 மாதங்களையும் நேர்மறையாக எதிர்கொள்வதற்கான பயிற்சி கிடைக்கிறது. பசியையும் கஷ்டங்களையும் என்னால் சகித்துக்கொள்ள முடியும். அல்லாஹுத்தஆலாவின் கருணையும் அன்பும் நிச்சயமாக எனக்குக் கிடைக்கும் என்ற உணர்வு ரமழான் முடிகின்ற போது வருமாக இருந்தால் அது தான் இந்த ரமழான் முடியும் போது அவன் அடைந்து கொண்ட தக்வாவாக அமைய முடியும்.

இப்பயிற்சியை நிரூபித்துக் காட்டும் களமாகத் தான் பத்ர் அமைகிறது. நோன்பு கடமையாக்கப்பட்டு 17 ஆவது நாளிலேயே ஸஹாபாக்களுக்கு அவர்களது தக்வாவைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை அல்லாஹுத்தஆலா வழங்கினான். மதீனாவுக்குப் பக்கத்திலே பத்ர் என்ற இடத்தில் முஸ்லிம்களும் இறைநிராகரிப்பாளர்களும் யுத்தத்துக்காக ஒன்று திரண்டார்கள். இறைநிராகரிப்பாளர்களின் படைக்கு தண்ணீர் விநியோகம் செய்த இரண்டு சிறுவர்களிடம் நபியவர்கள் விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் ஒரு நாளைக்குப் பத்து ஒட்டகங்களை உணவுக்காக அறுப்பதாகச் சொன்னார்கள். ஆகவே 1000 பேரளவிலான பெரும் படை ஒன்றுடன் தாம் மோதவிருப்பதை ஸஹாபாக்கள் அறிந்து கொண்டார்கள். உமர் இப்னு வஹப் ஜுமானி என்ற ஒற்றர் மூலமாக முஸ்லிம்கள் தரப்பில் 310 பேரளவில் தான் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட இறைநிராகரிப்பாளர்களின் படைத்தலைவன் உத்பா இப்னு ராபிஆ, இவர்களுடன் எல்லாம் யுத்தம் புரியவேண்டியதில்லை, திரும்பிச் செல்வோம் என்று இளக்காரமாகக் கூறுகின்ற அளவுக்கு முஸ்லிம்களின் படை சிறியதாகவிருந்தது.

முஸ்லிம்கள் தரப்பில் இருந்த 313 அல்லது 317 பேரிடமும் யுத்தத்துக்காக 2 குதிரைகளும் 70 ஒட்டகங்களுமே காணப்பட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் எவ்வித ஆயுதங்களும் இன்றி நிராயுதபாணிகளாகத் தான் யுத்த களத்துக்கு வந்தார்கள். யுத்தத்துக்கான பயிற்சி பெற்றவர்களாக அவர்களில் பலர் இருக்கவில்லை. நோன்பு நோற்றிருந்ததனால் அவர்களுக்கு தாகசாந்திக்கோ உணவருந்துவதற்கோ வாய்ப்புக்கள் இன்றி நலிந்து களைத்துப் போயிருந்தார்கள். தவிரவும் யுத்தத்துக்கு வசதியான மேட்டுப் பாங்கான நிலத்தில் இறைநிராகரிப்பாளர்கள் நிலை கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு தாழ்வான மணல்பாங்கான நிலமே பாளையம் அமைக்கக் கிடைத்தது. இதற்கும் அப்பால் ஷைத்தான், இறைநிராகரிப்பாளர்கள் பலமானவர்கள், அவர்களிடமே நீர்நிலை இருக்கிறது என்றும் முஸ்லிம்கள் பலவீனமானவர்கள் என்றும் கதை பரப்பி முஸ்லிம்களை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தான் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் பத்ர் களத்தில் யுத்தம் ஆரம்பமானது. முஸ்லிம்கள் தரப்பில் காணப்பட்ட அனைத்து பின்னடைவுகளுக்கு மத்தியிலும் தங்களுடன் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. நபியவர்கள் யுத்தத்துக்கு முன்னர் அல்லாஹ்விடம் கேட்ட துஆவில் நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக அல்லாஹ் தங்களுக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கை அவர்களிடம் உறுதியாக இருந்தது. மொத்தத்தில் 17 நாட்களாக நோன்பு உருவாக்கிய தக்வா அவர்களிடம் இருந்தது.

அவர்கள் போராடினார்கள். அவர்களது களைப்பைப் போக்க அல்லாஹ்தஆலா மழையை பொழிய வைத்தான். மழை பொழிந்த பொழுதினில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக உறங்கி உற்சாகமாக எழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். முஸ்லிம்கள் நிலை கொண்டிருந்த மணல்பாங்கான நிலம் மழையினால் உறுதியடைந்தது. மழையினால் இறைநிராகரிப்பாளர்கள் பலவீனமடைந்தார்கள். நபிகளாரின் துஆவை ஏற்று அல்லாஹுத்தஆலா ஜிப்ரீல் (அலை) அவர்களை களத்துக்கே அனுப்பி வழிகாட்டினான். கையில் மணலை எடுத்து அதனை வாயினால் ஊதுமாறு அவர்கள் நபியவர்களுக்குச் சொன்னபோது அது மணல்புயலாகி மாறி இறைநிராகரிப்பாளர்களின் கண்களில் நுழைந்து அவர்களை பின்னடையச் செய்தது. முஸ்லிம் படைக்கு உதவுதற்காக அல்லாஹுத்தஆலா மலக்குகளை நேரடியாக களத்துக்கு அனுப்பி வைத்தான். யுத்தத்தில் புறமுதுகுகாட்டி ஓடிய காபிர்கள் பலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் அல்லாஹுத்தஆலா இறைநிராகரிப்பாளர்களின் உள்ளத்தில் அச்சத்தைத் தூவச் செய்தான்.

‘நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலவீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் கலைத்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகழிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் (அன்பால்: 26) என்று அல்லாஹுத்தஆலா தனது உதவியினால் நடந்த வெற்றியை உறுதிப்படுத்துகின்றான்.

எவ்வளவு பசி வந்தபோதும் தாங்க முடியாத தாகம் வந்தபோதும் தம்மால் நோன்பு பிடித்து தமது அன்றாட அலுவல்களையும் செய்து கொள்ள முடியும் என்று நோன்பு உருவாக்கிய தக்வா, ஸஹாபாக்களை வெற்றி சாத்தியமே இல்லாத யுத்தம் ஒன்றையே வெற்றிகொள்ள வைத்திருக்கிறது. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் சமீபத்தில் இருக்கிறது என்ற அல்லாஹ்வின் வசனங்களை தக்வாவுடன் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

உங்களுக்கு முந்திய சமுதாயத்துக்கு கடமையாக்கப்பட்டது போலவே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று நபியவர்களது சமுதாயத்துக்கு அல்லாஹுத்தஆலா சொன்னது போலவே, நோன்பின் மூலம் தக்வா உள்ளவர்களாக மாறலாம் என்பதை எங்களுக்கு முன்பிருந்த நபியவர்களின் சமுதாயத்தினர் எடுத்துக்காட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் வழியில் நின்று எங்களால் முடியும், அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான் என்ற உணர்வை இந்த ரமழானில் நாம் உருவாக்க முடியுமானால் அடுத்த ரமழான் வரையான காலத்துக்கான தக்வாவை அடைந்தவர்களில் நாமும் ஒருவராக முடியும்.

பியாஸ் முஹம்மத்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT