Saturday, April 27, 2024
Home » கட்சிகள், சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப் பணத்தை அதிகரிக்க உத்தேசம்

கட்சிகள், சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப் பணத்தை அதிகரிக்க உத்தேசம்

கை விரலில் மை பூசுவதை தவிர்க்கவும் நடவடிக்கை

by Gayan Abeykoon
March 29, 2024 1:16 pm 0 comment

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவிப்பு

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால்  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவ்வாறு வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியம் என்பது  சட்டமாக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகளை தடுக்கும் வகையில்  தற்போதும் நடைமுறையிலுள்ள விரலுக்கு மை பூசுவதை இரத்துச்செய்யவும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தலுக்கு தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவின தொகை வித்தியாசப்படும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதுதொடர்பான வழிகாட்டல் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவி ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்திலும் சில பிரச்சினைகள் காணப்படுவதால் அது தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதில் சிக்கல்கள் காணப்படுமாயின் ஊடக நிறுவனங்கள் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாற்று யோசனைகளை முன் வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவினத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க சட்டமும் அதன் அமுலாக்கமும் தொடர்பில் அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதானிகளுக்கும் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரசாரத்துக்கான அதிகரித்த நிதி செல தினம் பாரிய அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒன்றாகும். பணத்தின் மூலம் மக்களின் நிலைப்பாட்டை மாற்ற முடியும் என்பதால் பண பலம் இல்லாத வேட்பாளர்களுக்கு தேர்தலில் அநீதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்துள்ள போதும் 2010 காலப்பகுதியிலேயே தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது. எனினும் அக்காலப் பகுதியில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் கவனிக்கப்படாத நிலையில் பின்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த சட்டம் தற்போது அமுலில்  உள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோது அந்த சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். எனினும் இறுதியில் உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்்பெறவில்லை.  இந்த வருட இறுதிப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வாய்ப்புள்ளது. தேர்தலில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த எந்த சட்டமும் இல்லாதிருந்த நிலையில் தற்போது அந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தில் சில பிரச்சினைகள் காணப்படும் நிலையில் அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆணைக் குழு எதிர்பார்த்துள்ளது. அடுத்து இடம்பெற வுள்ள தேர்தலின்போது இந்த சடட்டத்தை அமுல்படுத்தும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை கருத்திற் கொண்டு அதனை  தவிர்த்துககொள்வதற்கே அது தொடர்பில் ஊடக பிரதானிகளுக்கு தெளிவுபடுத்தி அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலாேசனைகளை உள்வாங்கி திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT