Saturday, April 27, 2024
Home » வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி

வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி

by Prashahini
March 28, 2024 4:05 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் 07 ஆலயங்கள் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று (28) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது வடமாகாண ஆளுநர் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களினுள் 21 வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

சுமார் 33 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும். இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளேன் என ஆளுநர் தெரிவித்தார்.

அதன் போது, மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் கூறினார்கள்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதி பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் யுக்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிசாருக்கு ஆளுநர் கூறினார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT