Saturday, April 27, 2024
Home » பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33% சம்பள உயர்வு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33% சம்பள உயர்வு?

- 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் ஜீவன்

by Prashahini
March 28, 2024 2:40 pm 0 comment

– நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர வேண்டும்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது.

தேசிய தொழிலாளர் சபையில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் , நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உட்பட பெருந்தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இப்பிரேரணை தொடர்பிலான காரணங்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென தோட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

அதன்படி தாம் கோரும் நாளாந்த சம்பள உயர்வை வழங்குமாறும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்குத் தேவையான தலையீட்டை ஜனாதிபதி செய்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் அதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார தன்னால் கொண்டுவரப்படவுள்ள புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டக் கம்பனிகளால் சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. எனினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியதாவது,

“ பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் முன்வந்துள்ளன. எனினும், இதனை ஏற்கமுடியாது என அனைத்து தொழிற்சங்கங்களும் தெரிவித்தன. 1,700 ரூபாவையே கோரினோம். அந்த தொகையில் உறுதியாக நிற்கின்றோம் என தெளிவாக எடுத்துரைத்தோம்.

சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு தொழில் அமைச்சர் ஒப்புகொண்டுள்ளார். ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும்.

நாட்கூலி முறைமை பொருத்தமற்றது. எனவே, நிரந்தரமானதொரு தீர்வை நோக்கி நகர வேண்டும். அந்த நிரந்தர தீர்வை அடைய காலம் எடுக்கும். அதுவரை ஆயிரம் ரூபாவிலேயே இருக்க முடியாது. அதனால்தான் 1,700 ரூபா கோருகின்றோம்.

ஒரு குடும்பமொன்று 3 வேலைகள் சாப்பிட்டு வாழ வேண்டுமெனில் 76,000 ரூபா அவசியம். ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் சராசரி வருமானம் 42 ஆயிரமாக உள்ளது. இதனை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் செய்யாமல், ஒற்றுமையாக இருந்தால் தீர்வை அடையலாம்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT