Saturday, April 27, 2024
Home » ஹசரங்கவின் IPL வருகையில் ஒரு வார காலம் வரையில் தாமதம்

ஹசரங்கவின் IPL வருகையில் ஒரு வார காலம் வரையில் தாமதம்

- நீண்ட காலமாக குதிகால் வலியால் அவதி

by Rizwan Segu Mohideen
March 28, 2024 8:18 am 0 comment

இலங்கை ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தனது இடது குதிகால் பகுதியில் நீடிக்கும் வலி தொடர்பில் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வரும் நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைவதில் மேலும் ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரில் ஹசரங்க விளையாடியபோதும் அவர் வலியுடனேயே போட்டிகளில் ஆடியிருப்பதாக தெரியந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் மருத்துவ குழுவினர் அந்த வலி தொடர்பில் அவதானித்திருப்பதோடு, அவரது இடது குதிகாலில் அந்த வலி ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் காயத்தின் உண்மையான தன்மை குறித்து கண்டறிவது மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மேலும் மருத்துவ ஆலோசனையை பெறும்படி இலங்கை கிரிக்கெட் மருத்துவர்கள் ஹசரங்கவை அறிவுறுத்தியுள்ளனர். இதனை செய்வதற்காக அவர் அடுத்த வாரம் வெளிநாடு செல்லவுள்ளார் என்று தெரியவருகிறது.

ஹசரங்க இன்னும் சன்ரைசஸ் அணியில் இணையவில்லை என்பதோடு அவர் இணையும் திகதி தொடர்பிலான விபரம் வெளியாகவில்லை.

எனினும் தாம் அணித் தலைவராக செயற்படும் ரி20 போட்டிகளில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஹசரங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அது தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் அவர் ஓய்வெடுப்பது, சிகிச்சை பெறுவது அல்லது புனர்வாழ்வு பெற வேண்டி ஏற்பட்டால் அவர் IPL தொடரில் இணையும் காலம் மேலும் தாமதம் அடையக் கூடும்.

ஹசரங்க 2022 IPL பருவத்தில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக சிறப்பாக ஆடி அந்தத் தொடரில் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் சன்ரைசஸ் அணி அண்மையில் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஹசரங்கவை இந்திய நாணயப்படி 1.5 கோடிக்கு வாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தியை வெளியிட்ட ஹசரங்கவுக்கு தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் தடை விதித்தது.

டெஸ்ட் ஓய்வு முடிவை மாற்றி மீண்டும் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை அமுலுக்கு வந்தது. இல்லாவிட்டால் அவர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை ஆடும் நான்கு போட்டிகளிலும் தடையை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT