Home » தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை ஊடாகவும் இன ஐக்கியம் பேண முடியும்

தமிழ் – சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை ஊடாகவும் இன ஐக்கியம் பேண முடியும்

by mahesh
March 27, 2024 12:20 pm 0 comment

படைப்பிலக்கியவாதிகளினதும் ஊடகவியலாளர்களினதும் கலைஞர்களினதும் பிரதான கடமை குறித்து தீவிரமாக சிந்தித்து செயலாற்றவேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் சில அரசியல்வாதிகளும், பேரினவாத சிந்தனை கொண்டோரும் எவ்விதம் செயற்பட்டபோதிலும், மேலே குறிப்பிட்ட மூன்றுபிரிவினரும் இனநல்லுறவு, மதநல்லிணக்கம், இனமதமொழி வேறுபாடற்ற சமத்துவம், மனிதநேயம் என்பன பற்றி அக்கறையுடன் கலந்துரையாட வேண்டியது அவசியம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு மூலகாரணமாக இருப்பது மொழி மற்றும் இனம்சார்ந்த விவகாரங்கள்தான். ஆனால், மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது.

அந்த வகையில் படைப்பாளிகளும் (Writers) ஊடகவியலாளர்களும் (Journalists) கலைஞர்களும் (Artists) மக்களிடம் உருவாகும் இனமுறுகல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தொண்டர்களாக வேண்டும். அவர்கள தமது படைப்புகளின் ஊடாக நஞ்சை விதைத்தால் அந்த நஞ்சு இறுதியில் அவர்களையே அழித்துவிடும்.

ஒரு இனத்தின் தனித்துவம், அடையாளம், மொழி, மற்றும் கலாசாரம் என்பன பிற இனத்திற்கு கலை, இலக்கியம் ஊடாகவே தெரியவரும். உதாரணமாக ஐரோப்பிய மொழி இலக்கியங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆங்கில மொழி இலக்கியங்கள் மற்றும் ஆபிரிக்க இலக்கியங்கள் ஊடாக அந்தந்த நாட்டின் இனங்களின் அடையாளம், பண்பாடு, சிந்தனை என்பவற்றை எமது தாய்மொழியில் தெரிந்து கொள்வதற்கு மொழிபெயர்ப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன.

தமிழர்கள் ஷேக்ஸ்பியரையும், லியோ டோல்ஸ்ரோயையும், தாஸ்தாவெஸ்கியையும், மக்சிம் கோர்க்கியையும், டி.எச். லோரன்ஸையும், மாப்பசானையும், கலீல் ஜிப்ரானையும், நஸ்ருல் இஸ்லாமையும், ஹெமிங்வேயையும், சினுவா ஆச்சுபேயையும் ஆங்கிலமொழி ஊடாகவே தெரிந்துகொண்டமைக்கு முக்கிய காரணம் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள்தான்.

தமிழ், சிங்கள வாசகர்கள் ஆங்கிலத்திலிருந்து அவர்களின் எழுத்துக்களை தத்தம் தாய்மொழிகளுக்கு மொழிபெயர்த்து தெரிந்து கொண்டோம். அதுபோன்று இலங்கையரான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் பரஸ்பரம் மொழிபெயர்ப்புகளின் ஊடாக சகோதர இனங்களின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் உணர்வுகளையும் தெரிந்துகொள்ளமுடியும்.

இலங்கையில் சிங்கள – தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்காகவும் இனநல்லிணக்கத்திற்காகவும் பல இலக்கியவாதிகள் அயராமல் தொண்டாற்றியிருக்கிறார்கள்.

ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், கலாமணி பரணீதரன், மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின்

ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், கலாமணி பரணீதரன், மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின்

இலங்கையில் முன்னர் சுமார் 30 வருடகாலமாக தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் சுமார் 17 வருடகாலமாக மூவின மக்களும் செறிந்து வாழும் கொழும்பிலிருந்தும் வெளியான மல்லிகை கலை, இலக்கிய மாத இதழ், இனஒற்றுமைக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வந்தது.

அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா ஒரு முற்போக்கு இலக்கியவாதி. இலங்கையில் முதல் முதல் தமிழ் சிறுகதை இலக்கியத்திற்காக (தண்ணீரும் கண்ணீரும்) தேசிய சாகித்திய விருது பெற்றவர். அவரது மல்லிகை இதழ்களில் சிங்கள இலக்கியவாதிகள் மார்டின் விக்கிரமசிங்கா, எதிரிவீர சரச்சந்திரா, குணசேனவிதான, கே. ஜயதிலக்க, ஜி.பி. சேனாநாயக்கா, ஆரியரத்ன விதான, கருணாசேன ஜயலத், குணதாஸ அமரசேகர, மககமசேகர உட்பட பலரதும் படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

அத்துடன் இவர்களில் சிலரதும் தமிழ் அபிமானியான வண.ரத்னவன்ஸதேரோ, சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸ், நாடகக்கலைஞரும் இயக்குநருமான ஹென்றி ஜயசேன, நூல் பதிப்புத்துறையைச்சேர்ந்த சுமணசிறிகொடகே ஆகியோரதும் படங்களை மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து அவர்தம் நேர்காணல்களையும் அவர்களைப்பற்றிய அறிமுகக்கட்டுரைகளையும் மல்லிகை இதழ் வெளியிட்டிருக்கிறது.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழில் தெனகமசிறிவர்தன, குசும்அறம்பத், பிலேமினா தில்றுக்க்ஷி, அரவிந்த சந்திரபத்ம, அமரபால கறசிங்ஹ ஆரச்சி, அஜித்பெரகும் ஜயசிங்க, முதலானோரின் பல சிங்களச் சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன.

பெரும்பாலான கதைகளை ஆறுமுகம் தங்கவேலாயுதம் தமிழுக்குத் தந்துள்ளார். திக்குவல்லை கமாலும் சில கதைகளை ஞானம் இதழில் தமிழுக்கு வரவாக்கியுள்ளார். இதுவரையில் 250 இற்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டு தொடர்ந்தும் வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில் ஜயந்த தர்மசிறீ விதான என்பவரின் சிறுகதையை திக்குவல்லை கமால் தமிழில் தந்துள்ளார். ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.

மட்டக்களப்பிலிருந்து வி. மைக்கல் கொலின் வெளியிட்டுவரும் மகுடம் என்னும் காலாண்டிதழ் மஞ்சுளவெடிவர்தனவின் கவிதைகளை தமிழுக்குத்தந்துள்ளன. அவற்றை மொழிபெயர்த்தவர் ஃபஹீமா ஜகான் ஆனால், இந்தத்தகவல்கள் எத்தனை சிங்கள வாசகர்களுக்குத்தெரியும் என்பதுதான் என் போன்றவர்களின் கவலை.

மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, சிங்களப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளை மட்டுமல்ல, பல சிங்கள இலக்கியமேதைகளின் உருவப்படங்களையும் மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து, அவர்களுக்கு கௌரவம் வழங்கியிருக்கிறார்.

இந்தப்பணியில் அவர் அயராமல் தொடர்ந்தவர். அதனாலும் அவருக்கு சாகித்தியரத்னா விருதும் கிடைத்தது. அத்துடன் தேசத்தின் கண் என்ற விருதையும் பெற்றவர். இந்த அதியுர் விருதுபெற்ற மற்றவர் விஞ்ஞான எழுத்தாளர் ஆதர் ஸி கிளார்க்.

இலங்கைப்பாரளுமன்றத்தில் டொமினிக் ஜீவாவின் சேவைகுறித்து பாராட்டிப் பேசப்பட்டது. அவரது பல சிறுகதைகளின் தொகுப்பு பத்ரசூத்தய என்ற பெயரில் சிங்களத்தில் வெளியாகியது. மொழிபெயர்த்தவர் இப்னு அசூமத்.

நான் ஏற்கனவே எழுதியிருந்த சிறுகதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட எனது இனிய இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால் முயற்சி செய்தார். அவரது நண்பரும் முன்னாள் பாடசாலை அதிபருமான கராமத் என்பவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த மதகசெவனலி ( Shadow of Memories ) என்ற நூலை ஆனமடுவ தோதன்ன பதிப்பகம் வெளியிட்டது. இந்தப்பதிப்பகத்தை நடத்தும் சிட்னி மார்க்கஸ் டயஸ் என்ற சிங்கள அன்பரும் ஒரு படைப்பிலக்கியவாதி.

அத்துடன் ஏற்கனவே பல தமிழ் சிறுகதைகள் மற்றும் நாவல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள இனநல்லுறவின் அபிமானியான மடுளுகிரியே விஜேரத்தின அவர்கள் அவுஸ்திரேலியாவில் வதியும் டொக்டர் நொயல் நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற நாவலை சமணலவெ என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.

இந்நாவல் ஏற்கனவே தமிழில் இரண்டு பதிப்புகளை கண்டுவிட்டன. அத்துடன் வண்ணாத்திக்குளம் நாவலை ஆங்கிலத்தில் (Butterfly Lake) என்ற பெயரில் கொழும்பில் பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் விஜித்தயாப்பா வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் நல்லைக்குமரன் குமாரசாமி.

மற்றுமொரு நடேசனின் தமிழ் நாவல் உனையே மயல்கொண்டு (Lost in you) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. அதனை மொழிபெயர்த்தவர் சென்னையைச்சேர்ந்த பார்வதி வாசுதேவ்.

கொழும்பில் இயங்கும் கொடகே பதிப்பகத்தில் முன்னர் பணியாற்றிய சிங்கள இலக்கியவாதி (அமரர்) உபாலி லீலாரத்தின என்பவரின் மொழிபெயர்ப்பில் தமிழக எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் சக்கரை லண்டனில் வதியும் வவுனியூர் உதயணனின் பனிநிலவு, மன்னார் உதயணின் லோமியா, சடகோபனின் தேயிலை சாயம் என்பன சிங்களத்தில் வெளியிடப்பட்டன.

கொடகே பதிப்பகத்தின் அதிபர் சுமணசிறிகொடகே என்ற அன்பர் மூவின இலக்கியவாதிகளினாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கனவான். அவர் தமிழ்ப் பதிப்பகங்களை நடத்தும் தமிழர்களுக்கு முன்மாதிரியான பெருமகன் என்று சொன்னாலும் அது மிகையில்லை. தமது கொடகே பதிப்பகத்தின் ஊடாக தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுகிறார். அத்துடன் வருடாந்தம் தமிழ்ப்படைப்பாளிகளை தெரிவுசெய்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்குகிறார். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக அவர்தொடரும் இந்த ஆக்கபூர்வமான பணி விதந்துபோற்றுதலுக்குரியது.

அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள் சிலரின் தமிழ்க்கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் Being Alive . இந்நூல் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிந்தளவுக்கு இலங்கையில் இனநல்லிணக்கத்தை கலை, இலக்கியவாதிகள் ஊடாக மேற்கொள்வதற்கு அரும்பாடுபட்டது. மகாகவி பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் பாரதி பத்ய என்ற பெயரில் மொழிபெயர்த்து பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது.

கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய கே.ஜி. அமரதாஸ என்பவரும் திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ரத்ன நாணயக்காரவும் பாரதி பத்ய நூலில் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கே.ஜி. அமரதாஸவும் ஒரு தமிழ் அபிமானி. சரளமாகத்தமிழ் பேசுவார். பேராசிரியர் கைலாசபதி மறைந்தபோது வீரகேசரியில் தமிழில் அஞ்சலிக்கவிதை எழுதியவர்.

ஹனிபா என்ற முஸ்லிம் எழுத்தாளர் மகாகவி பாரதியின் சுருக்கமான வரலாற்றை சிங்களத்தில் வெளியிட்டிருக்கிறார். பாரதி நூற்றாண்டு காலப்பகுதியில் இந்நூல்கள் வெளியாகின.

லெ. முருகபூபதி
அவுஸ்திரேலியா

ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், கலாமணி பரணீதரன், மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT