Saturday, April 27, 2024
Home » யாழ். தென்மராட்சி திருச்செல்வம் தாடியால் வாகனத்தை இழுத்து சாதனை

யாழ். தென்மராட்சி திருச்செல்வம் தாடியால் வாகனத்தை இழுத்து சாதனை

காலிமுகத்திடலில் நேற்று சம்பவம்

by damith
March 25, 2024 7:30 am 0 comment

யாழ்.தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவர் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1,000 மீற்றர் தூரம் வரை இழுத்து சாதனையை நிகழ்த்தினார்.

நேற்றுக் காலை (24) 10.00 மணியளவில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்நிகழ்வு நடைபெற்றது. 1,000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது. அதற்கமைய 1,550 கிலோ எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தாடியாலும், 500 மீற்றர் தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த உலக சாதனையை நிகழ்த்தினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனைப் புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். வாகனத்தை இழுத்துவந்த செல்லையா திருச்செல்வத்தை ஆரம்பம் முதல் சாதனையை நிலைநாட்டும் வரையில் அமைச்சர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வம் அவர்களின் சாதனையை அங்கீகரித்து பதக்கத்தையும், விருதையும், பட்டயத்தையும் வழங்கி அதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கினர்.

உலக சாதனை நாயகனான செல்லையா திருச்செல்வம் (60) கடந்த பத்தாண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின்மீது வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளைச் செய்து வருகிறார்.

60 வயதான இவர் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையமருகில் 1,550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1,500 மீற்றர் தூரத்தை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்தார்.

இந்நிகழ்வு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இச்சாதனை மூலம் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் செல்லையா திருச்செல்வத்தின் பெயரும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT