Thursday, May 9, 2024
Home » மாகாண சபையை நடைமுறைப்படுத்த ரெலோ தொடர் அழுத்தம் கொடுக்கும்

மாகாண சபையை நடைமுறைப்படுத்த ரெலோ தொடர் அழுத்தம் கொடுக்கும்

11 ஆவது தேசிய மாநாட்டு பிரகடனத்தில் அறிவிப்பு

by damith
March 25, 2024 7:15 am 0 comment

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் அரசியல் யாப்பில் திருத்தங்களோடு உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தொடர் அழுத்தம் கொடுப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது தேசிய மாநாட்டு பிரகடனத்தில் அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11 ஆவது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.

இதன்போது இயக்கத்தின் மாநாட்டுப் பிரகடனத்தை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘எமது மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளான வடக்கு_ கிழக்கு இணைந்த, தமிழர் தாயகத்தில், தம்மைத்தாமே ஆளுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய, சுயாட்சி அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுடன், இந்த இலக்கை அடைவதற்கான நிரந்தர பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அந்தப் பொறிமுறையை இந்தியாவினுடைய மேற்பார்வையிலும் சர்வதேச நாடுகளின் பங்களிப்போடும் ஐ.நாவின் வழிநடத்தலோடும் புலம்பெயர் உறவுகளின் ஒருங்கிணைப்போடும் உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

அத்துடன், எமது தாயக பிரதேசத்தை எமது பாரம்பரிய வதிவிடமாகக் கொண்டு, எமது தனித்துவமான இன அடையாளத்தையும், தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்திய இந்திய_ இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களோடு உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த அரசுக்கு தொடர் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்ப்படுத்த வேண்டும். எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நீதிப் பொறிமுறைக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரி நிற்கும் எம்மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வோம்.

எமது தாயக பிரதேசத்தில் தொடர்ந்து அபகரிக்கப்பட்ட வந்த காணிகளை விடுவிப்பதற்கு பாடுபடுவோம். காணி அபகரிப்பின் விளைவாக எமது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான சகல அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

எமது இனத்தின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதோடு அவற்றை வளர்ப்பதற்கும் செழுமைப்படுத்தவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மேற்கூறிய எமது மக்களின் நலன் சார்ந்த அரசியல் அபிலாசைகளையும் உரிமையையும் வென்றெடுப்பதற்கு முழு முயற்சியோடு ஈடுபடுவதென்று இந்த மாநாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பிரகடனப்படுத்தி நிற்கிறது’.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT