Home » தொட்டவத்தை ஐக்கிய சமயம்சார் கல்விச் சமூகத்தின் ஸக்காத் திட்டம்

தொட்டவத்தை ஐக்கிய சமயம்சார் கல்விச் சமூகத்தின் ஸக்காத் திட்டம்

by damith
March 25, 2024 3:45 pm 0 comment

பாணந்துறை தொட்டவத்தை ஐக்கிய சமயம்சார் கல்விச் சமூகத்தின் THOTAWATTA RELIGIOUS UNITED EDUCATION SOCIETY _TRUES) கூட்டு ஸக்காத் சேகரிப்புத் திட்டமும் சேவைகளும் இந்த அமைப்பின் ஸ்தாபகரான தொட்டவத்தை பள்ளிவாசல்கள் தர்மகர்த்தாவின் வழிகாட்டலில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமைப்பின் செயலாளர் முஸாப் ஹலீம்

அமைப்பின் செயலாளர் முஸாப் ஹலீம்

கடந்த 2022 ஆம் ஆண்டு உதயமான இந்த அமைப்பு சிறப்பு வழிகாட்டல் மற்றும் சிறந்த முகாமைத்துவம் ஊடாக கூட்டு ஸக்காத் சேகரிப்பு மற்றும் அமைப்புசார் பணிகளை தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைப்பின் செயலாளர் முஸாப் ஹலீம் ஆசிரியர் தெரிவித்தார்.

ஸக்காத் கடமையானவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் ஸக்காத் நிதியை கூட்டு ஸக்காத் நிதியத்துக்கு ஒன்றுதிரட்டி பிரதேசத்தின் வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவம், வாழ்வாதார உதவி, சுயதொழில் முயற்சி, வீடு புனரமைப்பும் வீடமைப்பும், கடன் ஒழித்தல், காணி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சமூக மறுமலர்ச்சித் திட்டங்களை அமைப்பு முன்னெடுத்து வருவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தொழில் வாய்ப்பின் நிமித்தம் தகுதியானவர்களுக்கு முச்சக்கரவண்டிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை தொட்டவத்தை பள்ளிவாசல்களின் தர்மகர்த்தா இந்த அமைப்பின் ஸ்தாபகராக விளங்குகிறார். தொழில்நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் ஆலோசகர்களாக உள்ளனர். பள்ளிவாசல் பரிபாலன பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு திட்டமிடப்பட்ட முறையான சேவைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஆண்டில் ஸக்காத் நிதியத்துக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாவும் இரண்டாவது வருடத்தில் சுமார் ஒன்றேமுக்கால் கோடி ரூபாவும் சேர்ந்துள்ளன.

அமைப்பின் சன்மார்க்க ஆலோசகர்களாக மௌலவி ரிஸ்கான் முஹம்மத் மற்றும் மௌலவி எம்.எம்.எம்.முஷாகிர் ஆகியோர் பணியாற்றுவதுடன் 19 பேர் அமைப்பின் உறுப்பினர்களாவர் பிரதேசத்தில் மக்களுக்கு ஒருதொகை பணத்தை பகிர்ந்தளிக்கும் ஸக்காத் வழங்கல் சம்பிரதாயங்களை மாற்றியமைத்து பயனுள்ள திட்டங்களை அமுல்படுத்தி வரும் மேற்படி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்க முற்போக்கான செயல் திட்டமாகும். எனவே இந்த அமைப்பின் கூட்டு ஸக்காத் பணிகளுக்கு தகுதியான அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.முன்தஸிர் (பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT