Home » IPL 2024 CSK vs RCB: ஆரம்பமாகும் முதல் அதிரடி ஆட்டம்

IPL 2024 CSK vs RCB: ஆரம்பமாகும் முதல் அதிரடி ஆட்டம்

- தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

by Prashahini
March 22, 2024 1:37 pm 0 comment

– CSK ஆட்ட நாட்களில் பஸ்களில் இலவச பயணம்

IPL கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் போட்டிகள் இன்று (22) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், இரு முறை வாகை சூடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தலா ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

நடப்பு சாம்பியனான CSK இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்குகிறது. போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் நேற்று கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாகவும், புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் எனவும் CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ள 42 வயதான எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடரக்கூடும் என கருதப்படுகிறது.

CSK அணியில் இம்முறை டேவன் கான்வே காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் புதிதாக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் அவரது இடத்தை நிரப்பக்கூடும். இதேபோன்று இலங்கையின் மதிஷா பதிரன, பங்களாதேஷின் முஸ்டா பிஸுர் ரஹ்மான் ஆகியோரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

எனினும் தீபக் ஷகார், ஷர்துல்தாக்குர் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். இவர்களுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் இம்முறை சீரான திறனை வெளிப்படுத்தியுள்ள துஷார் தேஷ்பாண்டேவும் இருப்பது அணியின் பந்து வீச்சை வலுவடையச் செய்யக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடஜா, மஹீஷ் தீக்சனா, மொயின் அலி ஆகியோர் வலுவானவர்களாக உள்ளனர்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானேடாப் ஆர்டரில் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சுக்கு எதிரான ரன் வேட்டையாடும் திறன் கொண்ட ஷிவம் துபேவும் அசத்த காத்திருக்கிறார்.

ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இளம் பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அம்பதி ராயுடுவின் இடத்தை அவர், நிரப்பக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் தொடக்க ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சற்று சந்தேகமே.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள தோனி, கடந்த முறை காயத்துடன் விளையாடிய போதே இறுதிக்கட்ட ஓவர்களை குறிவைத்து களமிறங்கி சிக்ஸர்களை பறக்கவிட்டார். இம்முறை அவர், முழு உடற்தகுதியுடன் இருப்பதால் பழைய பாணியிலேயே ஆட்டத்தை அவர், வெளிப்படுத்தக்கூடும். வலுவான பேட்டிங் வரிசை, அதிகமான ஆல்ரவுண்டர்கள், ஆடுகளத்துக்கு தகுந்தவாறான வேகப்பந்து வீச்சாளர்கள் என சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் 6ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது CSK அணி.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வழக்கம் போன்று பேட்டிங்கில் அதிரடி பட்டாளங்களுடன் களமிறங்குகிறது. 16 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்ல போராடி வரும் பெங்களூரு அணியானது இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் அணிக்கு வலுசேர்க்கக்கூடும். நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் களத்துக்கு திரும்பி உள்ளார். எப்போது ஓட்டங்கள் வேட்டையாடும் அவரிடம் இருந்து இம்முறையும் ஓட்ட குவிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இவர்களுடன் துடுப்பாட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், வில்ஜேக்ஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், அல்ஸாரி ஜோசப், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி ஆகியோர் பலம்சேர்க்கக்கூடும். வலுவான சுழற்பந்து வீச்சு இல்லாதது சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

மேக்ஸ்வெல்லை சுழற்பந்து வீச்சில் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் பெங்களூரு அணி முனைப்பு காட்டக்கூடும். கரண் சர்மா, ஹிமான்ஸு சர்மா, மயங்க் தாகர் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக அணியில் இருந்தாலும் இவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை.

சேப்பாக்கத்தில் RCB எப்படி?

ஐபிஎல் தொடரில் CSK- RCB அணிகள் இதுவரை 31 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் CSK 20 ஆட்டங்களிலும், RCB 10 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக RCB 8 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு RCB, சேப்பாக்கத்தில் வெற்றி பெறவில்லை. அறிமுக சீசனான அந்த தொடரில் RCB 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK வை வென்றிருந்தது.

RCB அணி விவரம்: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பண்டாகே, மயங்க் தாகர், விஜயகுமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.

CSK அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ரச்சின் ரவீந்திரா, அஜய் மண்டல், அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்செல், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர், ஆரவெல்லி அவனிஷ் ராவ், தீபக் சாஹர், மஹீஷ் தீக்சனா, மதிஷா பதிரனா, மிட்செல் சாண்ட்னர், முஸ்டாபிஷூர் ரஹ்மான், முகேஷ் சவுத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷேக் ரஷீத், சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே.

2ஆவது போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை: CSKஅணி தனது 2ஆவது ஆட்டத்தில் வரும் 26ஆம் திகதி சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்துக்கான ஒன்லைன் டிக்கெட் விற்பனை நாளை (23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்களை PAYTM மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக இரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பஸ்களில் இலவச பயணம்:  IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பங்கேற்கும் ஆட்டங்களின் நாட்களில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருப்பவர்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பிருந்தே பெருநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக CSK அணி நிர்வாகம் பெருநகர போக்குவரத்துக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

RCBக்கு நெருக்கடி: IPL தொடரில் 16 ஆண்டுகளாக பட்டம் வெல்ல முடியாமல் RCB அணி தவித்து வருகிறது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கில் கடந்த வாரம் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் IPL தொடரில் RCB அணி மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: IPL தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராப் நடனமாட உள்ளனர். முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் சுமார் 15 நிமிடம் நடைபெறும் நிகழ்ச்சியில் சுவீடனின் புகழ்பெற்ற DJ அக்ஸ்வெல் இரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT