Thursday, May 9, 2024
Home » இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி வரவேற்பு

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி வரவேற்பு

by Rizwan Segu Mohideen
March 20, 2024 4:38 pm 0 comment

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) முறையான அறிவிப்பை வரவேற்றுள்ள வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி (CoHNA), துன்புறுத்தப்படும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறுபான்மையின மதத்தினருக்கு கிடைத்த ‘பெரிய வெற்றி’ என்று கூறியுள்ளது.

“பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினரின் மனித உரிமைகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்தியா இறுதியாக 2019 இல் இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அறிவித்தது ” என வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த விதிகள் எந்த நம்பிக்கையும் கொண்ட இந்திய குடிமக்களைப் பாதிக்காது என்றும், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினர் தொடர்பில் இந்திய குடியுரிமை செயல்முறை விரைவாகக் கவனம் செலுத்தும் என்றும் இந்த அமைப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

” இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போதுள்ள இந்திய குடிமக்கள் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.தீவிர மற்றும் முறையான துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சுமார் 31,000 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை செயல்முறையை விரைவாக செயற்படுத்தப்படும் எனவும்” வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

” பாகிஸ்தானில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, “திருமணம்” செய்யப்படும் குடும்பங்கள் வெளியேறி வருகின்றன. ” என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

” இந்தச் சட்டம் தொடர்பில் அமெரிக்காவிலும் கனடாவிலும் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான தவறான தகவல் பரவுவதைத் தடுக்க, அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்பவர்கள் தங்களுக்கும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் அறிவூட்ட வேண்டும் எனவும் இந்த அமைப்பு கோரியுள்ளது.

குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை உள்துறை அமைச்சு அண்மையில் அறிவித்தது.புதிய சட்டத் திருத்தத்தின் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் முற்றிலும் ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்க முடியும்.

நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் குடியுரிமைச் சட்ட விதிகள்,பங்களாதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பேர்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட, துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு இந்திய குடியுரிமையைப் பெற வழிவகுக்கிறது.

2019 டிசம்பரில் குடியுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் வெடித்தன.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகி வரும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அதனுடன் தொடர்புடைய விதிகளை உருவாக்குவது அவசியமாகும்.குடியுரிமைச் சட்டம் நாட்டின் சட்டமாக இருப்பதால் அதைச் செயல்படுத்துவதை நிறுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சின் ஆண்டறிக்கையின்படி, 2021ஏப்ரல் 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 1,414 நபர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற ஒன்பது மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT