Monday, May 20, 2024
Home » சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அறுகம்பையை தூய்மைப்படுத்தும் பணி

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் அறுகம்பையை தூய்மைப்படுத்தும் பணி

by mahesh
March 20, 2024 5:04 pm 0 comment

கிழக்கிலே உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சுவர்க்கபூமியாக விளங்கும் அறுகம்பை கடற்கரைப் பிரதேசத்தில் முன்னர் பெய்த பெருமழை காரணமாக குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் கடற்கரைப் பிரதேசம் மாசடைந்து காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் பெருமளவில் கடல் நீரலைச்சறுக்கல் விளையாட்டுக்காக வருகை தரும் இப்பிரதேசம் குப்பைகளாலும் கழிவுகளாலும் நிரம்பி அசுத்தமாகக் காணப்பட்டது.

அறுகம்பை பிரதேசத்தை வெளிநாட்டு உல்லாசப்பயணிகளைக் கவரும் ஓர் அழகிய பிரதேசமாக வைத்திருக்கும் பணியில் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ அமைப்பினர் கடந்த பல ஆண்டுகாலமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வமைப்பில் எண்பதுக்கு மேற்பட்ட துடிப்புமிகு இளைஞர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் சமூகநலப் பணிகளிலும், குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளிலும் மிகக்கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த அமைப்பினர் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும் விழிப்புணர்வு செயலமர்வுகளையும் நடத்திவருகின்றனர்.

அவ்வப்போது தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இந்தப் பணியை மேற்கொண்டுவரும் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ அமைப்பினர் இப்பணியை அண்மையில் மேற்கொண்டனர். கரையோர பாதுகாப்பு பேணல் திணைக்களம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பே விஸ்டா ஹோட்டல், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ அமைப்பின் தலைவர் ஏ.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அறுகம்பை கடற்கரை சுத்திகரிப்பு பணியில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் எம்.முஷார்ரப் கலந்து கொண்டு சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டதோடு கிளீன் ஸ்ரீ லங்கா அமைப்பினரின் இந்த மகத்தான சேவையை பராட்டினார்.

இந்தப் பணி தொடர வேண்டும் என்றும் இதற்கு உதவ ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உல்லாசப்பயணிகளைக் கவர, அவர்களின் வருகையை அதிகரிக்க எவ்வாறு நாம் எமது ஒத்துழைப்பை நல்க முடியுமோ அவ்வாறெல்லாம் நாம் உதவி வழங்க வேண்டும் என்றார் அவர்.

அறுகம்பைக்கு தமது விடுமுறையக் களிக்க வரும் வெளிநாட்டவர்கள் கூட இந்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியாக நடந்த இந்த சுத்திகரிப்பு பணியின் மூலம் சுமார் எண்ணூறு கிலோகிராம் பிளாஸ்டிக் போத்தல்களும், ஏனைய பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டன. மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு கிலோ கிராம் கழிவுகள் சேர்க்கப்பட்டதாகவும், இவை மீள்சுழற்சிக்காக உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைப்பின் செயலாளர் எச்.எம்.இமாம் தெரிவித்தார்.

இந்தப் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் 
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT