Thursday, May 9, 2024
Home » இலத்திரனியல் வாகன இறக்குமதி கால எல்லை ஓகஸ்ட் 31 வரை நீடிப்பு

இலத்திரனியல் வாகன இறக்குமதி கால எல்லை ஓகஸ்ட் 31 வரை நீடிப்பு

- அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகாரம்

by Rizwan Segu Mohideen
March 20, 2024 5:28 pm 0 comment

– அனுமதிப்பத்திரத்தின் தவறான பயன்பாடு தொடர்பில் கவலை

இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யத் தகுதியான நபர்களுக்கான கால எல்லை 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2370/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடப்பட்டு கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதி நீண்ட ஆலோசனையின் பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று (19) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா கூடியபோதே இந்த ஒழுங்குவிதி கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதியின் கீழ் குறித்த எச்.எஸ் குறியீட்டில் இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யத் தகுதியான நபர்களுக்கான கால எல்லை 2023 டிசம்பர் 31ஆம் திகதியிலிருந்து 2024 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நீடிக்கப்படுகின்றது.

ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டிருப்பது போன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த அனுமதிப்பத்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பில் குழு கவலை வெளியிட்டது. அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்குப் பதிலாக வாகன இறக்குமதியாளர்கள் இதனைப் பயன்படுத்துவது தொடர்பிலும் குழு கேள்வியெழுப்பியது. அங்கீகரிக்கப்பட்ட 12 வசதி வழங்குனர்களின் தெரிவு குறித்து குழுவின் உறுப்பினர் கேள்வியெழுப்பினர். விசேட பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் வசதி வழங்குனர்கள் தெரிவுசெய்யப்படுவர் என அமைச்சின் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்தத் திட்டம் குறித்த 12 நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் யார் வேண்டும் என்றாலும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், சுங்க அதிகாரிகள் தங்கள் விசாரணையின் கண்டுபிடிப்புகளை முன்வைத்ததுடன், இது 15% விலை வேறுபாட்டை வெளிப்படுத்தியது. இந்த வசதிகள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் குறைவாக மதிப்பிடப்பட்டதாகத் தெரிகிறது. இச்செயல்முறை குறித்து குழு கவலையை வெளிப்படுத்தியதுடன், சாத்தியமான மோசடி மற்றும் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க 15% இழப்பு ஆகியவற்றையும் எடுத்துக்காட்டியது.

மதுவரி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சொகுசு வரி போன்றவை குறித்த நிதி அமைச்சின் விளக்கத்துக்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள், சுங்கச் சட்டத்தின் 51வது பிரிவில் காணப்படும் வரையறைகளைச் சுட்டிக்காட்டினர். இந்தப் பிரிவு குறைந்த விலைப்பட்டியல் சிக்கலைத் தீர்ப்பதற்கான அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது என்றனர். முக்கியமான அரசாங்க வருவாயை மேலும் இழப்பதைத் தடுக்க அவசரத் திருத்தம் தேவைப்படும் என்றும் குழு வலியுறுத்தியது. சுங்கக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், இதன் மூலம் 51வது பிரிவும் திருத்தப்படும் என உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், நிமல் லான்சா, ஜோன்டன் பெர்னாந்து, மஹிந்தானந்த அலுத்கமகே, மயந்த திசாநாயக, சந்திம வீரக்கொடி, ஹர்ஷன ராஜகருணா, எம்.டபிள்யூ.டி சஹான் பிரதீப் விதான, இசுரு தொடங்கொட, பிரேம்நாத்.சி தொலவத்தை ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT