Friday, May 31, 2024
Home » மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட “A” மற்றும் “B” வலயங்களில் துரித அபிவிருத்தி

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட “A” மற்றும் “B” வலயங்களில் துரித அபிவிருத்தி

by Prashahini
March 20, 2024 7:52 pm 0 comment

நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை பெற முடியாமல் போயிருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் 82ஆவது ஜனன தின நிகழ்வில் இன்று (20) கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள காமினி திசாநாயக்கவின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காமினி திசாநாயக்கவின் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அன்னாரின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாகும் என்றும் கூறினார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காமினி திசாநாயக்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

சர்வமத வழிபாடுகளின் பின்னர் ஜனன தின நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், மல்வத்து பீடத்தின் களுத்துறை மாவட்ட பிரதம சங்க நாயக்கர், வாதுவ மொல்லிகொட தேகம்பத மகா விகாரை விகாராதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் தலைவருமான போபிட்டிய தம்மிஸ்ஸர நாயக்க தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.

நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ வீரர்கள், 1994 ஒக்டோபர் 23 ஆம் திகதி காமினி திசாநாயக்கவுடன் தொடலங்க குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் தேசிய வீரர்கள், காமினி திசாநாயக்க மன்றத்தின் ஸ்தாபகர் மறைந்த சட்டத்தரணி ஸ்ரீமா திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் காமினி திசாநாயக்க மன்றத்தின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க வரவேற்புரை ஆற்றினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காமினி திஸாநாயக்கவின் பாத்திரம் ஒரு அரசியல் முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார். மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் தான் அவர் பிரபலமடைந்ததாக சுட்டிக்காட்டிய கரு ஜயசூரிய, அவரின் சரியான முகாமைத்துவம் இலங்கையை துரிதமாக அபிவிருத்தி செய்ய உதவியது என்றும் குறிப்பிட்டார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநரும் காமினி திஸாநாயக்க மன்றத்தின் தலைவருமான நவின் திஸாநாயக்க உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார முறை நாட்டுக்கு ஏற்றது என தனது தந்தை எப்போதும் கூறி வந்ததாக தெரிவித்தார். எதிர்காலத்திலும் நடுநிலையான வலதுசாரி இயக்கம் உருவாகும் என நம்புவதாக தெரிவித்த அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவர் மக்களால் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ,இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, வடிவேல் சுரேஷ், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாச, ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் மற்றும் காமினி திசாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT