Saturday, April 27, 2024
Home » நாட்டிற்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டிற்கு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்

by Prashahini
March 19, 2024 11:30 am 0 comment

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
– சிறுபோகத்திற்கான நெல் விவசாயிகளுக்கு உர மானியம்

நுகர்வோருக்கு நியாய விலையில் முட்டைகளை வழங்குவதற்குத் தேவையான முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுர் சந்தையில் முட்டை விலையை நிலையாகப் பேணுவதற்காக 2024.04.30 ஆம் திகதி வரை தேவையான முட்டை இறக்குமதி செய்வதற்காக 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போது 18 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், விழாக் காலங்களின் தேவைகளுக்கு மேலும் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட வேண்டுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தால் விதந்துரைக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனத்திடமிருந்து விலைமனுக் கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஹயிட்ரொபுளோரோ காபன் நுகர்வு மற்றும் உற்பத்திகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான மொன்ரியல் உடன்படிக்கையின் கிகாலி திருத்தத்திற்கமைய தேசிய பொறுப்புக்களை நிறைவேற்றல்

இலங்கை ஹயிட்ரோஃபுளோரோ காபன் நுகர்வு மற்றும் உற்பத்திகளைப் படிப்படியாக் குறைப்பதற்கான மொன்ரியல் உடன்படிக்கையின் கிகாலி திருத்தத்தை 2018 ஆம் ஆண்டில் ஏற்று அங்கீகரித்துள்ளது. அதற்கிணங்க, 2024.01.01 ஆம் திகதி தொடக்கம் ஹயிட்ரொபுளோரோ காபன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திற்கான நுகர்வை படிப்படியாகக் குறைப்பதற்கு இலங்கைக்கு கடப்பாடுண்டு. குறித்த சட்டக் கடப்பாடுகளுக்கு இணங்க மொன்றியல் உடன்படிக்கையின் கிகாலி திருத்தத்தின் தேசிய பொறுப்புக்களுக்கமைய ஹயிட்ரோஃபுளோரோ காபன் தூய இரசாயனப் பொருட்கள் மற்றும் குறித்த இரசாயனப் பொருட்கள் அடங்கிய கலவைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் மற்றும் நுகர்வை படிப்படியாகக் குறைப்பதற்கும், ஹயிட்ரோஃபுளோரோ காபன் பயன்படுத்தப்படும் விவசாய, மீன்பிடி, சுகாதாரம், சுற்றுலா, போக்குவரத்து, கைத்தொழில், வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் போன்ற தொழிற்றுறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஹயிட்ரோஃபுளோரோ காபன் இறக்குமதி வர்த்தகத்தை வருடாந்த இறக்குமதி ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஹங்கேரி அரசுக்கும் இடையில் விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவித்து இருதரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்கும், வலுப்படுத்துவதற்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஹங்கேரி அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் ழுழுமையான உரிமையுடன் கூடிய விடுவிப்பு கையளிப்புப் பத்திரத்தை வழங்குவதற்கு குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஒரு மில்லியன் இளைய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இளைய தொழில்முயற்சியாளர்கள் பற்றிய தகவல்கள்களைத் திரட்டுவதற்குரிய வேலைத்திட்டம்

தற்போது இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு அவர்கள் அனுபவிக்கின்ற காணிகளுக்காக கையளிப்புப் பத்திரங்கள்/வழங்கல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் குறித்த வழங்கல் பத்திரதாரர்கள் மற்றும் கையளிப்புப் பத்திரதாரர்களுக்கு அரச காணிகளில் அறுதி உரித்தை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் படையணியை ஈடுபடுத்தி அந்தந்த கிராம அலுவர்களின் ஒத்துழைப்புடன் சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் காணப்படுகின்ற பொறிமுறையைப் பயன்படுத்தி தேவையான தகவல்களை சேகரித்து ‘உரித்து’ வேலைத்திட்டம் மற்றும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதமாக மேற்கொள்வதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறாக்கி சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவுதல்

இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25% குறித்த சுத்திகரிப்பு நிலையத்தால் விநியோகிக்கப்படுகின்றது. இச்சுத்திகரிப்பு நிலையத்தை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி, மேலும் 25 வருடங்கள் பயன்படுத்துவதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான முதலீடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் துறையினர் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து வேறானதொரு அரச தொழில் முயற்சியாண்மையாக நிறுவுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 1973 ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மன்ற சட்டத்தைத் திருத்தம் செய்தல்

1973 ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இலங்கை மன்றக் கல்லூரி, பேண்தகு அபிவிருத்தி, சமூக ஒருமைப்பாடு, சமூக பொருளாதார அபிவிருத்தி, நல்லாட்சி, தொழில்முயற்சியாண்மை மற்றும் ஜனநாயகம் பற்றிய விடயஞ்சார் பயிற்சிகள் மற்றும் கற்கைகளுக்கான மத்திய நிலையமாக இயங்குகின்றது. தற்போது இலங்கை மன்றக் கல்லூரியால் சான்றிதழ் பாடநெறி தொடக்கம் உயர் டிப்ளோமா பாடநெறி வரை பல்வேறு பாடநெறிகள் நடாத்தப்பட்டு வருவதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அதிகாரங்கள் மற்றும் பணிப்பொறுப்புக்களைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை மன்ற சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரித்தல்

2023 ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும், ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு தற்போது காணப்படுகின்ற தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து அரசியற் கட்சிகளிள் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் குறித்த தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கும் குறித்த குழுவுக்கு கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானவர்கள் அதற்கான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பிரதமர் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு தேவையான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஆரம்பநிலை நீதிமன்ற வழக்குக் கோவை சட்டத்திற்கான திருத்தம்

ஆரம்பநிலை நீதிமன்றமானது காணியொன்றின் பிணக்கின் போது குடியியல் நீதிமன்றத்தின் பணியாக அமைகின்ற உரித்து அல்லது கைக்கொள்ளல் உரிமையை தீர்மானித்தல் தொடர்பான இறுதித் தீர்ப்பை வழங்கும் வரைக்கும் தடுப்பு அல்லது இற்றைப்படுத்தும் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ளப்படும். உரித்தைத் தீர்மானிக்கும் போது மாவட்ட நீதிமன்றத்தால் இறுதித் தீர்மானம் வழங்கும் வரைக்கும் ஆரம்பநிலை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதால், மாவட்ட நீதிமன்றத் தீரப்பு இரண்டு மேன்முறையீடுகளுக்கு உட்படுவதுடன், அதனால் தவிர்க்க முடியாத தாமதங்கள் இடம்பெறுவதுடன், குறித்த நிலைமையின் பிரகாரம் ஏதேனுமொரு காணிக்கு சட்டவிரோமாக உட்பிரவேசித்தவருக்கு அல்லது சட்டவிரோத வதிவிடதாரருக்குக் கூட குறிப்பிட்டளவு காலம் குறித்த காணியை கைக்கொள்வதற்கான இயலுமை கிடைக்கும்.

அதனால் 1980 ஆண்டின் 49 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1979 ஆண்டின் 44 ஆம் இலக்க ஆரம்பநிலை நீதிமன்ற வழக்குக் கோவை சட்டத்தின் 66 ஆம் பிரிவின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை மேலும் பயனுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ஆரம்பநிலை நீதிமன்ற வழக்குக் கோவை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. குடியியல் வழக்குக் கோவை (திருத்தம்) சட்டமூலத்தை (அழைப்பாணை வெளியிடலும் கையளித்தலும்)

பொதிகள் சேவைகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் அழைப்பாணையை கையளிக்கின்ற முறைகளையும் பொதுவான சேவைகளாக உட்சேர்ப்பதன் மூலம் குடியியல் வழக்கு நடவடிக்கைகளுக்குரிய அழைப்பாணைகளை வெளியிடல் மற்றும் கையளித்தல் நடவடிக்கை முறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் மேலும் சில திருத்தங்களையும் உள்வாங்கி குடியியல் வழக்குக் கோவையைத் திருத்தம் செய்வதற்காக 2021.10.11 மற்றும் 2023.07.31 ஆகிய தினங்களில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. அமைச்சுக்களுக்கிடையிலான சுற்றுலாத்துறை தொடர்பான குழுவொன்றை நியமித்தல்

இலங்கையில் சுற்றுலாத்துறையின் சமகால மறுமலர்ச்சியானது நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்தியில் முக்கியமான பங்குவகிக்கின்றமை அடையாளங் காணப்பட்டுள்ளமையால், குறித்த துறையை மேம்படுத்துவதற்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்தல் உள்ளிட்ட பல படிமுறைகள் 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் பல்வித இயல்புகள் மற்றும் ஏற்புடைய பல்வேறு சொத்துக்கள், சட்டம் மற்றும் பொறுப்புக்கள் பல அரச நிறுவனங்களிடையே பகிர்ந்து செல்வதால், எதிர்பார்க்கப்படும் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஏற்புடைய நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்களைப் பேணுதல் அவசியமாகும். அதற்காக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஏற்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சுக்களுக்கிடையிலான சுற்றுலாத்துறை தொடர்பான குழுவொன்றை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2024 சிறுபோகத்திற்கான நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கல்

2024 சிறுபோகச் நெற்செய்கைக்கான யூரியா, TSP மற்றும் MOP போன்ற இரசாயன உரங்கள் வரிசைக்கிரமமாக 110,298.1 மெற்றிக்தொன்,27,711.1 மெற்றிக்தொன் மற்றும் 33,412.4 மெற்றிக்தொன் தேவையென தேசிய உரச் செயலகம் மதிப்பீடு செய்துள்ளது. அதற்கிணங்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.

• 2024 சிறுபோகச் செய்கைக்காக வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி மூலம் இறக்குமதி செய்து தனியார் துறையினருடன் போட்டித்தன்மையாக விவசாயிகளுக்கு சலுகை விலையில் உர விற்பனை செய்தல்
• 2024 சிறுபோகச் செய்கையில் நெற்செய்கைக்காக ஒரு விவசாயிக்கு பயிரிடப்படுகின்ற உயர்ந்தபட்ச 02 ஹெக்ரெயார்களுக்கு ஒரு ஹெக்ரெயாருக்கு 15,000/- ரூபா வீதம் மானியமாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் வழங்கல்
• நிர்ணயிக்கப்பட்ட மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடல்

12. கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தல்

கடந்த சில வருடங்களாக நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் கிராமிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பலவற்றை இடைநடுவில் நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆனாலும், குறித்த கருத்திட்டங்களுக்கு அரசு இதுவரை குறிப்பிடத்தக்களவு தொகையை முதலிட்டு இருப்பதால், அககருத்திட்டங்களைத் துரிதமாகப் பூர்த்தி செய்து அவற்றிலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை கிராமிய மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்திக் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு செல்வதற்குப் போதுமானதாக இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய. கிராமிய மட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக 2,000 மில்லியன் நிதியொதுக்கீட்டை பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கும், ஜனாதிபதி செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விசேட அபிவிருத்தித் தொடக்கமுயற்சிகளுக்கான ஒதுக்கீட்டை மேலும் 1,000 மில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இந்திய அரசின் நிதியனுசரணையின் கீழ் வணக்கத்தலங்களுக்கான கூரைமீது பொருத்தப்படும் சூரிய மின்சக்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய பெறுகையை வழங்கல்

இந்திய அரச வங்கி மூலம் வழங்கப்படும் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் கீழ் 17 மில்லியன் அமெரிக்க டொலர் எல்லையின் கீழ் வணக்கத்தலங்களில் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி தொகுதியை அமைப்பதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கான விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க 06 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகள் தொடர்பாக பெறுகை மேன்முறையீட்டு சபை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கூரைமீது பொருத்தப்படும் சூரிய மின்சக்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பெறுகையை 17 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்த விலையில் M/s Premier Energies Ltd இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்திப் பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்திற்காக 10 கிலோக்கிராம் நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு படிமுறைகளை மேற்கொண்டுள்ளது. அடையாளங் காணப்பட்ட குறைந்த வருமானங் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இவ்வாண்டிலும் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோக்கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT