Wednesday, May 8, 2024
Home » ‘விழி’ நூல் வெளியீடு இன்று

‘விழி’ நூல் வெளியீடு இன்று

by damith
March 18, 2024 1:14 am 0 comment

தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகள் காவேரி கலாமன்றத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியல் நடத்திய தொழுநோய் விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் கட்டுரைகள் அடங்கிய ‘விழி’ கட்டுரை நூல் தொகுப்பு இன்று தினகரனின் 92ஆவது ஆண்டுவிழாவில் வெளியிடப்படுகின்றது.

****

ஆசியுரை

கிளிநொச்சி காவேரிக் கலா மன்றம் தினகரன் வாரமஞ்சரி /தினகரன் நாளிதழ் பத்திரிகை ஆகியன இணைந்து “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு இணங்க இலங்கையில் தொழுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய கட்டுரைகளின் பிரதிகளை நூலாக்கி தினகரன் பத்திரிகையின் 92 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வெளிக்கொணர்வதில் நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.

முழுமையான தொழு நோய் அற்ற நாட்டை உருவாக்குவதற்கான முயற்சியில் கடந்த 20 வருடங்களாக காவேரி கால மன்றம் செயற்பட்டு வருகின்றது. இதன் நடவடிக்கைகள் தனித்துவம் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அந்த வகையிலே நாட்டு மக்களிடையே தொழுநோய் குறித்த விளைவுகளை விழிப்புணர்வூட்டுவதற்காக எமது தினகரன் வாரமஞ்சரி/ தினகரன் நாளிதழ் பத்திரிகையுடன் இவ்வமைப்பு இணைந்து நாடளாவிய ரீதியில் தொழுநோய் தொடர்பான கட்டுரைப் போட்டியை மிக முக்கியமான விடயமாகக் கருத்திற் கொண்டு நடத்தியது. இதில் 100 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து இன்றைய தினத்தில் நூலாக வெளிக்கொணரப்படுவதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். இந்நூல் தொழுநோய் குறித்த சரியான சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு பயனுள்ளதாக அமையும் என்பது திண்ணமாகும். மேலும் இப்போட்டியில் பங்கேற்று பரிசில்களைப் பெறும் கட்டுரையாளர்கள் அனைவருக்கும் எமது நல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓர் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை மனிதன் வாழ்வதற்கும் இக்க ட்டுரைத் தொகுதி ஓர் உறுதியான ஊடுகடத்தியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே இத்தகைய நிகழ்வினை எம்மோடு இணைந்து நடத்துவதற்கு முன்வந்த காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் அருட் தந்தை வண பிதா யோசுவா அடிகளார் நல்கிய ஒத்துழைப்புக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதற்கு இணைப்பதிகாரியாக செயற்பட்ட இந்நூலின் ஆசிரியரும் எமது சிரேஷ்ட ஊடவியலாளருமான இக்பால் அலி மற்றும் எமது ஆசிரியர் பீடத்தின் முன்னாள் பிரதம உதவி ஆசிரியர் எஸ். ஸ்ரீகாந்த் ஆகிய இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நூல் எமது நாட்டில் தொழு நோயை இல்லாதொழிப்பதற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் அதேவேளையில் இந்நோய் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியம். வந்தபின் நொந்து போவதை விட வருமுன் காப்பதே சிறந்தது ஆகும்.

தே. செந்தில்வேலவர்.
பிரதம ஆசிரியர் தினகரன்

****

வாழ்த்துரை

நண்பர் இக்பால் அலி கவேரி கலா மன்றத்துடன் இணைந்து தொழுநோய் கட்டுப்படுத்தலுக்கான ஊடகத்துறையின் விழிப்புணர்வு குறித்த பல ஒன்று கூடல்கள் நடத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடலில் தொழுநோய் கட்டுப்படுத்தலுக்கான சமூக விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை தினகரன் பத்திரிகை ஊடாக செய்வதற்கான பரிந்துரையை அவர் முன்வைத்து அதற்காக தொடர்ச்சியாக பணியாற்றியதன் விளைவாக தற்போது ‘விழி” என்ற இந்த மக்கள் விழிப்புணர்வு அனுபவ கட்டுரைகள் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கின்றது.

சமூக மாற்றத்துக்கான எந்தப் பணியிலும் ஆரோக்கியம் குறித்த முன்னெடுப்புக்கள் முதன்மை இடம் பிடிக்கின்றன. ஆரோக்கியம் குறித்து சிந்திக்காத ஒர் சமூகத்தில் அரசியல், சமூக, பொருளாதார மேன்மைகள் குறித்து சிந்திக்க முடியாது. குறிப்பாக தொற்றும்நோய்கள் குறித்த விடயங்களில் அதிகபட்ச விழிப்புணர்வு அவசியமானது என்பதை இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் பேர் இந்நோய் தாக்கத்துக்கு உள்ளாவது எடுத்துக் காட்டுகின்றது.

காவேரி கலா மன்றம் கடந்த இருபத்தாறு வருடங்களாக தொழுநோய் கட்டுப்படுத்தலுக்கும் தொழுநோயினால் பாதிக்கப்படுகிறவர்கள் நல்வாழ்வு மற்றும் தொழுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆராச்சி, மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த தொழுநோய் பணிகளுக்கான ஆதரவு குறித்த பணிகளிலும் ஈடுபடுகின்றது. தொழுநோயாளர் மறுவாழ்வு சங்க உருவாக்கமும் அதற்கூடாக அதன் அங்கத்தவர்களை சமூகத்தில் தொழுநோய் கட்டுப்படுத்தலுக்கான கருவியாக பாவிப்பது குறித்த பணிகளை செய்து வருகிறது. இந்தப் பணிகளில் ஒர் அங்கமாக சமூக விழிப்புணர்வுக்கான கட்டுரை போட்டியை தினகரன் பத்திரிகை நடத்துவதற்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்திட்டத்துக்கான ஊடகங்களின் பங்களிப்பு குறித்த வரலாற்றில் இக்பால் அலியின் முயற்சியும் தினகரன் ஆசிரியர் தே.செந்தில்வேலவரின் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.

இந்த கட்டுரை போட்டியில் பங்குபற்றிய அனைவரையும் வாழ்த்துவதோடு வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டையும் தெரிவிப்பதோடு இதில் பங்குகொண்ட யாவரும் இலங்கையிலிருந்து தொழுநோயை இல்லாதொழிக்க தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

வண. T.S. யோசுவா
இயக்குனர்
காவேரி கலா மன்றம்

****

பதிப்புரை

இந்நாட்டின் தொழுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் கிளிநொச்சி காவேரிக் காலமன்றமும் அச்சு ஊடகத்துறையில் 92ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தினகரன் வாரமஞ்சரி /தினகரன் நாளிதழ் பத்திரிகையும் இணைந்து தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து “விழி” எனும் பெயரில் சுகாதார சேவைக்கு அத்தியாவசியமான இந்நூல் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சுகாதார உலகில் நாம் தொழுநோய் என்றால் அச்சமுற்று வாழ்ந்திருந்த நிலை மாறி அவற்றிலிருந்து மக்கள் பாதுகாப்புடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அறிவுபூர்வமான ஆலோசனைகளையும் நோயுற்றவர்கள் சமூகத்தோடு சேர்ந்து சரி சமனாக எல்லா மனிதர்களுடம் அடிக்கடி சந்தித்து உறவாடி சாதனைகளையெல்லாம் நிலை நாட்டலாம் என்ற அபூர்வமானதும் மகிழ்ச்சிகரமானதுமான செய்திகளைச் சொல்லக் கூடிய பிரமிக்கத்தக்க சிறந்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக பொது மக்களும் சிறார்களும் தொழு நோய் குறித்த முழுமையான தகவல்களை படித்து அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் தொழு நோய் பற்றி அறிந்து கொள்வதற்கும் அது பற்றிச் சிந்தித்து விழிப்புணர்வுடன் செயலாற்றுவதற்கும் இந்நூல் இன்றியமையாததாகும்.

இந்நோய் தொடர்பில் ஆரம்ப காலகட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு காணப்படாமையினால் இந்நாட்டின் சுகாதார நிலை திருப்திகரமானதாகக் காணப்படவில்லை. எனினும் காவேரிக் கலா மன்றத்தின் இயக்குனர் அருட்தந்தை வணபிதா கவிஞர் ரீ. எஸ் யோசுவா தொழு நோயைக் கட்டுப்படுத்துவதில் பல மகத்தான வேலைத் திட்டங்களை துணிந்து மேற்கொண்டார். அவை அவருக்கு பெருமளவில் சுகாதார துறையில் வெற்றியை அளித்தன. அவருடைய வழிகாட்டலுடன் அந்நிறுவனம் தொழு நோயாளர்களுக்காக நாடளாவிய ரீதியில் வினைத்திறனான செயற் திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கிறது என்பதற்கான வெளிப்படையான அடையாளம்தான் தினகரன் பத்திரிகையுடன் இணைந்து வெளியிடுகின்ற இந்நூலாகும்.

நாட்டு மக்களிடையே தொழு நோய் தொடர்பில் காணப்பட்ட மிகப் பயங்கரமான அச்ச நிலை பெருமளவில் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் அதற்கு எவ்வகையிலான சிகிச்சைகளையும் அறிவுரை களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வூட்டல்களை கிராமம் கிராமமாகச் சென்று காவேரிக் கலா மன்றம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நூலிலுள்ள தொழு நோய் கட்டுரைகள் யாவும் வெறும் எழுத்துக்களோ வசனங்களோ அல்ல. பொது மக்கள் மத்தியிலும் பாடசாலை பிள்ளைகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சிறந்த கட்டுரைகளே இந்நூலில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. தினகரன் பத்திரிகையில் காவேரிக் கலா மன்றம் தொழு நோய் தொடர்பில் முன்னெடுக்கும் செயற் திட்டங்களை பத்தி எழுத்துக்களாக எழுதுதவற்கு தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் களம் அமைத்துத் தந்தார்.

அதேவேளையில் அதனைத் தொடர்ந்து காவேரிக் கலா மன்றம் தினகரனுடன் இணைந்து போட்டியினை நடத்த முன்வந்ததுடன் இரு தரப்பினரும் சேர்ந்து போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுடைய கட்டுரைகளைத் தொகுத்து இப்படியானதொரு நூலுக்கு என்னையே பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிக்கொணர்வதற்கு அங்கீகாரம் வழங்கியமைக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்பால் அலி
சிரேஷ்ட ஊடகவியலாளர்

****

இன்றைய விழாவில் பரிசு பெறுவோர்

தினகரன் நாளிதழ் தினகரன் வாரமஞ்சரி ஆகியன இணைந்து நடத்திய தொழுநோய் தொடர்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசுகள் பெற்ற கட்டுரைகளைத் தெரிவு செய்து “விழி” எனும் பெயரில் இன்றைய தினகரனின் 92 ஆவது ஆண்டு தின விழாவில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

பாடசாலைப் பிள்ளைகள் பொது மக்கள் மத்தியில் தொழு நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் வெற்றி பெற்ற கட்டுரையாளர்களின் கட்டுரைத் தொகுப்புத் தான் இந்நூல். இது எமது நாட்டு மக்களின் ஆரோக்கியமான சுகாதார சுகவாழ்வுக்கான ஒரு முக்கியமான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்காவே இந்த “விழி” எனும் கட்டுரைத் தொகுதியினை உங்கள் முன் கொண்டு வந்திருக்கின்றோம். இந்நூலின் பதிப்பாசிரியர் இக்பால் அலி ஆவார்.

நூலுக்கான ஆசியுரையினை தினகரன் நாளிதழ், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செல்தில்வேலவரும், வாழ்த்துரையினை கிளிநொச்சி காவேரிக் கலா மன்றத்தின் இயக்குனர் வண பிதா எஸ் யோசுவா அடிகளாரும் எழுதியுள்ளனர். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரைப் போட்டி தேசிய மட்டத்தில் நடத்தப்பட்டது. ரூபா 50000.00 பணப் பரிசினையும் சான்றிதழையும் யாழ். பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி ஜுட் அல்போன்சஸ் மேவிஸ் ஜின்யா பெற்றுக் கொள்கின்றார். ரூபா 25000.00 என்ற இரண்டாம் பணப் பரிசிலையும் சான்தழையும் வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவன் செல்வன் எஸ்.அஸ்வின் பெற்றுக் கொள்கின்றார்.

இப்போட்டியில் பங்குபற்றிய 10 பேருக்கு ஆறுதல் பரிசில்களும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும். என். ஜெசிந்தன் கொக்குவில் யாழ்ப்பாணம், கே. புஸ்பசாரா வட்டுக் கோட்டை யாழ்ப்பாணம், எம். எம். சப்னா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், வவுனியா, எஸ். மேரி நிரோஜனா, தாதியர் மாணவி, தாதியர் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம், எஸ் மேனுஜன், தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா. முஹமட் தஸ்லிம் அப்துர் ரஹ்மான் காத்தான்குடி, பி. புஸ்பராஜு அளுத்மாவத்தை. கொழும்பு. எஸ். அனுஜன், பொது சுகாதார பரிசோதகர். எஸ். கேதாஜினி மூன்று முறிப்பு, வவுனியா, எஸ். சங்கவி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய பத்துப் பேர் ஆறுதல் பரிசில்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT