Wednesday, May 8, 2024
Home » தமிழ்பேசும் மக்கள் உள்ளத்தில் தாயகப்பற்றை வளர்ப்பதற்கு அடித்தளமிட்ட பத்திரிகை தினகரன்

தமிழ்பேசும் மக்கள் உள்ளத்தில் தாயகப்பற்றை வளர்ப்பதற்கு அடித்தளமிட்ட பத்திரிகை தினகரன்

இன, மத பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களின் உள்ளத்திலும் ஊடகம் ஊடாக தேசியவாதத்தை வளர்த்த பெருமகன் அமரர் டி.ஆர். விஜேவர்தன

by damith
March 18, 2024 1:13 am 0 comment

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்கும் பத்திரிகைகள் அளப்பரிய பங்களிப்பை நல்கக் கூடியனவாகும். அந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்திற்கும், சமூக, பொருளாதார, கலாசார, கலை, இலக்கிய, அறிவியல் மேம்பாட்டுக்கும் தினகரன் அளித்துவரும் பங்களிப்புக்கள் அளப்பரியன.

அதன் ஊடாக இலங்கையின் வரலாற்றிலும் பத்திரிகை உலகிலும் அழியாத்தடம் பதித்திருக்கிறது தினகரன்.

தமிழ் பேசும் நல்லுலகில் இரண்டு தினகரன் தினசரிகள் வெளிவருகின்றன. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவருவது. மற்றையது இலங்கையில் வெளிவருவது.

இற்றைக்கு ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் ‘அசோசியேட்டட் நியூஸ் பேர்ப்பஸ் சிலோன் லிமிட்டட்’ என்கின்ற லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர் விஜேவர்தன தினகரன் பத்திரிகையை ஆரம்பித்தார்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு அச்சு ஊடகத்துறையின் ஊடாக அளப்பரிய பங்களிப்பை நல்கியுள்ள அமரர் டி.ஆர் விஜேவர்தன சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பத்திரிகைகளைப் போன்று தினகரன் பத்திரிகையையும் இலக்கையும் நோக்கையும் கொண்டதாகவே தொடங்கினார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு இந்நாடு உள்ளாகியிருந்த காலப்பகுதியில் அதாவது 1932 மார்ச் 15 ஆம் திகதி தொடங்கப்பட்ட இப்பத்திரிகையின் இலக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களிப்பதேயாகும்.

அமரர் டி.ஆர் விஜேவர்தன, தமிழ்மொழி பேசும் சமூகத்தை சாராதவராக இருந்த போதிலும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால் அன்றைய காலப்பகுதியில் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மற்றும் அது தொடர்பிலான செய்திகளும் தகவல்களும் இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு சொல்லப்படாத நிலை காணப்பட்டது.

அக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில்தான் டி. ஆர். விஜேவர்தன தமிழ் பேசும் மக்களுக்காக தினகரன் பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பத்திரிகைக்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைக்கப் பெற்றன.

நாட்டின் சுதந்திரத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்த தகவல்களும் செய்திகளும் இப்பத்திரிகையின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு கொண்டு செல்லப்படலாயின. சுதந்திரத்தின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தினகரன் கடுமையாக உழைத்தது. இதற்கு இப்பத்திரிகையில் அன்றைய காலப்பகுதியில் வெளியான செய்திகளும் ஆக்கங்களும் தகவல்களும் நல்ல சான்றுகளாக உள்ளன.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு இலங்கையர் என்ற அடையாளத்துடன் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான களத்தை தயார் செய்யும் பணியை இப்பத்திரிகை கனகச்சிதமாக முன்னெடுத்தது. அதற்கு இப்பத்திரிகையின் முதலாவது பதிப்பில் ‘நமது நோக்கம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் நல்ல ஆதாரமாக விளங்குகிறது.

‘இப்பத்திரிகை யாருக்காகப் பிரசுரம் செய்யப்படுகின்றதோ அவர்கள் எம்மீது வைக்கும் நம்பிக்கைப் பொறுப்புக்கு நாங்கள் பாத்திரங்களாக இருப்பதற்கு மனப்பூர்வமாக முயல்வோம். இலங்கையிலேனும் வேறெந்த நாட்டிலேனும் உள்ள கட்சியாளர்களில் எவராவது ஒரு கட்சியினரின் முகமனைப் பெறுவது எமது நோக்கமல்ல. எமது பத்திரிகை கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டதாகும். எவராவது ஒருவருக்கு மாத்திரம் பணியாற்றுவதற்கு அன்றி ஏதாவது விஷேட உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது தோன்றியதன்று. தமிழ் பாஷையைப் பேசும் மக்கள் எவரெவரோ அவரவர்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதே இப்பத்திரிகையின் பெரும் பணியாகும். ஆகவே எல்லோருக்கும் பொதுவாக நன்மைகள் பயக்கத்தக்க வழியில் நடப்பதே எமது நோக்கம்.’

இந்த ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக தினகரன் ஆரம்பிக்கப்பட்டிருப்பதன் நோக்கமும் இலக்கும் தெளிவாகிறது. அந்த நோக்கத்தின்படி, ஆரம்ப காலம் முதல் செயற்பட்டுவரும் தினகரன், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுதந்திரம் தொடர்பில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இன, மத, மொழி பிரதேச ரீதியிலான பார்வைகளுக்கு அப்பாலான தேசிய பார்வைக்கு வித்தூன்றியது தினகரன்.

அந்த வகையில் 1948 இல் இன, மத, மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள தினகரன் ஏற்படுத்திய விழிப்புணர்வும் பாரிய பங்களிப்பு நல்கியுள்ளது.

இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது. தினகரனானது தாம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தோடு மாத்திரம் தம் பணிகளை சுருக்கிக் கொள்ளவில்லை.

மாறாக இந்நாட்டின் தமிழ்ப் பத்திரிகைத்துறை வளர்ச்சிக்கும் சமூக, பொருளாதார, கலை, கலாசார, இலக்கிய, அறிவியல் மேம்பாட்டுக்கும் அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகிறது.

குறிப்பாக தினகரன் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இந்நாட்டு தமிழ்பேசும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தமிழகத்தின் மொழி, கலை, இலக்கிய, கலாசார செல்வாக்கு மிக்கவையாகக் காணப்பட்டன. தமிழக மண்வாசனையே அவற்றில் இருந்தது.

அதனால் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, இலக்கிய மற்றும் கலாசாரப் பாரம்பரியங்கள் தமிழகத்தின் மொழி, கலை, இலக்கிய கலாசாரப் பாரம்பரியங்களுக்குள் கரைந்துவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருந்தது.

இந்த அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்திய அமரர் டி.ஆர் விஜேவர்தன உள்நாட்டு தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, இலக்கிய, கலாசார விழுமியங்களுக்கு தினகரனில் முன்னுரிமை அளித்தார். அதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் தினகரனின் அன்றைய ஆசிரியர்களுக்கு அவரே வழங்கினார். இது உள்நாட்டு எழுத்தாளர்கள் உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்புலத்தில் உள்நாட்டு எழுத்தாளர்களின் களமாகியது தினகரன். இதன் ஊடாக உள்நாட்டு இலக்கியம் செல்ல வேண்டிய பாதையை செப்பனிட்ட தினகரன் தேசிய இலக்கியம் தோற்றம் பெறவும் உறுதுணையாக நின்றது.

இந்நாட்டுக்குரிய தமிழ்மொழிப் பாரம்பரியம், கலை, இலக்கிய மண்வாசனை கொண்ட தனித்துவம் மிக்க பத்திரிகையாக தினகரனைக் கட்டியெழுப்புவதில் டி.ஆர் விஜேவர்தன உறுதியாக இருந்தார். அதன் ஊடாக ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் உள்நாட்டில் உருவாகியுள்ளார்கள்.

இந்நாட்டின் கலை, இலக்கிய மேம்பாட்டுக்கு மாத்திரமல்லாமல் அறிவியல் வளர்ச்சிக்கும் கூட அளப்பரிய பங்களிப்புக்களை தினகரன் நல்கியுள்ளது. இப்பத்திரிகையில் கடந்த 25 வருட காலப்பகுதியில் வெளியான பல அறிவியல் கட்டுரைகள் தேசிய மட்டத்தில் விஞ்ஞான, சுகாதார துறைகளுக்கான விருதுகளையும் வென்றெடுத்துள்ளன. தினகரன் பாசறையில் வளர்ந்த பல எழுத்தாளர்கள், இந்நாட்டின் அரச சாஹித்திய விருதுகளையும் கூட பெற்றுள்ளனர். இதன்படி இந்நாட்டின் சுதந்திரத்திற்காக உழைக்க ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை இலங்கை தமிழ் பத்திரிகை துறை வளர்ச்சிக்கும் ஏனைய துறைகளின் முன்னேற்றங்களுக்கும் அளப்பரிய பங்களிப்புக்களை நல்கி வருகிறது.

ஆகவே இந்நாட்டின் பத்திரிகைத்துறை வளர்ச்சிக்கும், சமூக, கலாசார, கலை, இலக்கிய, அறிவியல் முன்னேற்றங்களுக்கும் தினகரன் அளித்துவரும் பங்களிப்புக்கள் இந்நாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படும் என்றால் அது மிகையாகாது.

மர்லின் மரிக்கார் தினகரன் ஆசிரியபீடம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT