Thursday, May 9, 2024
Home » மகளிர் தினம்: முன்னாள் பெண் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கௌரவிப்பு

மகளிர் தினம்: முன்னாள் பெண் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் கௌரவிப்பு

- 1931 முதல் பெண் எம்.பிக்கள் புகைப்படங்கள் அடங்கிய பதாகை திரைநீக்கம்

by Rizwan Segu Mohideen
March 8, 2024 1:53 pm 0 comment

– பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய இலச்சினையும் வெளியீடு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘அவளுக்கான சமத்துவம் மற்றும் ஒப்புரவு’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மறைந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த இலச்சினையின் அர்த்தத்தை ஒன்றியத்தின் உறுப்பினர்கள் விளக்கினர்.

அத்துடன், முன்னாள் மற்றும் தற்போதைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. உலகின் முதலாவது பெண் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக மற்றும் இந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகல பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அங்கத்துவ அட்டையும் கையளிக்கப்பட்டது.

அதன்பின், 1931ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துப் பெண் உறுப்பினர்களினதும் புகைப்படங்களைத் தாங்கியதாக பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பதாகை சபாநாயகரினால் திரைநீக்கம் செய்யப்பட்டது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களின் குடும்பத்தினர், பாராளுமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT