Monday, April 29, 2024
Home » பாரிஸில் புதிய ‘போர் நிறுத்த’ முயற்சிக்கு இடையே மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர வான் தாக்குதல்

பாரிஸில் புதிய ‘போர் நிறுத்த’ முயற்சிக்கு இடையே மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர வான் தாக்குதல்

குடியிருப்புகளில் குண்டு மழை: 40 பேர் உயிரிழப்பு

by gayan
February 24, 2024 7:52 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான புதிய சுற்று பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (23) ஆரம்பமான நிலையில் மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்களில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து பங்கேற்றுள்ளன.

எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண தவறின. இதில் ஹமாஸ் அமைப்பின் முன்மொழிவுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “மாயையானது” என்று நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலிய உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ தலைமையில் பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாரிஸ் அனுப்ப இஸ்ரேல் போர் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதன்படி பலஸ்தீன போராளிகளால் பிடிக்கப்பட்டு இன்னும் அவர்களின் பிடியில் இருப்பதாக நம்பப்படும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பாரிஸ் பேச்சுவார்த்தையில் முயற்சி மேற்கொள்ளப்படவிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் பமால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக பேச்சுவார்த்தையாளர்களுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் வியாழனன்று (22) கூறி இருந்தார்.

மறுபுறம் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே மூன்று நாள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எகிப்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹனியே தலைமையிலான இந்த தூதுக்குழு எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு கூறியது.

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் தீவிரம் அடைந்துள்ளன.

“மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் நீட்டிக்கப்பட்ட மனிதாபிமான போர்நிறுத்தத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தைப் பெற முயற்சிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம்” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் பிரேசிலில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிரதிநிதி பிரெட் மக்கர்க் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் எகிப்து மற்றும் இஸ்ரேலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் நெதன்யாகுவை சந்தித்துள்ளார்.

எனினும் பேச்சுவார்த்தையில் போதிய முன்னேற்றம் எட்டப்படாததற்கு இஸ்ரேலே காரணம் என்று ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி குற்றம்சாட்டினார். இஸ்ரேல் முந்தைய போர் நிறுத்த முன்மொழிவில் சில வாரங்களுக்கு முன் ஒப்புக்கொண்ட விதிகளில் இருந்து பின்வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். “ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) எந்த ஓர் உடன்பாட்டையும் எட்டுவதற்கு ஆர்வம் காட்டவில்லை” என்றார்.

மத்திய காசாவில் பயங்கரம்

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிக உயிரிழப்பு கொண்ட தாக்குதல் ஒன்றை மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் கடந்த வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் நடத்தியுள்ளது. அங்குள்ள குடியிருப்பு கட்டங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கும் வான் தாக்குதல்களில் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மறுபுறும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகரின் கிழக்கில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் குறைந்து ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இதில் சலதா பகுதியில் உள்ள வீடு ஒன்று வான் தாக்குதலில் தரைமட்டமாகி இருப்பதோடு அதில் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரபாவில் இருக்கும் அல் பரூக் பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

ரபா நகரல் இருந்து பத்து நாட்களுக்கு முன் இரு பணயக்கைதிகளை இஸ்ரேல் மீட்டது தொடக்கம் அங்கு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

“வெடிப்புச் சத்தங்கள் மற்றும் தலைக்கு மேலால் இடைவிடாது சுற்றித் திரியும் விமானங்களின் சத்தத்தினால் எம்மால் உறங்க முடியவில்லை” என்று ரபாவில் குடும்பத்துடன் கூடாரத்தில் வசிக்கும் 34 வயது அபூஎமத் குறிப்பிட்டுள்ளார். “அருகில் இருக்கும் கூடாரங்களில் சிறுவர்கள் அழுவதை எம்மால் கேட்க முடிகிறது. இங்கிருக்கும் மக்கள் அவநம்பிக்கையுடனும் பாதுகாப்பின்றியும் காணப்படுகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

இங்குள்ள குழந்தைகள் அதிர்ச்சியில் காணப்படுகின்றன என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் கிறிஸ்டோபர் லொக்யியர் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.

“இந்த உளவியல் பாதிப்பினால் ஐந்து வயது சிறுவர்கள் கூட இறக்க விரும்புவதாக கூறும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

தெற்கு காசா விளிம்பில் இஸ்ரேலிய எல்லையில் இருக்கும் ரபா நகர் மீது முழு அளவில் படை நடவடிக்கை ஒன்றை முன்னேடுப்பது குறித்து இஸ்ரேல் எச்சரித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களாால் காசாவின் வேறு இடங்களில் இருந்து துரத்தப்பட்ட நிலையில் தற்போது ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீனர்களுக்கு தொடர்ந்து போக வழியில்லாமல் உள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே இருந்த சொற்ப உதவிகளும் தற்போது தீர்ந்து வருவது மேலும் மனிதாபிமான நெருக்கடியை அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போர் நான்கு மாதங்களுக்கு மேலாக தணிவு இன்றி நீடித்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பலஸ்தீனர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி 29,514 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 69,616 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 104 பேர் கொல்லப்பட்டு 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அந்த சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இந்தக் காலப்பகுதியில் இஸ்ரேல் 10 படுகொலை சம்பவங்களை நடத்தியதாகவும் அது கூறியது.

காசா எதிர்காலம்

இதேவேளை போருக்குப் பின்னர் காசாவுக்கான திட்டம் ஒன்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் காசாவில் இயங்கும் ஹமாஸ் அரசுக்கு பதில் துறைசார் நிபுணர்களை கொண்ட சிவில் நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கும் காசாவுக்குள் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரபா எல்லைக்கடவை உட்பட எகிப்து மற்றும் காசா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தை மூடுவதும் நெதன்யாகுவின் திட்டத்தில் உள்ளது.

இந்தத் திட்டத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். அவரது உத்தியோகபூர் பேச்சாளர் நபில் அபூ ருதைனி விடுத்திருக்கும் அறிவிப்பில் கூறியதாவது, “ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாட்டின் அங்கமாக மாத்திரமே காசா இருப்பதோடு அது அல்லாத எந்தத் திட்டமும் தோல்வியில் முடியும். பூகோள யதார்த்தத்தை மாற்றுவற்கான இஸ்ரேலின் முயற்சி வெற்றி பெறாது.” என கூறப்பட்டுள்ளது.

“பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உலகம் விரும்புவதாக இருந்தால் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து சுதந்திர பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காசா போர், பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டு திட்டத்திற்கான அழைப்பை சர்வதேச அளவில் புதுப்பித்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவும் இந்த அழைப்பை விடுத்து வருகிறது.

இரு நாட்டுத் தீர்வு என்பது மேற்குலகின் பிரதான கொள்கையாக இருந்து வந்தபோதும் 1990களின் ஆரம்பத்தில் ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்தானது தொடக்கம் பலஸ்தீன நாடு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் சிறிய அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT