இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அக்கால மூத்த தலைவர்களில் ஒருவராகவும், இந்திய வம்சாவளி மக்களின் மதிப்புக்குரிய அரசியல்வாதியாகவும் விளங்கிய முன்னாள் இந்து சமய, இந்துகலாசார இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் இன்று தனது 96 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றார்.
இந்திய வம்சாவளி சமூகத்தில் மிகவும் நன்மதிப்புக்குரிய கல்விமானாக பி.பி.தேவராஜ் அவர்கள் விளங்குகின்றார். இ.தொ.கா ஸ்தாபகத் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமானின் ஆலோசகராகவும் தேவராஜ் பணியாற்றியுள்ளார். இ.தொ.காவின் துணைத்தலைவராக அவர் பதவி வகித்துள்ளார்.
கொழும்பின் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றில் தேவராஜ் அவர்கள் பங்கேற்று உரையாற்றுவதுண்டு. அவர் சிறந்த பேச்சாளர், இலக்கிய ஆர்வலர், கல்விமான் ஆவார். தொழிற்சங்கத்துக்கு மாத்திரமன்றி சாதாரண மக்களுக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கக் கூடியவராக அவர் திகழ்கின்றார்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள் பலவற்றில் அவர் பிரசன்னமாகத் தவறுவதில்லை. அக்கூட்டங்கள் பலவற்றில் அவர் பேச்சாளராகவும் பங்கேற்றுள்ளார். வயது மூப்புக் காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளில் அவர் பங்கேற்பது வழமை.
1989 பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் இ.தொ.கா_ ஐ.தே.க கூட்டணியின் தேசியப் பட்டியல் எம்.பிக்களில் ஒருவராக தேவராஜ் நியமிக்கப்பட்டார். அவர் 18 பெப்ரவரி 1989 இல் இந்து சமய மற்றும் இந்து கலாசார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
24 ஒக்டோபர் 1994 இல் ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேவராஜ் அவர்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
பி.பி.தேவராஜ் அவர்கள் 2007 இல் இந்திய வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பின் (GOPIO) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேவராஜ் 21 பெப்ரவரி 1929 இல் பிறந்தார். அவர் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் கற்றார். அவர் பி.எஸ்சி. பொருளாதார பட்டதாரியாவார்.
அரசியலில் அவர் பங்கேற்றிருந்த போதிலும், பொதுநல விடயங்களிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். மலையக மக்களுக்கான நலன்களில் அவர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். தேவராஜ் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.