Monday, April 29, 2024
Home » பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி

by damith
February 12, 2024 9:56 am 0 comment

பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (11) முடிவடைந்த நிலையில், சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மையாக 264 ஆசனங்களில் 101 இடங்களை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 60 மணி நேரத்திற்குப் பின்னரே இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தாமதம் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீபின் கட்சி பாராளுமன்றத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது.

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாத நிலையில் கூட்டணி அரசொன்றை அமைப்பதற்கு மற்றக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக நவாஸ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு வரை இறுதி முடிவு வெளியாகாதது தொடர்பில் தேசிய அளவில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரிக்கே இன்சாப் கட்சி எச்சரிதுள்ளது. சிறு சிறு அர்ப்பாட்டங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன. எனினும் சட்டவிரோதமான ஒன்றுகூடல்கள் ஒடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பொலிஸ் எச்சரித்துள்ளது.

தேர்தல் தினத்தில் கைபேசி இணையதள வசதிகள் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட தொடர்பாடல் பிரச்சினையே தேர்தல் முடிவு வெளியாவதற்கு தாமதம் ஏற்படக் காரணம் என்று பாகிஸ்தான் இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக இணைய வசதி முடக்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிட்டபோதும் உரிமைக் குழுக்கள் மற்றும் அமெரிக்க உட்பட வெளிநாட்டு அரசுகள் இந்த நடவடிக்கைக்கு கவலையை வெளியிட்டன.

எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் தஹ்ரிக்கே இன்சாப் கட்சி செயலாளர், தேர்தல் மோசடி தொடர்பில் குறிப்பிட்ட தேர்தல் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் சுமார் 93 பேர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் என்று நம்பப்படுகிறது. இம்ரான் கான் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 70 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெறாதது அவர்கள் ஆட்சி அமைப்பதில் இருக்கும் பிரதிகூலமாக பார்க்கப்படுகிறது. இந்த போனஸ் ஆசனங்கள் கட்சிகளின் வாக்கு வீதத்திற்கு ஏற்ப பகிரப்படுகிறது. இதனால் நவாஸ் ஷரீப் கட்சி 20 போனஸ் ஆசனங்களை பெற வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் 17 ஆசனங்களை வென்றுள்ள முத்தஹிதா குவாமி அமைப்புடன் உடன்பாடு ஒன்றை எட்டி இருப்பதாக நவாஸ் ஷரீப் கட்சி நேற்று அறிவித்தது. மறுபுறம் இம்ரான் கான் ஆதரவாளர்களும் ஆட்சி அமைப்பது பற்றி உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையே கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வெண்டும் என்று இராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் வலியுறுத்தியுள்ளார். எனினும் நவாஸ் ஷரீபுக்கு பலம்மிக்க இராணுவத்தின் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT