Home » கல்லீரல், செவிப்புலன் மாற்று சிகிச்சை வழங்க ஜனாதிபதி நிதியத்தால் உதவி
16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும்

கல்லீரல், செவிப்புலன் மாற்று சிகிச்சை வழங்க ஜனாதிபதி நிதியத்தால் உதவி

ராகம போதனா, ஸ்ரீஜயவர்தனபுர ஆஸ்பத்திரிகள் தெரிவு

by damith
February 12, 2024 7:30 am 0 comment

சிறார்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புலன் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியுதவி வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறார்களுக்கான கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் சிறார்களுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வறிய பெற்றோரின் நலனுக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வட கொழும்பு பொது வைத்தியசாலையில் (ராகம போதனா வைத்தியசாலை) மேற்கொள்ளப்படும் சிறார்களின் (16 வயதுக்குட்பட்ட) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கான அதிக செலவைக் கருத்தில் கொண்டு, சாதாரண மற்றும் ஏனைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 2024 ஜனவரி முதல் ஜனாதிபதி நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா (10,00,000/-) வழங்கப்படும். அத்துடன், இலங்கையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை தேவைப்பாட்டுடன் பிறப்பதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில், இந்த அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை பிறக்கும்போதே கண்டறிந்து, பிறக்கும்போதே தேவையான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இலங்கையில் கூட, இவ்வாறான குறைபாடுகள் குழந்தைகள் பிறக்கும்போதே கண்டறியப்படுகிற போதும் அவர்கள் அனைவருக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இவ்வாறான குழந்தைகள் பிறந்து 02 வருடங்களுக்குள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்காக இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர் தெரிவிக்கின்றார். இந்த சத்திரசிகிச்சைக்கு ஐம்பது இலட்சம் ரூபா அல்லது அதனை விட அதிக தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அறுவை சிகிச்சை ஒரு சில அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுவதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் இதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டியுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பெரியாஸ்பத்திரியில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு இதற்காக பயன்படுத்தப்படும் கருவியின் (Implant) பெறுமதி சுமார் 3-4 மில்லியன் ரூபாவாகும். சுகாதார அமைச்சினால் இந்த கருவி ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், சத்திரசிகிச்சைக்கான செலவு 06 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும். இதற்குத் தீர்வாக சுகாதார அமைச்சிடமிருந்து இந்த கருவியைப் (Implant) பெற்று, சத்திரசிகிச்சைக்கான செலவான ஆறு இலட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

இவ்வாறான குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் இருப்பது சமூகத்துக்கும் சுகாதார அமைப்புக்கும் தீங்காகவே இருக்கும். இந்த சத்திரசிகிச்சைக்காக பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ள போதிலும் சிறு குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும். இவ்வாறான சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்குவது நாட்டுக்கான எதிர்கால முதலீடாகும். எனவே, ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைதகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01-01-2024 முதல் அதிகபட்சமாக ஆறு இலட்சம் ரூபா வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT