Home » நோயாளர்களைப் பாதிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

நோயாளர்களைப் பாதிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

by sachintha
February 2, 2024 6:00 am 0 comment

வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நேற்று வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க சுகாதார சேவையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக வைத்தியசாலைகளின் வழமையான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, கிளினிக்குகள், தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளையும் வழமை போன்று வழங்க முடியாத நிலைக்கு வைத்தியசாலைகள் உள்ளாகின.

இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளும் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சேவை அளிக்கும் பிரிவுகளும் வழமை போன்று வசதிகளை வழங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அப்பாவி நோயாளர்கள் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளிலும் கிளினிக்குகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் அப்பாவி நோயாளர்கள் பாதிக்கப்படுவதைக் குறைத்துத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. அந்த அடிப்படையில் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் மனிதாபிமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் ஊடாக இவ்வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையால் அப்பாவி நோயாளர்கள் சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசாங்க சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், அப்பாவி நோயாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி இராணுவத்தினர் மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்தனர். அவர்களது சேவைகளை மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

அரசாங்க வைத்தியர்களுக்கு வழங்கப்படுவது போன்று தங்களுக்கும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று கோரியே இத்தொழிற்சங்கங்கள் இவ்வேலைநிறுத்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு, கட்டம் கட்டமாக மீட்சி பெற்று தற்போதுதான் மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து இருக்கின்றது. இந்தச் சூழலில் இவ்வாறு அதிகரித்த கொடுப்பனவுக் கோரிக்கையை முன்வைத்து இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது நியாயமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான கோரிக்கை என்பதுதான் மக்களின் கருத்தாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதன் தாக்கங்கள் இன்னும் முழுமையாக நீங்காத நிலை நாட்டில் காணப்படுகிறது. அதன் அழுத்தங்களும் அசௌகரியங்களும் மக்களில் தாக்கம் செலுத்தும் வகையில் உள்ளன. அதனால் பொருளாதார நெருக்கடியில் நாட்டையும் மக்களையும் முழுமையாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் முன்னுரிமை அடிப்டையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்விதமான சூழலில்தான் இவ்வாறான அதிகரித்த தொகைக் கொடுப்பனவு கோரிக்கை சுகாதார அமைச்சின் கீழுள்ள தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆனால் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுப்பதற்கு முன்வைக்கப்படும் கோரிக்கை சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைய கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமாயின் அரசாங்கத்தின் ஏனைய துறையினரும் அதேவிதமான கோரிக்கையை முன்வைக்கப் பின்னிற்க மாட்டார்கள். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவ்வாறு ஒவ்வொரு துறையினரும் இவ்விதமான கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்? என்பன குறித்து இவ்விதமான கோரிக்கையை முன்வைக்கும் தொழிற்சங்கங்கள் முன்கூட்டியே எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் சுகாதார தொழிற்சங்கங்களின் கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கைக்கும் அப்பாவி நோயாளர்களுக்கும் இடையில் நேரடி சம்பந்தம் கிடையாது. மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் சேவைகளில் சுகாதாரத்துறையும் ஒன்றாகும்.

இந்நிலையில் தங்களது கோரிக்கையை அடைந்து கொள்வதற்காக மக்களை பணயக் கைதிகளாக்க தொழிற்சங்கங்கள் முனையலாகாது. அது நியாயமான காரியமும் அல்ல.

அதேநேரம் என்னதான் கோரிக்கை என்றாலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அவற்றுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளவே முயற்சி செய்ய வேண்டும். அதுவே ஏற்றுக்கொள்ளத்தக்க தொழிற்சங்க தர்மம். அதை விடுத்து அப்பாவி நோயாளர்களை அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கும் வகையில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் முன்னெடுக்கலாகாது.

ஆகவே சுகாதார தொழிற்சங்கங்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் மக்களால் நியாயமான கண்கொண்டு நோக்கப்படக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT