Saturday, May 4, 2024
Home » பெலியத்த ஐவர் படுகொலை; வழிநடத்திய சந்தேகநபர் கைது

பெலியத்த ஐவர் படுகொலை; வழிநடத்திய சந்தேகநபர் கைது

- பயணித்த வாகனம் விகாரையொன்றின் தரிப்பிடத்தில் மீட்பு

by Rizwan Segu Mohideen
January 24, 2024 4:28 pm 0 comment

– CCTV உதவியுடன் ஏனையோரை தேடி விசாரணை

பெலியத்தவில் ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தை திட்டமிட்டு அதற்கு தலைமை தாங்கியவர் எனத் தெரிவிக்கப்படும், 54 வயதான சமன் குமார என்பவேர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபர் குற்றச்செயல் இடம்பெற்ற வேளையில் வாகனத்தை செலுத்தியவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயணித்த 65-2615 இலக்கம் கொண்ட ஜீப் ரக வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காலி, வித்யாலோக பிரிவேனாவின் வாகன தரிப்பிடத்தில் இருந்து குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்,  ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர், மாத்தறை – கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த ஜீப் வாகனத்தில் பயணித்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் குறித்த வாகனத்தில் இருந்து இறங்கிச் செல்லும் CCTV காட்சியை பொலிஸார் விசாரணைகளில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த வீதியில் செல்லும் வாகனம் அந்நபரை இறக்கிவிட்டதும், அவர் அதே திரையில் சென்று மீண்டும் எதிர்த் திசையில் பயணித்து கம்புறுப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு வருவதும் குறித்த காட்சியில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் பின்னர் மாத்தறை செல்லும் பஸ் ஒன்றில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, குறித்த CCTV காட்சிகளில் பதிவான சந்தேகநபரின் புகைப்படங்களை விமான நிலையத்தின் தானியங்கி முக அடையாள அமைப்புக்கு அனுப்புமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இத்தாக்குதலுக்கு குறைந்தபட்சம் 3 பேர் வந்திருக்கலாம் எனவும், அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் தங்காலை வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT