Sunday, April 28, 2024
Home » 100 நாட்களை தொட்டு காசாவில் தொடர்ந்து தாக்குதல்: ‘நிறுத்துவதில்லை’ எனவும் உறுதி

100 நாட்களை தொட்டு காசாவில் தொடர்ந்து தாக்குதல்: ‘நிறுத்துவதில்லை’ எனவும் உறுதி

by damith
January 15, 2024 6:00 am 0 comment

காசாவில் போர் வெடித்து நேற்றுடன் 100 ஆவது நாளைத் தொட்ட நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு யாராளும் எம்மை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.

இந்தப் போர் பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதோடு, காசாவில் உயிரிழப்பு 24,000 ஐ நெருங்க, அந்த குறுகிய நிலத்தின் பெரும் பகுதி இஸ்ரேலிய குண்டு மழையால் சின்னாபின்னமாகியுள்ளது. இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை ஹேகில் உள்ள சர்வதேச நிதிமன்றத்தில் இடம்பெறும் நிலையில், “எந்த ஒரு நீதிமன்றம் அல்லது இராணுவ எதிரிகளாலும் ஹமாஸை ஒழிக்கும் இஸ்ரேலின் இலக்கை நிறுத்த முடியாது” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

“யாராலும் எம்மை நிறுத்த முடியாது ஹோகாலும், தீய எதிரிகளாலும் மற்றும் வேறு எவராலும் எம்மை நிறுத்த முடியாது” என்று சனிக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டார். “வெற்றிவரை தொடர்வதற்கு சாத்தியம் இருப்பதோடு அவசியமாக உள்ளது. அதனை செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் மூன்று மாதங்களைத் தாண்டி நீடிக்கும் இந்தப் போர் நெதன்யாகுவுக்கு இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பலஸ்தீன போராளிகளின் பிடியில் தொடர்ந்தும் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாமல் போயிருப்பது அவர் மீதான எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் இடம்பெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

“பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை நாம் ஒவ்வொரு வாரமும் இங்கு தொடர்ந்து வருவோம்’ என்று பேரணியில் பங்கேற்ற 47 வயது எடன் பெகரானோ ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்தப் போர் வெடிப்பதற்கு காரணமான கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிய இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதில் தொடர்ந்தும் 132 பேர் காசாவில் பணயக்கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் அவர்களில் குறைந்தது 25 பேர் போருக்கு மத்தியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பசியுடன் இறந்த சிறுமி

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 135 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ரபா நகரில் இடம்பெயர்ந்த இரு குடும்பங்கள் தங்கி இருந்த வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற ஏவுகணை வீச்சில் பலியான பத்து பேரும் அடங்குவர்.

போர் உக்கிரமாக நீடித்து வரும் சூழலில் பெரும் எண்ணிக்கையான மக்கள் காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் அடைக்கலம் பெற்று வருவதால் அந்தப் பகுதி அதிக சனநெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது.

தான் மற்றும் தனது மனைவி வெளியே சென்றிருந்த வேளையில் இஸ்ரேலிய குண்டு வீச்சினால் தனது வீடு முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்று ரபா குடியிருப்பாளரான சமிர் கெஷ்டா ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

“இந்த வீட்டில் நான் மற்றும் எனது குழந்தைகள் அடைக்கலம் பெற்றிருந்தோம். நாம் அமைதியானவர்கள் முன்னெச்சரிக்கை இன்றி அவர்கள் எம்மை தாக்கினார்கள்” என்று அவர் கூறினார்.

தாக்குதல் இடம்பெறும்போது நிம்மா அல் அக்ஸார் என்பவர் வீட்டில் இருந்தார். “அந்தத் தாக்குதல் கற்பனை செய்ய முடியாதது. நாம் கூச்சலிட ஆரம்பித்தோம். என்னை தூக்குப் படுக்கையில் சிலர் சுமக்கும் வரை என்னால் நகர முடியாமல் இருந்தது” என்று அந்தப் பெண் குறிப்பிட்டார்.

இதில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பசம் அரபா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ரொட்டித் துண்டை கையில் வைத்தபடி இறந்த சிறுமியின் புகைப்படத்தை காண்பித்தபடியே அவர் ஏ.எப்.சி. செய்தி நிறுவத்திற்கு இதனைத் தெரிவித்தார்.

“இந்தக் குழுந்தை ஒன்றும் இல்லாமல் ரொட்டித் துண்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பசியில் இறந்தது. எப்படி குழந்தைகள் இறக்கிறார்கள் என்பதை பார்க்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எங்கே?” என்று அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் காசாவில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,843 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 60,317 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் புதையுண்டு அல்லது கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படும் மேலும் 7,000 பேர் காணாமல்போயுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக காசா மக்கள் தொகையில் நான்கு வீதமானவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணாமல்போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசா பேரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. ஆயுதங்களுடன் யூத குடியேற்றம் ஒன்றுக்குள் ஊடுருவிய மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் சனிக்கிழமை கூறியது. இதில் 15, 17 மற்றும் 19 வயதுடையவர்களே கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது. பலஸ்தீன நகரான ஹெப்ரேனுக்கு அருகில் இருக்கும் அதோரா குடியேற்றத்தில் வெளிப்புற வேலியை உடைத்துக் கொண்டு ஊடுருவிய தாக்குதல்தாரிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒரு இஸ்ரேலிய வீரர் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியது.

மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து நடத்திவரும் சுற்றிவளைப்புகள் மற்றும் அங்குள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கானவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT