Wednesday, May 8, 2024
Home » இந்தியாவுக்கு ஆதரவான கட்சி மாலைதீவு தலைநகர் மேயர் தேர்தலில் அமோக வெற்றி!

இந்தியாவுக்கு ஆதரவான கட்சி மாலைதீவு தலைநகர் மேயர் தேர்தலில் அமோக வெற்றி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துக் கூறிய ஆளும் கட்சி படுதோல்வி!

by damith
January 15, 2024 6:53 am 0 comment

மாலைதீவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கருத்துகளைக் கூறிய ஆளும் கட்சியினர் அங்கே நடந்த முக்கியமான தேர்தல் ஒன்றில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாகவே முரண்பாடு நிலவி வருகின்றது. இந்தியப் பிரதமர் மோடி குறித்து மாலைதீவைச் சேர்ந்த துணை அமைச்சர்கள் சிலர் சர்ச்சையான கருத்துகளைக் கூறினர். இது பெரும் விவாதமாக மாறியது.

இதை இந்தியாவில் பலரும் கண்டித்தனர். இதையடுத்து ‘மாலைதீவைப் புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் பரபரப்பானது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதித்தது.

இதற்கிடையே தற்போது ஆளும் மாலைதீவு அரசுக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே தேர்தலொன்றில் நல்ல அடி கிடைத்துள்ளது. மாலைதீவு தலைநகர் மாலேயில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது தற்போது ஜனாதிபதியாக உள்ள முகமது முய்ஸுவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சி வேட்பாளரை வீழ்த்தி மாலைதீவு ஜனநாயக கட்சியின் ஆடம் அசிம், மாலேயின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் வரை முய்ஸு தான் இந்த பதவியில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முய்ஸு தனது மேயர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இத்தனை காலம் முய்ஸு கட்சி வசம் இருந்த மாலைதீவு தலைநகர் மாலே மேயர் பதவி இப்போது எதிர்க்கட்சிகள் வசம் சென்றுள்ளது. அசிமின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆடம் அசிம் மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.

இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்கி வரும் முன்னாள் ஜனாதிபதி முகமது சோலிஹ் இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜனாதிபதியாக இருந்த சமயத்திலேயே இந்தியா மாலைதீவில் ஏகப்பட்ட முதலீடுகளைச் செய்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவரைச் சீன சார்பு தலைவரான முய்ஸு தோற்கடித்திருந்தார்.

அசிம் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குப்பதிவே பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முய்ஸு அரசின் மூன்று துணை அமைச்சர்கள் சர்ச்சையான கருத்துகளைக் கூறியதால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இந்த மேயர் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அதேநேரம் முய்ஸு இன்னுமே சீன ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கிறார். அவர் சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT