Sunday, May 19, 2024
Home » மன்னார், பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்; 20 வருடங்களுக்கு அதானிக்கு குத்தகை

மன்னார், பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்; 20 வருடங்களுக்கு அதானிக்கு குத்தகை

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 04 முடிவுகள்

by Prashahini
May 7, 2024 4:07 pm 0 comment

– தேசிய ஆசிரியர் பேரவையைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை 20 வருடங்கள் அதானிக்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 04 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாயில் செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும்,20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்தல்

இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் ஸ்க்ரீன் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), ஸ்மார்ட் ஸ்க்ரீனுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Data Centre), ஒளிப்பதிவு அறை (Studio Room), மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவப் பட்டப்படிப்பை இலங்கையில் அங்கீகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள் உள்ளடங்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்கும், சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்குஅமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.10.09 அன்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விதந்துரைகளின் பிரகாரம் மருத்துவக் கட்டளை சட்டத்தை திருத்தம் செய்வதற்காகசட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தேசிய ஆசிரியர் பேரவையை தாபித்தல்

தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக ஏனைய தொழில் சேவைப் பிரிவுகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணையாக தேசிய ஆசிரியர் பேரவையைத் தாபிப்பதற்கு தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வித் துறைசார் பங்காளர்களுடனான நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டமூலத்தின் பிரகாரம் தேசிய ஆசிரியர் பேரவையை தாபிப்பதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT