Sunday, May 19, 2024
Home » நுண்கடன் நிறுவனங்களால் 25 வீதமானோர் கடும் பாதிப்பு

நுண்கடன் நிறுவனங்களால் 25 வீதமானோர் கடும் பாதிப்பு

சட்டம் கடுமையாக்கப்படும் என்கிறார் அமைச்சர்

by mahesh
May 8, 2024 6:45 am 0 comment

நுண்கடன் நிறுவனங்களால், நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வைரஸ் தொற்று போன்று நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நுண்கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்ப டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆதிவாசிகளைக்கூட இந்த நுண்கடன் நிறுவனங்கள் விட்டு வைக்கவில்லை என்றும் சபையில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

நடைமுறையில் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்கு பாரம்பரியமான சட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாதுள்ளது. பிரிவிடல் சட்டத்தின் ஏற்பாடுகள் நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாகும். இதனைக் கவனத்திற் கொண்டே இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கடன்களை அறவிடல் திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அனுமதி யின்றி சொத்துக்களை ஏலமிடும் உரிமை வங்கிகளுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்படவில்லை.

1990 இல், முன்னெடுக்கப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து அதிகாரம் வங்கிகளின் நிறைவேற்று சபைக்கு வழங்கப்பட்டது. இலங்கை வங்கி,மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் கடன்கள் வழங்குவதற்கு மக்களிடமிருந்து பெற்ற சொத்துக்களை ஏலம் விடும் போது நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தன. பின்னரான காலத்தில் நிதிச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு வங்கி உருவாக்கம் விரிவாக்கப்பட்டது.இதன் பின்னர் சொத்துக்களை ஏலம் விடும் உரிமத்தை தனியார் வங்கிகள் முறையற்ற வகையில் செயற்படுத்தின. 2020 பொருளாதார பாதிப்புக்குப் பின்னர், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை ஏலம் விடும் சூழல் ஏற்பட்டது. இவ்வாறான பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது.தொழில் முயற்சியாளர்கள் இருந்தால்தான் வங்கி கட்டமைப்பு நிலைத்திருக்கும். இதை வங்கிகள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

வாடிக்கையாளர்களை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களின் சொத்துக்களை சுவீகரித்து சொந்தமாக்குவதை விடுத்து தொழில் முயற்சியாளர்கள் மீண்டெழுதற்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அமுல்படுத்தப்பட்ட பராட்டே அல்லது வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

டிசம்பருக்குப் பின்னர் தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விடுவார்களா என்பதை உறுதியாக குறிப்பிட முடியாது. அந்த வகையில் வங்கிக் கட்டமைப்பு தொழில் முயற்சியாளர்களுடன் இணக்கமாக செயற்பட வேண்டியது முக்கியம். நாட்டில் நிதி விவகாரம் மற்றும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் உருவாவதற்கு மத்திய வங்கியே பொறுப்புக் கூற வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT