Monday, April 29, 2024
Home » யதார்த்தத்தை புரிந்து கொள்வது அவசியம்!

யதார்த்தத்தை புரிந்து கொள்வது அவசியம்!

by gayan
January 13, 2024 6:00 am 0 comment

இலங்கைவாழ் மக்கள் மத்தியில் கடந்த சில வருடங்களாக பேசுபொருளாக இருந்து வருகின்ற விடயம் பொருளாதார நெருக்கடி ஆகும். இலங்கையில் உருவெடுத்த பொருளாதார நெருக்கடியானது வறிய மக்கள் தொடக்கம் செல்வந்தர்கள் வரை ஒவ்வொருவரையும் வெகுவாகப் பாதித்துள்ளதனாலேயே அனைத்து மக்களும் அதுபற்றி அதிகம் பேசுகின்றனர்.

நம் குடும்பத்தின் தலைவரான தந்தை பலரிடமும் வகைதொகையின்றி கடன் வாங்கி விட்டாரென்று வைத்துக் கொள்வோம். நம் குடும்பத்தில் அவரது வகிபாகம் இல்லாமல் போனாலும் கூட, அவர் வாங்கிய கடனால் உண்டான தொந்தரவு எம்மை விட்டு நீங்கிப் போவதில்லை. அக்கடனை நாம் எவ்வாறாயினும் மீளச்செலுத்தியே ஆக வேண்டும். அவ்வாறு மீளச்செலுத்துவதற்காக நாம் பாடுபடுகின்ற போது, நம் குடும்பமே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியையும் இந்தக் கதையுடனேயே ஒப்பிட வேண்டியுள்ளது. அதாவது முன்னைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே நாட்டில் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடி தோன்றியது. அதன் பாதிப்புகளையே நாட்டு மக்கள் இப்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய நிலைமையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். எமது நாடு இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பது உலகுக்கே தெரிந்த விடயம் ஆகும். இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்கள் யாரென்பதை ஆராய்ந்து கொண்டிருப்பதிலேயோ அல்லது அவர்களை தொடர்ந்தும் கண்டித்துக் கொண்டிருப்பதிலேயோ காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தால் ஆகப் போவது எதுவுமில்லை. அதனால் விளைவது பாதகமே ஆகும்.

அன்றைய ஆட்சியாளர்களால் பொருளாதாரக் கொள்ளை சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கப் போவதில்லை. அன்று அவர்கள் கடைப்பிடித்த கொள்கையின் விளைவை இன்று மக்கள் அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அக்காலத்தில் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களையும் இன்றைய ஆட்சியிலேயே மீளச்செலுத்த வேண்டியிருக்கின்றது.

அதலபாதாளத்தில் மூழ்கிய நாட்டை மீண்டும் முன்னைய நிலைமைக்குக் கொண்டு வருவதென்பது இலகுவான காரியமல்ல. வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்துவதுதான் இங்குள்ள பெரும் சவால் ஆகும். உள்நாட்டில் பொருளாதார நிலைமையை சீராக வைத்துக் கொள்வது ஒருபுறமிருக்க, வெளிநாட்டுக் கடன்களையும் மீளச்செலுத்தி ஆகவேண்டும்.

எமது நாடு இருண்ட யுகத்துக்குள் மூழ்கியிருந்த வேளையில், நாட்டின் அரசுத்தலைவரும் அரசாங்கமும் ஆட்சியிலிருந்து அகன்ற வேளையில், நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை. மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலுக்குள் ஏறிக் கொள்வது பயனற்றது என்றுதான் அரசியல்வாதிகள் பலரும் எண்ணினர்.

அதேசமயம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான ஆற்றலும் ஆளுமையும் அரசியல்வாதிகள் பலரிடம் இருக்கவில்லை. அவ்வாறான நெருக்கடி வேளையில் நாட்டின் தலைமையை துணிச்சலுடன் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

நாட்டைப் பொறுப்பேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் ‘வங்குரோத்து அற்ற நாடு’ என்ற நிலைமைக்கு இலங்கையைக் கொண்டுவருவதற்கு அவரால் முடிந்துள்ளது. இலங்கையினால் இனிமேல் தலைநிமிர முடியுமென்ற நம்பிக்கையை சர்வதேசத்திடம் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

நாடு மீண்டெழுகின்ற வேளையில் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை படிப்படியாக மீளச்செலுத்த வேண்டும். அதேசமயம் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து புதிய கடன்களைப் பெறவும் வேண்டியுள்ளது. இவ்வாறான நெருக்கடி காலப்பகுதியில் வரிகள் போன்ற சுமைகளை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தாங்கிக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

‘கடனில் மூழ்கிய நாடு’ என்ற அவப்பெயரில் இருந்து நாடு மீள்வதாயின் இதனை விட வேறு மார்க்கமே கிடையாது. ‘அவர் வந்தால் நாடு மீண்டு விடும், இவர் வந்தால் நாடு மீண்டுவிடும்’ என்றெல்லாம் அபத்தமான பேச்சுகளும் நம்பிக்கைகளும் அர்த்தமற்றவையாகும்.

அரசியலில் ஆற்றல் மிக்கவர்கள் யார்? துணிச்சல் மிக்கவர்கள் யார்? சவாலைக் கண்டு துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் யார்? நெருக்கடிகளைக் கண்டு அஞ்சி ஓடுபவர்கள் யார்?

இவை எல்லாவற்றையும் கடந்த நெருக்கடிக் காலத்தில் நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டனர்.

அரசியல் ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் பலர் நிறைவேறாத நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முற்படுவர். ஆனால் அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் மக்களாவர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT