Home » விஞ்ஞானம், தொழில்நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகம்
இன்றைய நவீன யுகத்துக்கு அவசியமான உயர்கல்வி

விஞ்ஞானம், தொழில்நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகம்

by sachintha
December 22, 2023 2:48 am 0 comment

*மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பம்

* குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் திட்டம்

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மனித வள மேம்பாட்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன யுகத்திற்கு ஏற்ப இளைஞர், யுவதிகளைக் கட்டியெழுப்புவதில் அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளன. அதற்கேற்ப உயர்கல்வியைப் பெற விரும்புவோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பாரிய பங்களிப்புக்களை அவை நல்கி வருகின்றன.

தற்போதைய சூழலில் இந்நாட்டு இளம் பராயத்தினர் தொழில்நுட்பத் திறன், உயர்தர அங்கீகாரம் பெற்ற கல்வி மற்றும் தொழில்சார் தகுதிகள் ஆகியவற்றுடன் கூடிய தரமானதும் உயர்தரத்திலுமான கல்வியைத் தேடுவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை நிறைவேற்றுவதில் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன.

இதன் பயனாக உயர்கல்வி பெற்று வெளியேறும் இளம் பட்டதாரிகள் எல்லையற்ற உலகை ஆராயவும் அவர்களது முழு திறனையும் கனவுகளையும் நனவாக்கிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் இந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான வளங்கள், கற்பித்தல் மற்றும் பயிற்சியுடன் இணைந்த கற்கைகளை வடிவமைத்து மேம்படுத்தவும், கற்பித்தல் மற்றும் பயிற்சி தொடர்பான வளங்கள், வழிமுறைகள் மற்றும் கருவிகளை வழங்கவும், ஆய்வுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இந்நாட்டு அரசியலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட பரந்த அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ளவரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பேராதனை பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவின் பசுமைப் பல்கலைக்கழகத்திலும் உயர் பட்டப்படிப்புகளை மேற்கொண்டவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் இந்நாட்டு இளம் பராயத்தினருக்கு நவீன யுகத்திற்கு ஏற்ற தரமான உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இப்பல்கலைக்கழகம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நிலையில் சுமார் நான்கு வருட காலம் அரசின் கீழ் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டிருந்தன.

என்றாலும் நாட்டின் துரித பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் அடிப்படையில் இப்பல்கலைக்கழக கட்டடங்கள் அதன் ஸ்தாபகரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் அண்மையில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நாட்டின் இளம் பராயத்தினருக்கு சிறந்த உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய வளங்களைக் கொண்டுள்ள நிறுவனமொன்று எவ்வித பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாத வகையில் மூடப்பட்டு கிடக்க இடமளிக்கக்கூடாது என்ற அடிப்படையில் மீளக் கையளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கும் உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, இணைய குற்றங்கள் தொடர்பான கற்கைகள் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் எண் 7 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பல்கலைக்கழம் ‘இன்டர்நேஷனல் கெம்பஸ் ஒஃப் சயின்ஸ் அண்ட் டெக்னொலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் உள்ளக வீதிகளை நவீனப்படுத்தி செப்பனிடும் பணிகள் வேகமடைந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகம் வளர்ச்சி பெற்ற நாடொன்றின் பல்கலைக்கழகம் கொண்டிருக்கும் நவீன வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கணனி கற்கைகளுக்கென மூன்று கணனி கூடங்கள் செயற்பாட்டு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. விரிவுரை மண்டபங்களும் மாணவர் தங்கும் விடுதிகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் ஹிஸ்புல்லாஹ், ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்களை உள்வாங்கும் பணிகள் ஆரம்பமாகும். பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இப்பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என்றார்.

‘கல்வி நடவடிக்கைகளுக்கு மாணவர்களை ஜனவரியில் உள்வாங்கும் வகையில் இணைய வழியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் ஊடாக சுமார் 300 -350 விண்ணப்பங்கள் தான் கிடைக்கப்பெறும் என எதிரபார்த்தோம். ஆனால் இவ்விண்ணப்பம் கோரப்பட்ட சில நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. முஸ்லிம் மாணவர்கள் தான் பெருமளவில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இப்பல்கலைக்கழகம் இந்நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களுக்குமானது. இது தனியே முஸ்லிம் மாணவர்களுக்கானதல்ல எனவும் குறிப்பிடுகிறார் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்.

இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜனவரி 3 ஆம் திகதி முதல் தினமும் 50 பேர் படி பெற்றோருடன் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் வசதிகள் காண்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து நேர்முகப் பரீட்சைகளும் நடாத்தப்படும். தற்போது விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான பதிவுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டட வடிவமைப்பு மற்றும் அளவீடு, சுற்றுலா மற்றும் வணிக முகாமைத்துவம், விவசாய தொழில்நுட்பம் மற்றும் வள முகாமைத்துவம், மற்றும் மொழிகள் ஆகிய கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாட்டில் பட்டப்படிப்பை மேற்கொள்ள இலங்கை நாணயப்படி சுமார் 20 முதல் 25 இலட்சம் ரூபாய் செலவாகுமாயின் இப்பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 10 முதல் 15 இலட்சம் ரூபா செலவில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கவென நிதியமொன்றை நிறுவவும் இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எதிர்பார்த்துள்ளார். இதன் ஊடாக மிகவும் நியாயமான தொகைக்கு, இப்பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

இச்சமயம் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மேலும் குறிப்பிடும் போது, ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ளும் தலைவராவார். நான் பல ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் சிலர் நீண்ட கால நோக்கில் நாட்டைப் பற்றி சிந்திக்காமல் செயற்பட்டுள்ளார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக முடிவுகளை எடுக்கக்கூடியவராவார். அதை சில அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது.

உண்மையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இற்றைக்கு பல வருடங்களுக்கு முன் நம் நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்க வேண்டும். அவர் தொலைநோக்கு பார்வை மிக்க தலைவர். நாம் இந்நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

எனினும், நாம் நமது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இன்று உலகிற்கு தேவையான செயற்கை நுண்ணறிவு, இணைய குற்றங்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இக்கல்வி அறிவை எமது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இக்கற்கைகள் சிறப்பு ஆர்வத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இப் பாடநெறிகளுக்கு வருடத்திற்கு சுமார் 10,000 மாணவர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 1000 பேருக்குக் கூட இக்கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதில்லை. இவற்றைக் கற்க வாய்ப்பு கிடைக்கப்பெறாத மாணவர்களில் சுமார் 7000 பேர் இந்தியா செல்கின்றனர். அவை அனைத்தையும் இந்நாட்டில் வழங்க முடியுமென்றால் வருடமொன்றுக்கு சுமார் 5 பில்லியன் டொலர்களை ஈட்ட முடியும். எனவே, உலகிற்குத் தேவையான உயர்கல்வியை வழங்குமாறு எங்களுக்குத் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அந்த பாடப்பிரிவுகளை தொடங்கும் பணியில் நாம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

இப் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை விரைவில் ஆரம்பிப்பதிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரமாக செயற்பட்டுவரும் தேசமான்ய மங்கள செனரத் இது தொடர்பாகக் கூறும்போது, ​​’இப் பல்கலைக்கழகத்தின் மூலம் எமது பிள்ளைகள் மிகவும் நியாயமான விலையில் கற்கை நெறிகளை மேற்கொள்ள முடியும்.

பொதுவாக, வெளிநாட்டில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நிறைய பணம் செலவாகும். ஆனால் நம் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் மிகவும் நியாயமான கட்டணத்தில் பட்டப் படிப்புகளை தொடர முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்பல்கலைக்கழகம் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுகின்றார். இளம் பராயத்தினரின் எதிர்காலம் தொடர்பில் முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். இப்பல்கலைக்கழகத்தை உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்’ என்றார்.

இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஜயந்தலால் சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடமைகளை பொறுப்பேற்று பணிகளை ஆரம்பித்துள்ளார். இங்கு சுமார் 10,000 பிள்ளைகளுக்கு உயர்கல்வி வழங்கக்கூடிய பல பாடநெறிகள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் சில புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் நவீன யுகத்திற்கு அவசியமான வளங்களைக் கொண்டுள்ளது. இது இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய முதலீடு என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT