Home » பா.ஜ.க கூட்டணி வெற்றியை பாதிக்குமா பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ?

பா.ஜ.க கூட்டணி வெற்றியை பாதிக்குமா பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ?

by mahesh
May 4, 2024 7:12 am 0 comment

இந்தியாவில் பா.ஜ.க கூட்டணியைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். வயதில் மூத்த, வீட்டு வேலைக்கார பெண்ணை கூட விடாமல் கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட வைக்கும் காட்சிகள் வெளியாகி கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன.

சிறியதும் பெரியதுமாக, மொத்தம் 3000 வகையான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நூற்றுக்கணக்கான பெண்களுடன் பிரஜ்வல் உறவு கொண்டுள்ளதாக தெரிகிறது. காரியம் சாதித்துக் கொள்ள சில பெண்கள் பிரஜ்வலுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருப்பதும், சில பெண்களை பிரஜ்வல் கட்டாயப்படுத்தியிருப்பதும் வீடியோ பார்த்தவர்களால் உறுதி செய்யப்பட்டது.

அந்த வீடியோக்களில் பிரஜ்வல் எனக் கூறப்படும் நபர் பேசும் மொழி நடை, அவரது வேகம் போன்றவை சைக்கோத்தனமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அது பிரஜ்வல் அல்ல என ஒரு தரப்பு கூறுகின்றது. ஆனால் வீடியோவில் வரும், வீட்டு அறை முதற்கொண்டு அனைத்தும் அவருடையதுதான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

பிரஜ்வல் போட்டியிட்ட ஹாசன் உட்பட 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் திகதி தேர்தல் நடந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் மே 7ம் திகதி எஞ்சிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா உட்பட, 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் அடங்கிய 94 தொகுதிகளுக்கு அன்றைய தினமும் வாக்குப் பதிவு நடக்கிறது.

இதில் உத்தர பிரதேசம், கோவா, குஜராத், அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் அடங்கும். பாஜக பலம் பொருந்திய பல பகுதிகள் என நம்பப்படும் பல மாநிலங்களுக்கு இந்த கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில்தான், அந்தந்த மாநிலங்களில் பிரஜ்வல் வீடியோ ஏற்படுத்திய தாக்கம் ஓரளவு உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சர்வ காலமும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகி வருவது கர்நாடகாவில்தான் என்பதால், முதலில் கர்நாடக மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

சில நாட்கள் முன்பாக பிரதமர் மோடி கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். அவர் வழக்கமாக வருகை தரும்போதெல்லாம் காலை முதல் இரவு வரை மோடி பயணம் மற்றும் பிரசாரத்தை மட்டுமே காட்டும் கன்னட செய்தி டிவி அலைவரிசைகள், இந்த முறை அவரது பிரசாரத்தைக் கூட காட்டவில்லை. பிரஜ்வல் தொடர்பான செய்திகளே முழுமையாக இடம்பிடித்திருந்தன.

மேலும், ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமிக்கே தனது வெற்றியில் நம்பிக்கை இல்லை. சமீபத்தில் குமாரசாமி அளித்த பேட்டியின்போது, மக்களுக்கு பென் டிரைவை ஒரு கேரண்டியாகவே (மக்கள் நல அறிவிப்பு) கர்நாடக காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்று விரக்தி தொனியில் பேசினார்.காங்கிரஸ் கட்சியினர்தான் இந்த பென் டிரைவை மக்கள் கூடும் இடங்களில் வீசிச் சென்றனர் என்பது ஜேடிஎஸ் குற்றச்சாட்டாக உள்ளது. அதைத்தான் குமாரசாமி இப்படிச் சொன்னார். மேலும் குமாரசாமி மிகவும் சோர்வாக உள்ளார்.

அதேநேரம், மே 7ம் திகதி தேர்தலை சந்திக்கும் 14 தொகுதிகளில் ஒன்றில் கூட ஜேடிஎஸ் போட்டியிடவில்லை என்பதும், ஏப்ரல் 26ம் திகதி நடைபெற்ற வாக்குப் பதிவுக்கு சில தினங்கள் முன்புதான் பிரஜ்வல் பற்றிய கிசுகிசு மெல்ல வெளியாக தொடங்கியிருந்தது, அப்போது சூடு பிடிக்கவில்லை என்பதும் பாஜக கூட்டணிக்கு கொஞ்சம் நம்பிக்கையான விஷயங்கள் ஆகும்.

வட மாநிலங்களில் அந்தந்த உள்மாநில விவகாரங்கள் அல்லது மதரீதியான, ஜாதி ரீதியான விஷயங்கள்தான் முக்கிய விவகாரமாக உள்ளதே தவிர பிரஜ்வல் விவகாரம் பெரிய பேசுபொருளாக மாறவில்லை என மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

வட இந்திய ஊடகங்களில் பிரஜ்வல் விவகாரம் அதிக பேசுபொருளாக மாறவில்லை என்பதால் இதன் தாக்கம் அங்கு பெரிய அளவுக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT