Home » வெள்ளிக்கிழமையின் சிறப்புக்கள்

வெள்ளிக்கிழமையின் சிறப்புக்கள்

by sachintha
December 15, 2023 11:40 am 0 comment

எமக்கு முன்னுள்ள சமுதாயத்துக்கு நாட்களை சிறப்பாக்கியது போன்று எமக்கு வெள்ளிக்கிழமையையும் அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான். அந்நாளை அவன் முஸ்லிம்களுக்கு சிறந்த நாளாகவும், நன்மைகளை சம்பாதிக்கும் தினமாகவும் ஆக்கியுள்ளான்.

வெள்ளிக்கிழமையின் முக்கியமான இபாதத்களில் ஒன்றாக, ஜும்ஆ தொழுகை காணப்படுகிறது. வயது வந்த ஒவ்வொரு முஸ்லிமும் இந்த ஜும்ஆவில் கலந்து கொள்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை நாளில் நாம் செய்ய வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றில், நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்லல், ஸூரதுல் கஹ்ப் ஓதுதல், பள்ளிக்கு நேர காலத்தோடு செல்லல், அதிகமாக ஸதகா செய்தல், குளித்தல், இருப்பதில் சிறந்த ஆடை அணிதல், நகம் வெட்டுதல், மணம் பூசுதல் என்பன முக்கியமானவைகளாகும்.

இவ்வாறான சில விடயங்களை நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதன் ஊடாக அல்லாஹ்வின் விருப்பத்துக்குரியவர்களாக நாம் மாறுகின்றோம்.

‘விசுவாசிகளே! (வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தினத்தன்று) தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறிவுடையோராக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்”

(அல் குர்ஆன்- ஜும்ஆ- 09)

ஒவ்வொரு முஸ்லிமும் ஜும்ஆவுக்கு செல்வது கட்டாயக் கடமையாகின்றது என்பதை இவ் வசனத்தின் ஊடாக புரிந்துகொள்ளலாம்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘சூரியன் உதிக்கின்ற நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார். அந்நாளில் தான் ஆதம் (அலை) சுவனம் நுழைவிக்கப்பட்டார். அந்நாளில் நான் அவர்கள் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை அன்றி மறுமை நிகழ மாட்டாது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: ஸஹீஹூல் முஸ்லிம்)

இப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதும் இதே தினத்தில்தான் எனவும் அறிவிப்புகள் உள்ளன. பிரபஞ்சம் அழிக்கப்படும் நாளும் வெள்ளிக்கிழமை என்பதை மேற்கூறப்பட்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக இத்தினத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, நன்மைகளைச் செய்வது கொள்ள வேண்டும். இரு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஸூறா கஹ்ப் ஓதுவதனால் அல்லாஹ் எங்களது சிறுபாவங்களை மன்னிக்கின்றான் எனவும் அறிவிப்புகள் உள்ளன.

இவ்வாறான சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ள வெள்ளிக்கிழமை மாதமொன்றுக்கு நான்கு முறையும் வருடத்தில் 48 முறையும் வந்து செல்கிறது. இன்றிலிருந்தாவது வெள்ளிக்கிழமை தினத்தை சிறந்த முறையில் பயன்படுத்துபவர்களாக நாம் மாறுவோம்.

எம்.எஸ். தஹி…

உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT