Saturday, April 27, 2024
Home » இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த YMMA தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட்

இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த YMMA தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட்

சமூக சேவைகளுக்காக 'ஆசியன் விருது' பெற்று...

by gayan
December 14, 2023 6:11 am 0 comment

இந்தியாவிலுள்ள உலக ஆராய்ச்சி காங்கிரஸின் நிர்வாக குழுவினால் சர்வதேச தலைமைத்துவ விருது வழங்கும் நிகழ்வில் இம்முறை ஆசியாவின் சிறந்த சமூக சேவையாளருக்கான விசேட விருது ‘ஆசியன் விருது’ க்கு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான விருது அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தின்போது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஹமீடின் சமூகப் பணி அளப்பரியது. அவர் தான் சார்ந்துள்ள அமைப்பின் பிரதிநிதியாக நின்று அவர் இளைஞர் சமூகத்திற்கு ஆற்றி வரும் பங்களிப்பு மிகவும் சாலச்சிறந்ததாகும். அவ்வாறு தம் சொந்த வேலைகளைக் கூட கவனத்திற் கொள்ளாது எமது எதிர்கால இளம் சந்ததியினர்களின் மீது அவர் கொண்டுள்ள அதீத பற்றினை நேரடியாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ. கிளையின் வாயிலாக தன்னுடைய வழிகாட்டலுடன் சற்றும் தளராத உறுதியுடனும் எதிர்கால சிந்தனை நோக்குடனும் அவர் செயற்பட்டு வந்தமைக்கு சான்றாக இந்தியாவில் அவரை கௌரவித்து வழங்கப்பட்டுள்ள ‘ஆசியன் விருது’ அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவைக்கும் இலங்கை மண்ணுக்கும் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளது.

சமூகப் பணிக்காக எது வித தடங்களோ பின்னடைவோ இன்றித் தொடர்ச்சியாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் அங்கத்தவராக இணைந்து தொடர்ச்சியாக பதவி உயர்வுகளைப் பெற்று இறுதியாக அதன் தேசியத் தலைவராக செயலாற்றுவது அவருடைய ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் தலைநகரில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உலகப்புகழ்பெற்ற இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மத்திய மலைப்பகுதியான பதுளை நகரத்தில் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரே இஹ்ஸான் ஏ. ஹமீட்.

இவர் தந்தை ஜவாஹிர் ஹமீட், தாயார் மர்ஹூம் நயீமா ஜமால்தீன். இவருக்கு இரு உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரர் இம்திகாப் ஏ. ஹமீட் ஆவார், அதில் இரண்டாவது இஹ்சான் ஏ. ஹமீட். 1975.05.03ஆம் திகதி பிறந்த இவர், காலியைச் சேர்ந்த திருமதி சித்தி மிஸ்ஜா என்ற பெண்மணியினை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர்வதற்கு தனது துணைவியார் செய்த தியாகங்களே காரணமென தெரிவிக்கும் அவர், துணைவியாரை மறக்க முடியாது என விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.

இஹ்சான் ஹமீட், தனது கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் வாழ்வைத் தொடங்கினார். இலங்கையில் CIM இன் முதல் பட்டத்தை மேற்கொண்டார். தற்போது அவர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தில் உதைபந்தாட்ட சங்கத்தின் தற்போது உப தலைவராகவும் முன்னர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் உதவிப் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவர் பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்தே தம் சகோதரர்களுக்கு மனிதாபிமான உதவி செய்து வந்தார். அதேவேளையில் இவர் சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த இவர், அத்துறையில் அனுபவத்தையும் நற்பெயரையும் பெற்றுக் கொண்டு பதுளையில் சொந்த விநியோக மற்றும் விற்பனையாளர் நிறுவனமான HNR Trading கம்பனியை ஆரம்பித்தார், அதில் அவர் முகாமைத்துவப் பணிப்பாளராக இருக்கின்றார்.

1992 ஆம் ஆண்டு YMMA பதுளை கிளையின் செயற்குழு உறுப்பினராக இணைந்து கொண்ட இவர், இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகுந்த பக்கபலமாக இருந்தார். அவருடைய கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையினால் 2008 ஆம் ஆண்டு பதுளை YMMA கிளையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பதுளை YMMA இன் தலைவராக இருந்து, உள்ளக பூப்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பதற்காக நலன் விரும்பிகளின் ஆதரவுடன், செயற்பட்டார். இதன் மூலம் நிரந்தர வருமானமாக கிளைக்கு 60,000.00 முதல் 80,000.00 வரை இன்று கிடைத்து வருகின்றமை இது இவருடைய அயராத முயற்சியாகும்.

2009 முதல் 2011 வரை, கிளையின் முன்னாள் தலைவராகவும், அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்தார். 2012 இல், குழு உறுப்பினர்களின் அதிக ஆதரவுடன், அவர் கிளையின் பொருளாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் (ACYMMAC) வருடாந்த மாநாட்டின் மூலம், இலங்கை முழுவதும் 100 க்கும் மேற்பட்ட கிளைகளின் பங்கேற்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பொருளாளர் என்கின்ற தேசிய விருதுதையும் இவர் பெற்றுக்கொண்டார்.

2013 ஆம் ஆண்டு பதுளை கிளையின் பொதுச் செயலாளராகவும், 2015 ஆம் ஆண்டு பதுளை YMMA கிளையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை முழுவதும் உள்ள 115க்கும் மேற்பட்ட கிளைகளின் பங்கேற்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டில் சிறந்த தலைவருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது

2016 இல் அமைப்பின் இளைஞர் அதிகாரமளிக்கும் திட்டத் தலைவராக இருந்தார். 2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் விளையாட்டுத் துறைத்தலைவராகவும் கடமையாற்றினார். அவர் அக்கிளைகளுக்கிடையே கால்பந்து போட்டியை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு வருடமும் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் சவால் கிண்ணப் போட்டியை நடத்த உந்து சக்தியாக இருந்து வருகின்றார். கிளைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியினை அறிமுகப்படுத்தியமையால் இளைஞர்களுடைய மனதில் மிக இலகுவாக இடம்பிடித்துக் கொண்டவர். இவரின் விளையாட்டுத் துறையின் முயற்சியினால் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ கிளைகளுக்கிடையே நட்புறவு வலுப்பெற்றன. அத்துடன் பதுளையில் வை. எம். ஜீ. ஏ. கிளை ஒன்றை ஸ்தாபித்து அவற்றின் மேம்பாட்டுக்கான வேலைத் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு, தேசிய பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2021 ஆம் ஆண்டு அமைப்பின் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை இளைஞர் முஸ்லீம் சம்மேளன மாநாடு ஒரு தேசிய இளைஞர் மற்றும் இளைஞர் சேவை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும், இது ஒரு வலுவான சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வதற்கும் தலைமைத்துவத்தை வழங்குகிறது.

நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 175 மேற்பட்ட YMMA கிளைகள் உள்ளன. எல்லாக் கிளைகளுக் கிடையே வலைப்பின்னல் அமைந்துள்ளது. இவ்வமைப்பு 30 ஏப்ரல் 1950 இல் காலஞ்சென்ற கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற தொண்டு நிறுவனமாக 1968 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகும். கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ், கல்வியாளர், முதல் முஸ்லிம் அரசு நிர்வாகி. மற்றும் முன்னாள் செனட்டர் ஆவார்.

அகில இலங்கை YMMA மாநாட்டின் (ACYMMAC) பார்வையானது துடிப்பான தேசிய இளைஞர் மற்றும் இளைஞர் சேவை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும், இது ஒரு வலுவான சமூக, பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கும், சலுகைகள் மற்றும் சமூகத்திற்கு சேவை வழங்குவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதாகும்.

(ACYMMAC) இன் நோக்கம், சமூகத்திற்கு நேரடியாகவோ அல்லது உறுப்பினர் YMMAகளின் மூலமாகவோ சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்குவதாகும். இளைஞர்களின் பொருளாதாரத் தரத்தை உயர்த்துதல், வறுமையை ஒழித்தல், பயிற்சிகள் வழங்குதல் இளைஞர்களை வழிநடத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் நிறுவனங்களின் வளங்களைத் திரட்டுதல். கல்வியை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்ட நல்ல குடிமகன் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், சமூக நீதி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதில் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில்இவ்வமைப்பு ஈடுபட்டு வருகின்றன.

இன்று அந்த அமைப்பின் தேசியத் தலைவர் என்ற முறையில், அவர் சமூகத்தின் தேவையறிந்து விழிப்புணர்வூட்டுதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட பின்வரும் திட்டங்களை ஆரம்பித்து வைத்து செயலாற்றி வருகின்றார்.

இவைதவிர, பதுளை மஸ்ஜிதுல் அப்ரார் (ஹைராத்) அறங்காவலர் சபையின் தலைவர், கடந்த 16 வருடங்களாக சேவையாற்றியவர். 2007இல் முதல் பதுளைப்பிட்டிய ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர், பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் பொருளாளர், பதுளை நகர் ஊவா முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் எனச் சமூக சேவகத் துறையில் சமூகத்திற்கு மிகவும் மகத்தான பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக உலகப் புகழ்மிக்க விருதுகைளையும் பாராட்டுக்களையும் தனதாக்கிக் கொண்டவராகின்றார்.

இவர் மிகவும் பெருமதிப்புமிக்க விருதுகள், மனித உரிமைகள் அமைப்பிலிருந்து 2017 ஆம் ஆண்டில் ‘தேச கீர்த்தி’ விருதினையும்,2018 ஆம் ஆண்டில் ‘சாமஸ்ரீ ‘ விருதினையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் லீக்கினால் ‘ஹபீபுல் இன்சானி’ விருது போன்ற சிறப்புமிக்க விருதுகளையும் பெற்றவர்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT