Sunday, April 28, 2024
Home » சர்வதேசப்புகழ் எழுத்தாளர் படைப்புகளை தமிழ்மொழிக்குக் கொண்டுவந்துள்ளேன்

சர்வதேசப்புகழ் எழுத்தாளர் படைப்புகளை தமிழ்மொழிக்குக் கொண்டுவந்துள்ளேன்

by mahesh
December 13, 2023 10:20 am 0 comment

கலை இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர் எச்.எச். விக்கிரமசிங்கவும், கேகாலை சென். மேரிஸ் கல்லூரி முன்னாள் அதிபர் மருதன் கிருஷ்ணனும் என்னைச் சந்தித்த போது, நான் தற்போது தமிழாக்கம் செய்து கொண்டிருக்கும் பிறமொழிச் சிறுகதைகளைத் தொகுதியாக வெளிக்கொணரலாம் என நான் விருப்பம் தெரிவித்தேன். அதற்கான முழுப்பொறுப்பையும் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

மு.நித்தியானந்தனும், எச்.எச்.விக்கிரமசிங்கவும் இணைந்து அடிக்கடி என்னோடு தொடர்புகொண்டு, இந்நூல் செம்மையாக வெளிவரக் காரணமாக இருந்தனர். இவ்விருவருக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.

பேராசான் மு.நித்தியானந்தனின் அணிந்துரை இந்நூலுக்கு அணிகலனாகத் திகழ்கின்றது.

ரஷ்யன், துருக்கி, நைஜீரியன், இந்தி, மலையாளம், பிரெஞ்சு, வங்காள, உருது என இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பத்துச் சிறுகதைகள் ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து கவிஞரும் எழுத்தாளருமான சாலிய குணவர்த்தனவினால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டவை ஆகும். ஏனைய நான்கும் சிங்களக் கதைகள். சிங்கள மொழியிலிருந்தே அனைத்துக் கதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளேன். எனது வாசிப்பு அனுபவத்தின் தெரிவுகளே இக்கதைகள் ஆகும். சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சில படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கின்றேன் என்ற மனநிறைவு எனக்கு உண்டு. எனது ‘கோடிச்சேலை’ தொகுப்பின் எல்லாக் கதைகளும் மீரிகம டி.எம்.ரன்வீர் என்ற எழுத்தாளரால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரமாகி உள்ளன. மாத்தளை அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், பல்லேபொல்ல பிரதேச செயலாளர் அனைவரும் என்னை அறிந்து வைத்திருக்கக் காரணம் என் படைப்புக்கள் சிங்கள, ஆங்கில மொழிகளில் வெளிவந்தமை ஆகும்.

சிங்கள இலக்கிய நிகழ்வுகளில் ‘அவையில் முன்இருக்கை’ தருவதும், ‘தீபம் ஏற்றுவதில்’ ஒருவராக என்னையும் சேர்த்துக் கொள்வதோடு, மேடையில் மாணவர், மாணவியருக்கு பரிசில்கள் வழங்குகையில் எனது கைகளாலும் பரிசில்கள் வழங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனது பன்னிரண்டு சிறுகதைகளைத் தெரிவு செய்து பண்ணாமத்துக் கவிராயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் ‘Genesis’ என்ற தலைப்பில் வெளியாகி, தமிழறியாத வாசகப்பரப்பிற்கு என்னை நன்கு அறிமுகப்படுத்தியது.

நோர்த் மாத்தளை தோட்டத்தில் பிறந்து, தற்போது கொழும்பில் வாழ்ந்து வரும் எனது அன்புக்குரிய எச்.எச்.விக்கிரமசிங்க மலையக எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். அவருடைய முயற்சியை மதித்துப் போற்றுகிறேன். அவரின் பேருழைப்பில் எனது இந்த நூல் பிரசுரம் பெறுவது எனக்குப் பெருமை சேர்க்கிறது.

மலரன்பன் கூறுகின்றார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT