Saturday, April 27, 2024
Home » ஐக்கியத்துடன் முயன்றால் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும்

ஐக்கியத்துடன் முயன்றால் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும்

உலகத் தமிழ் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் நம்பிக்ைக

by gayan
December 12, 2023 1:04 pm 0 comment

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தேர்தலின் போது பொதுமக்களிடம் முன்வைத்து சகலதரப்பினரின் அங்கீகாரத்துடன் அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலகத் தமிழ் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் உலகத் தமிழ் பேரவையும் சில முக்கிய பௌத்த பிக்குகளும் இணைந்து ‘சிறந்த இலங்கைக்கான சங்கம்’ என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் குழுவினர் கண்டி அஸ்கிரிய ஸ்ரீ தம்மகீர்த்தி மகாநாயக்கதேரர் அவர்களை சந்தித்து, இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் கௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் அச்சம், சந்தேகமின்றி நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கான கொள்கைப் பிரகடனத்தை கையளித்திருந்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது உலகத் தமிழ் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடந்தும் தெரிவித்ததாவது:

“இந்நிகழ்வை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகப் பார்க்கின்றேன். கடந்த 75 வருடகாலத்தில் பௌத்தசமயத் தலைவர்களைப் பார்த்து நாங்கள் இதுவரையிலும் அவர்கள் மீது குறைகளைக் கூறி இருக்கின்றோம். ஆனால் அவர்களுடன் பேசி தமிழ் மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் ஏன் மறுக்கின்றார்கள் என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோமா? நாம் அறிந்தவரையிலும் அவ்வாறான வரலாறு இல்லை. இத்தனை காலம் கடந்த பின்னர் நேபாளத்தின் நாகர்கோயிலில் சந்தித்துக் கொண்ட நாம், ஏப்ரல் மாதத்தில் நான்குநாட்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். வெளிப்படையாக மனம்விட்டுப் பேசினோம். சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடி ‘இமாலயாவின் பிரகடனம்’ என்ற ஒன்றை ஏற்படுத்தினோம்.

அவற்றில் ஆறு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு இருக்கின்றோம். அக்கருத்தினைக் கொண்ட அறிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகக் கையளித்துள்ளோம். அதன் போது ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்த விடயங்களில் அதிகாரப் பகிர்வு என்பது முக்கியமான விடயம். ‘இலங்கையின் ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதிகாரப் பகிர்விலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகின்றோம். அவர்களில் சிலர்தான் இருக்கின்றனர். அவர்களில் ஓரிரு நபர்களை விடுவிப்து கடினமாக இருக்கும். ஏனையவர்களை விடுதலை செய்யவுள்ளோம்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கின்றேன். காணி விடயங்களில் பல தீர்மானங்களை கவனத்தில் கொண்டு, 1985 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்தார்” என்று சுரேன் சுரேந்திரன் அந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டு இருப்பதனால் அப்பிரதேச அபிவிருத்தி விடயங்களை மேற்கொள்வதில் கரிசனை கொண்டிருப்பதாகவும், திருகோணமலை மாவட்டத்தை அடிப்படை அபிவிருத்தித் தளமாக உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெறவிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

“பொருளாதார ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நாட்டை முன்கொண்டு செல்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் இருக்கின்றோம். உலகிலேயே தனித்துவமான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றமுடியும். ஐக்கியமான முயற்சியின் ஊடாக மாற்றம் செய்யலாம்” என்று சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது அமெரிக்கா, கனடா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தஉலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளான வேலுப்பிள்ளை கருணாகரன் (இங்கிலாந்து), ​ெடாக்டர் சாந்தினி ஜயராஜா (அமெரிக்கா), தனபாலசிங்கம் சுரேந்திரன் (இங்கிலாந்து), டொக்டர் கண்ணப்பா முகுந்தன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தபவகுகன், (இங்கிலாந்து), பிரகாஷ் ராஜசுந்தரம் (அவுஸ்ரேலியா), ராஜ் தேவரட்ணசிங்கம் (கனடா), ​ெடாக்டர் எலியஸ் ஜயராஜா (அமெரிக்கா) ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் இச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த தேரர்களான மாதம்பகைம அஸ்ஸஜி திஸ்ஸ் தேரோ, அம்பேபிடிட்டி அனுநாக தேரோ,வடக்கு_கிழக்கு பிரதான சங்கநாயக்க தேரர் சியம்பலகஸ்வெவ விமலசார தேரர்,கிதுல்கல ஹேமசாரநாயகதேரர், பேராசிரியர் பல்லேகந்தரத்தனசாரதேரர், கலுபஹனபியரட்ன தேரர், நாரம்பன வதம்மலோகதேரர், வெலத்தரசோபித அனுநாயக்க தேரர், வெத்துவதம்பவன்ச தேரர்ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT