Saturday, April 27, 2024
Home » ஒருநாள், டி20 போட்டிகளில் ஓவர்கள் இடையே 60 விநாடி நேரக் கட்டுப்பாடு

ஒருநாள், டி20 போட்டிகளில் ஓவர்கள் இடையே 60 விநாடி நேரக் கட்டுப்பாடு

-ஐ.சி.சியின் புதிய விதி அறிமுகம்

by sachintha
November 23, 2023 6:00 am 0 comment

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டத்தின் வேகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ஓவர்களுக்கு இடையில் நேரக் கட்டுப்பாடு ஒன்றை சோதனை நடவடிக்கையாக செயற்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் தீர்மானித்துள்ளது. இந்த அதிரடி திட்டத்தின்படி இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு நிமிடத்திற்குள் புதிய ஓவரை ஆரம்பிக்க மூன்று தடவைகள் தவறினால் ஐந்து தண்டனை ஓட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

ஐ.சி.சி. தலைமை நிர்வாகிகள் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் எதிர்வரும் டிசம்பர் தொடக்கம் 2024 ஏப்ரல் வரை ஆறு மாதங்களுக்கு “சோதனை அடிப்படையில்” நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்த நேரக் கட்டுப்பாட்டு முறை முதல் தடவையாக அமுல்படுத்தப்படவுள்ளது.

“ஓவர்களுக்கு இடையில் எடுத்துக் கொள்ளும் நேர அளவை ஒழுங்குபடுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும்” என்று ஐ.சி.சி. வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. “பந்து வீசும் அணி முந்தைய ஓவரை பூர்த்தி செய்து 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை பந்துவீச தயாராகாத பட்சத்தில், இன்னிங்ஸ் ஒன்றில் அவ்வாறு மூன்று தடவைகள் நிகழும்போது ஐந்து தண்டனை ஓட்டங்கள் செயற்படுத்தப்படும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்தமாக பந்து வீசுவதை தவிர்ப்பதற்காக ஐ.சி.சி 2022 இல் ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் போட்டித் தண்டனை முறையை அறிமுகம் செய்தது. தற்போதைய போட்டி நடைமுறையின்படி, களத்தடுப்பில் ஈடுபடும் அணி குறிப்பிட்ட நேரத்தில் கடைசி ஓவரை ஆரம்பிக்க தவறினால் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியில் இருந்து ஒரு களத்தடுப்பாளர் அகற்றப்படுவார்.

மூன்றாவது நடுவர் டைமர் ஒன்றின் மூலம் காலத்தை ஒழுங்குபடுத்தும் அதேநேரம், ஏதேனும் கால தாமதம் அவதானிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் களத்தில் உள்ள நடுவர்களை அறிவுறுத்துவார்.

இந்த விதி கடந்த ஜனவரியில் டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கடந்த ஜூன்–ஜூலையில் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது மந்தமாக பந்துவீசுவதற்கு வீரர்களுக்கு வழங்கபடும் அபராதங்களுக்கு மேலதிகமானதாகவே அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ஸ்டொப் க்ளொக்’ எனும் நேரக் கட்டுப்பாட்டு முறை விளையாட்டில் புதிதல்ல. டென்னிஸ் போட்டிகளில் புள்ளிகளுக்கு இடையே பந்தை சேர்வ் செய்வதற்கு 25 விநாடிகளுக்குள் வீரர்கள் தயாரா இருக்க வேண்டும் எனும் ‘ஷொட் க்ளொக்’ முறை அமுலில் உள்ளது.

இந்த ‘ஷொட் க்ளொக்’ முறையை மூன்று வகை கிரிக்கெட்டிலும் செயற்படுத்துவதற்கு எம்.சி.சியின் உலக கிரிக்கெட் குழு 2018 ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. முன்னாள் சர்வதேச அணித் தலைவர்களான ரிக்கி பொண்டிங், சவ்ரொவ் கங்குலி மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் உள்ளடங்கிய இந்தக் குழு, போட்டி ஒன்றில் விளையாடப்படாத நேரத்தில் ‘ஷொட் க்ளொக்’ முறையை பயன்படுத்த பரிந்துரைத்தது.

இதேநேரம் ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் நடுவர்களுக்கு போட்டிக்கு சமமான ஊதியம் வழங்கவும் ஐ.சி.சி. தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பருவத்தை அடைந்த ஓர் ஆண், பாலின மாற்ற அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினாலும் அவருக்கு மகளிர் அணியில் இடம் அளிக்கப்படாது என்ற புதிய கொள்கை முடிவை ஐ.சி.சி மேற்கொண்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டின் தரத்தையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT