Home » இனப்பிரச்சினை தீர்வுக்கும் ஒன்றிணைய வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வுக்கும் ஒன்றிணைய வேண்டும்

by sachintha
November 23, 2023 9:51 am 0 comment

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையே தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மூல காரணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் சபையில் தெரிவித்தார்.

கிரிக்கெட்டுக்காக ஒன்றுபட்டதைப் போன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் ஆளும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரி அடையாள அட்டையை அமுல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாலியாறு திட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கடந்த ஆறு தசாப்தகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பாலியாறு திட்டத்தினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள். அத்துடன் 41.2 எம்.சி.குடி நீருக்காகவும், 4.7 எம்.சி. விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்துக்காக ஆரம்பக்கட்டமாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கான நதி திட்டத்துக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

ஆனால் அந்த திட்டம் செயற்படுத்தப்படவில்லை. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 250 மில்லியன் ரூபா நிதி நடைமுறைக்குச் சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT