Saturday, April 27, 2024
Home » இளைஞனின் மரணத்துக்கு நீதி கட்டாயம் வேண்டும்

இளைஞனின் மரணத்துக்கு நீதி கட்டாயம் வேண்டும்

by sachintha
November 23, 2023 7:54 am 0 comment

சபையில் சித்தார்த்தன் எம்.பி வலியுறுத்து

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு நீதி வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (21) பேசிய அவர், வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய இறப்பு தொடர்பான ஒரு விடயத்தை இச்சபையிலே கூறுவதற்கு நான் விழைகிறேன்.

முதலாவதாக, இந்த மாதம் எட்டாம் திகதி நாகராஜா அலெக்ஸ் என்ற 28 வயதான ஒரு இளைஞர் சித்தங்கேணி பகுதியிலே வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரைப் பிடித்தவர்கள் பின்பு 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி நீதிபதி கட்டளையிட்டதால், 12ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்பு, வைத்தியசாலையால் விடுவிக்கப்பட்ட அவ்வி ளைஞரை யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்தார்கள்.

மீண்டும் நோய்வாய்ப்பட்டு விட்டார் என்ற காரணத்திற்காக 19 இல்,மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்தில் அங்கு அவ்விளைஞர் இறந்துவிட்டார்.

அவரை பிரேத பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். அது ஒரு இயற்கை மரணமல்ல.

அவர் மீது நடத்திய தாக்குதலில் கிட்னியில் பிரச்சினை, ஏற்பட்டுள்ளது.

அடிகாயங்களும் உடம்பில் உள்ளன. இதனால், பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். சாதாரணமாக தமிழ் பகுதிகளிலே இப்படியான நிலைமைகள் நடந்துவிட்டால் இடம்மாற்றுவதும் அதை மறந்து விடுவதும் தொடர்கின்றன.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலேயொழிய இப்படியான நிலைமைகளை ஒருபோதும் திருத்த முடியாது. இது ஒரு மிகப் பாரதூரமான விடயம் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT