Sunday, July 21, 2024
Home » வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்ட எனக்கு கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்ட எனக்கு கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்

- ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி

by Gayan Abeykoon
November 15, 2023 6:28 am 0 comment
  • 2024 பட்ஜெட் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும்
  • அரசியலை விடுத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றுத்திற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதே எனது நோக்கமாகும்
  • நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் போக்கை மாற்றும் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம்

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே தான் நெருங்கிவிட்டதாகவும், அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தனது முதல் கடமையாகும் எனவும் அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது அரசாங்கச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம். மேலும், மத்திய வங்கியின் சட்டத்தின்படி இப்போது எமக்கு பணத்தை அச்சிடவோ வங்கிகளிடம் கடன் பெறவோ முடியாது. மேலும், அரசாங்கத்திற்கு பெறக்கூடிய கடன்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பெருமளவு தொகை கடன்கள் செலுத்தவேண்டியுள்ளது.

குறிப்பாக, பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது வருவாயை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதுவரை நம் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை வெற்றிபெறவில்லை. 1972 இல் முழுமையான சோசலிசப் பொருளாதாரம் பின்பற்றப்பட்டதோடு 1977 இல் பொருளாதாரத்தின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டது.பொருளாதாரத்தை திறந்து அரச நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் இதை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் மிகப்பெரிய தனியார்மயத்தை மேற்கொண்டு வருகின்றோம். அதாவது காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முழு உரிமையை வழங்க வேண்டும். மேலும் குறிப்பாக அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த உரிமை வழங்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத்திற்காக 500 பில்லியன் முதல் 1 டிரில்லியன் ரூபாய் வரை சொத்துக்களை உள்ளடக்கியுள்ளோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினை விற்றாலும் இந்தச் சேவைகள் அனைத்தையும் சேர்த்தாலும் இந்தத் தொகை கிடைக்காது. இவற்றின் உற்பத்தியை இப்போது அதிகரிக்கலாம். நாங்கள் எடுத்துள்ள ஒரு பாரிய நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இது இலங்கையின் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகும்.

சாதாரண மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் நில உரிமையை வழங்கவில்லை. ஷங்ரில்லா ஹோட்டலுக்கு நில உரிமையை வழங்கினோம். ஆனால் இது சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்காகவே மகவெலி ஆரம்பிக்கப்பட்டது. சீ மற்றும் எச் வலயங்களில் உள்ள நிலம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இப்போது இவை அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். எங்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் மற்றும் சந்தை தேவை என்பதால், RCEP அமைப்பைப் போன்றே இந்தியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எங்கள் சந்தையை விரிவுபடுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாம் ஒரு போட்டி பொருளாதாரமாக மாற வேண்டும். போட்டியற்ற வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்காக நாம் தனியான உதவிகளை வழங்குகிறோம்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் குறுகிய கால திட்டங்களாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயமாக்கல் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். விவசாயத்தை நவீனமயமாக்கினால், நாட்டில் பாரிய விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

சுற்றுலாத்துறையின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரிக்கவும் எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் முன்னோக்கிச் செல்லவும் எதிர்பார்க்கிறோம். இதுவரையில் அதுபற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கான மனித வளமும் அவசியப்படுகிறது. கல்வி முறையில் மாற்றம் செய்து அந்த தேவையை பூர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்டங்கள் உருவாக்கப்படும். பல்கலைக்கழங்களில் கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு கடன் தொகையும் வழங்கப்படும். அதேபோல் தொழிற் பயிற்சித் துறையை மறுசீரமைத்து மாகாண சபைகளின் கீழ் நடத்திச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபைகளுக்கு ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு காணப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்களும் வருமான வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அந்த பணிகளை 2030க்குள் செய்து முடிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நாம் புதிய பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம்.

அதேபோல் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பல்வேறு அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளன. அதனால், நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

ஊழல் ஒழிப்புக்கான சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள அதேநேரம், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து அரசியலமைப்புச் சபையினால் அதற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படும் வரையில் காத்திருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துனான பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக “அரச நிர்வாக பகுப்பாய்வு” செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சிங்களம் – தமிழ் மொழிகளில் கிடைத்தவுடன் அதனை செயற்படுத்துமாறு அறிவிப்போம்.

அதனை மேற்பார்வை செய்வதற்கான பாராளுமன்றத்தில் மேற்பார்வைக் குழுவொன்றை நிறுவ உள்ளோம். மோசடி தொடர்பில் தேடியறிந்து அதனை கட்டுப்படுத்துவதே எமகு நோக்கமாகும்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் செய்யப்பட்டதை போன்று பாராளுமன்ற தரநிலை தொடர்பான வரைபை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அதனால், நாட்டில் காணப்படும் அரசியல் முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது மாற்றங்கள் அவசியமா என்பதை தேடியறிவதற்கான ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளோம்.
அரசியல் கட்சிகள் உரிய வகையில் செயற்படாவிட்டால் ஜனநாயகம் இருக்காது. எனவே அரசியல் கட்சிகளை நிர்வகிப்பது எப்படி, தேர்தல் சட்டம் மற்றும் செலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், ஜனசபை முறைமையை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். ஒரு வருடத்திற்கும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சூழலிலேயே தற்போதைய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எச்.சமரதுங்க குறிப்பிட்டதாவது.

இலங்கைப் பொருளாதாரத்தின் முழுமையான தரவுகள் எம்மிடம் இல்லை. 2022 இல் நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றிய தரவுகளே எங்களிடம் உள்ளன. கடந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக முடங்கியது. இந்த வருடத்திலும் பொருளாதாரம் 2% ஆக முடங்கியது.

ஆனால், 2024 பொருளாதாரம் வளர்ச்சி காணும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில், 1.8% நேர் பெறுமதியிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

2022 ஏப்ரல் மாதமளவில் நாட்டின் கையிருப்பு 24 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதனை 3.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கச் செய்துள்ளது. அடுத்த வருடம் அடிப்படைக் கணக்கில் அதிகரிப்பை காண முடியும் என எதிர்பார்க்கப்படுவதோடு. கடன் மீள் செலுத்துகையின் போது அடிப்படை கணக்கு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகன இறக்குமதி தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கையிருப்பும் வரையறுக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 2023 உடன்படிக்கையின் படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது. இது வரையிலான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றியளித்துள்ளன.

இருதரப்பு கடன்கள் மற்றும் இறையாண்மை பத்திர கடன்கள் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தால் செலுத்தப்படவில்லை. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் தொடர்ந்து திருப்பிச் செலுத்தப்பட்டன. செலுத்தப்படாத தொகை எஞ்சியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் பின்னர் மேற்படி கடன் தொகையை செலுத்த முடியும்.

அடுத்த வருடம் 4127 பில்லியன் வருமானம் அரசாங்கத்திற்கு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவு 6978 பில்லியன் ரூபாகவும் பட்ஜெட் இடைவெளி 8% என்ற குறைந்த அளவில் உள்ளது. பணம் அச்சிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது. அரச வங்கிகளின் கடன் வழங்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு பணத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்துக்கமைய கடன் பெறுதலின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு ஏற்றவாறு பணத்தை ஈட்டிக்கொள்ள வேண்டிய தேவை உருவாகும்.

சர்வதேச நிதியத்தின் 4 வருட வேலைத்திட்டத்திலும் வரவு செலவு திட்டத்திலும் அதற்கு அவசியமான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. வரவும் செலவும் ஒரே அளவில் காணப்படுவதால், பெருமளவான மாற்று திட்டங்களுக்கு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு அமைய அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச கடன் வழங்குநர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்

அந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இது சாதாரண காலத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டம் அல்ல. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை எட்டினோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு வெளியே அரசாங்கம் செயல்பட முடியாது. பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணியே இடம்பெறுகின்றது. கடந்த 16 மாதங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 85 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாக பொருளாதாரத்தை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை தயாரிக்கவும் அதில் முன்மொழியப்பட்டுள்ளது. உற்பத்திச் சந்தையில் உள்ள குறைபாடுகளுக்கு, புதிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவது குறித்தும் பட்ஜெட் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தைகள் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் உள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று நீண்டகாலமாக தீர்க்கப்படாத காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கான கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம். அந்த இரண்டு திட்டங்களின் நிதி ப் பெறுமதி சுமார் இரண்டு டிரில்லியன் ரூபாய். அந்த சொத்துக்கள் நாட்டின் சந்தையில் இணைக்கப்படுகிறது என்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கினார்.

கேள்வி:கிரிக்கெட் அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்க உங்களிடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா?

பதில்: சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான கலந்துரையாடலை நடத்த கிரிக்கட் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் இழந்த போட்டிகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கிரிக்கெட்டுக்காக 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஏனைய பிரதேசங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும். 2030ஆம் ஆண்டு வரை இவ்வாறு பணம் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது நாம் உலகில் முதல் இடத்தை அடைய முடியும்.

காமினி திசாநாயக்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாகவே 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றோம். அப்போது பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்காக நான் பல்வேறு செயற்பாடுகளைச் செய்தேன். கார்பீல்ட் சோபஸ் இலங்கைக்கு வருகை தந்து எங்களுக்கு உதவினார். இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமாயின் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி:நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்த்தாலும், அது இன்னும் நடக்கவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

பதில்:நவம்பர் மாதம் இன்னும் முடியடையவில்லை. நாம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளோம். அந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமான ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளன. அது தொடர்பில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் டிசம்பர் 6ஆம் திகதி தான் நாம் சந்திப்போம். எனவே டிசம்பர் மாதம் இறுதி வரை பார்ப்போம். இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். ஏற்கனவே வெஸ்டன் மிலன், அதானி போன்ற முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோல்வியடைந்த நாடு என்றால், இவ்வாறு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

கேள்வி:நீங்கள் முன்வைத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பதிலளித்துள்ளதா? சில தரப்பினர் கூறுவது போன்று வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தான் உள்ளதா?

பதில்:இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எனக்கு பதில் வரவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாங்கள் செயற்பட்டுள்ளோம்.வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT