Sunday, April 28, 2024
Home » இலங்கை – இந்தியா போட்டியின் முக்கிய குறிப்புகள்

இலங்கை – இந்தியா போட்டியின் முக்கிய குறிப்புகள்

by gayan
November 4, 2023 6:02 am 0 comment

இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துள்ளது. மும்பாய், வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இந்திய அணி அரையறுதிக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் சில வருமாறு,

*இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆவர் ஆடிய 14 உலகக் கிண்ண இன்னிங்ஸ்களிலும் மொத்தமான 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களான ஜவாகல் ஸ்ரீனாத் மற்றும் சஹிர் கானின் (44) சாதனையை முறியடித்தார்.

*ஷமி ஒருநாள் போட்டிகளில் 4 தடவைகள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரீனாத் மற்றும் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்தார். முன்னதாக இந்த இரு வீரர்களும் தலா மூன்று தடவைகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அதிலும் உலகக் கிண்ணத்தில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது மூன்றாவது முறை. இதன்மூலம் மிச்சல் ஸ்டார்க்கின் சாதனையை அவர் சமப்படுத்தியுள்ளார்.

*ஷமி ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 7 தடவைகள் நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது வேறு எந்தப் பந்துவீச்சாளர்களை விடவும் அதிகமாகும்.

*பதிலெடுத்தாடிய இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு சுருண்டது ஒருநாள் உலகக் கிண்ணத்தில் நான்காவது மிகக் குறைந்த ஓட்டங்களாகும். எனினும் இது ஐ.சி.சி முழு அங்கத்துவ நாடு ஒன்று பெற்ற மிகக் குறைவாக ஓட்டமாகும். முன்னதாக 2011 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளிடம் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது குறைவாக இருந்தது.

* இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஒருநாள் உலகக் கிண்ணத்தில் ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த வாரம் நெதர்லாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 309 ஓட்டங்களால் வெற்றியீட்டியதற்கு மாத்திரமே இது பின்தங்கியுள்ளது. எனினும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 300க்கும் அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணி ஒன்று வெற்றியீட்டியது இது நான்காவது முறையாகும். இந்த நான்கு போட்டிகளும் இந்த ஆண்டிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2023 இல் இலங்கை அணி 4 தடவைகள் 100க்கும் குறைவான ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்று ஒருவருடத்தில் நிகழ்த்திய மோசமான சாதனை இது தான். இந்த நான்கில் மூன்று தடவைகள் இந்தியாவுக்கு எதிராக இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றம் கண்டுள்ளனர். இப்படி எதிரணிக்கு எதிராக ஓர் ஆண்டில் அதிகமுறை மண்டியிட்டதிலும் இது தான் முதலிடத்தில் உள்ளது.

*மொஹமட் சிராஜ் முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணிக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறார். இலங்கைக்கு எதிராக சிராஜ் ஆடியிருக்கும் ஆறு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் பத்து ஓவர்களில் 85 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் பந்துவீச்சு சராசரி 5.31.

*இந்தப் போட்டியில் இலங்கை அணி மொத்தமாகப் பெற்ற 55 ஓட்டங்களை விடவும் இந்தியாவின் 3 துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியின் மொத்த ஓட்டங்களை விடவும் 3 துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெறுவது இது மூன்றாவது சந்தர்ப்பமாகும். 2003 உலகக் கிண்ணத்தில் நமீபியா 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோது முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 88, அன்ட்ரூ சிமன்ட்ஸ் 59 மற்றும் டெரன் லீமன் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அதேபோன்று 2012 பார்லில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணியில் ஹாஷிம் அம்லா 112, ஜக் கலிஸ் 72 மற்றும் ஏ.பி. டிவிலியர்ஸ் 52 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இதில் இலங்கை அணியின் முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்களும் சேர்ந்து வெறுமனே 2 ஓட்டங்களையே பெற்றனர். இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் ஒன்றில் மிகக் குறைவாகும்.

*இலங்கை அணி முதல் எட்டு விக்கெட்டுகளையும் 29 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் எட்டு விக்கெட்டுகளையும் குறைந்த ஓட்டங்களுக்கு பறிகொடுத்ததில் இது நான்காவது இடத்தை பிடித்ததோடு உலகக் கிண்ணத்தில் இதுதான் குறைவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT