Sunday, April 28, 2024
Home » இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும்

இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 6:34 am 0 comment

இலங்கையில் வாழும் இந்திய வம்சாளி சமூகம் இங்கு வந்து இருநூறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ‘நாம் 200’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள வைபவம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இவ்வைபவத்தில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விஷேட அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாளி மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இவ்வைபவம் அம்மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் அவர்களது தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பக்கபலமாக அமையும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

இற்றைக்கு இரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவும் இலங்கையும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்தன. அக்காலப்பகுதியில், அதாவது 1820 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஆதிலெட்சுமி என்ற படகில் இந்திய வம்சாவளி மக்களில் ஒரு தொகுதியினர் இங்கு வந்தனர். அவர்கள்தான் இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி இந்திய வம்சாவளி மக்களாவர் என வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் 1840 களில் பிரித்தானியர் இலங்கையில் அறிமுகப்படுத்திய கோப்பித் தோட்டங்களில் வேலை செய்யவும் இந்தியாவிலிருந்து ஒரு தொகுதி வேலையாட்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள சாதாரண கிராமங்களில் இருந்து தொழிலுக்கென திரட்டப்பட்டு தனுஷ்கோடிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து படகுகள், கப்பல்கள் மூலம் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து சுமார் 252 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைநாட்டு நகரமான மாத்தளைக்கு காட்டுவழியாகவும் கால்நடையாகவும் இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இப்பயணத்தின் போது இம்மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானதோடு சிலர் கொலரா போன்ற தொற்று நோய்களுக்கு உள்ளாகி உயிரிழந்துமுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்கள்தான் தேயிலை, இறப்பர் உள்ளிட்ட பெருந்தோட்டங்களில் தொழில்களில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அந்தந்தத் தோட்டங்களில் குறைந்த கூலியில் 15, 16 மணித்தியாலயங்கள் என்றபடி வேலை வாங்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கென அந்தந்தத் தோட்டங்களிலேயே லயன் அறைகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்தியா வம்சாவளி மக்கள், இந்நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டிருந்த காலம் முதல் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றார்கள். அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக இம்மக்கள் பணியாற்றும் பெருந்தோட்டத்துறையும் விளங்குகிறது.

அவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள துறையில் பணியாற்றிவரும் இந்திய வம்சாவளி தொழிலாளர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் இன்னும் கீழ்மட்டத்திலேயே உள்ளது. இந்நாட்டின் ஏனைய சமூகத்தினரின் தரத்திற்கு முன்னேற்றமடையாதவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த மக்களின் மூதாதையர் இங்கு வந்து 200 வருடங்களாகியுள்ள போதிலும், அவர்களது சந்ததியினரில் ஒரு தொகுதியினருக்கு இந்நாட்டில் இன்னும் காணி உரிமை இல்லாதுள்ளது.

இருப்பினும் இந்திய வம்சாவளி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவே செய்கின்றன. இருந்த போதிலும் அவர்கள் ஏனைய சமூகங்களைப் போன்று சமூக, பொருளாதார ரீதியில் இன்னும் முன்னேற்றம் அடையாதவர்களாகவே உள்ளனர்.

இந்த மக்கள் இந்நாட்டின் மேம்பாட்டுக்காக அளித்துள்ள பங்களிப்புக்களை நினைவு கூரும் வகையில் இந்த ‘200 நாம்’ வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய வைபவமான போதிலும் இந்திய வம்சாவளி மக்களின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தப் பங்களிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டும். அதுவே மக்களின் கருத்தாகும்.

உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும். அவர்களது லயன் அறை வாழ்வு முடிவுக்கு வர வேண்டும். அதனால் இம்மக்களின் முன்னேற்றத்தின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டகளுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அப்போது ஏனைய சமூகங்களைப் போன்று இந்திய வம்சாவளி மக்களும் முன்னேற்றமடையும் காலம் வெகுதூரத்தில் இராது என்றால் மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT