Home »  ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய் பேசிய அரசியல்

 ‘லியோ’ வெற்றி விழாவில் விஜய் பேசிய அரசியல்

- அப்பா - மகன் ஒப்பீடு; முயல் - யானை கதை

by Prashahini
November 2, 2023 4:23 pm 0 comment

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (01) நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியவை சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. விஜய் சொன்ன குட்டிக் கதை, காக்கா – பருந்து, அப்பா – மகன் ஒப்பீடு உள்ளிட்ட விஷயங்கள் அவரது அரசியல் வருகையுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். மேடை ஏறியதுமே ‘நான் ரெடிதான் வரவா?’ என்ற ‘லியோ’ பாடலைப் பாடி பீடிகையுடனே தனது பேச்சை தொடங்கினார் விஜய்.

தனது வழக்கமான குட்டிக் கதையை விஜய் சொல்லத் தொடங்கி, ஒரு காட்டில் மான், மயில், முயல் என்று சொல்லிக் கொண்டே வந்து, ‘காக்கா, கழுகு’ என்று அழுத்திச் சொன்னதும் அரங்கமே ஆர்ப்பரிப்பில் அதிர்ந்தது. பின்னர், “காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன்ப்பா” என்று ஒருவாறு சமாளித்தார். “ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். இன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயலை வேட்டையாடினார். ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர்” என்று கூறி எதை ஆசைப்பட்டாலும் பெரிதாக ஆசைப்பட வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.

குட்டிக் கதையை முடித்துவிட்டு, தொடர்ந்து பேசிய விஜய், “வீட்ல ஒரு குட்டிப் பையன் அப்பாவோட சட்டையை எடுத்துப் போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உக்காந்துக்குவான். அந்த சட்டை அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளன்னு இருக்கும். வாட்ச் கையிலயே நிக்காது. அந்த சேர்ல உட்காரலாமா? வேணாமா? தகுதி இருக்கா? இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அது அப்பா சட்டை. அப்பா மாதிரி ஆகணும்ன்னு கனவு. இதுல என்ன தவறு. அதனால நீ பெருசா கனவு காணு நண்பா” என்று பேசியதுதான் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ‘அப்பா – மகன்’ என்று குறிப்பிட்டு விஜய் யாரை சொல்கிறார் என்றும் பலரும் தங்களுடைய யூகங்களை முன்வைத்து வருகின்றனர்.

“எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ணி இருப்பாங்க. அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை” என்று தனது எதிர்கால விருப்பத்தையும் தனது உரையின் இடையே முன்வைத்தார் விஜய்.

இறுதியாக, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-ன்னா அது ஒருத்தர் தான். அதே போல ‘தளபதி’க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்கள். நான் செய்கிறேன்” என்று தன்னுடைய ‘அரசியலை’ அழுத்தமாக முன்வைத்தார்.

நிறைவுப் பகுதியாக விஜயிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘ரேபிட் ஃபயர்’ போல சில கேள்விகளை ஒற்றை வார்த்தையில் முன்வைத்தார். அதில் ‘2026’ என்று ஆர்ஜே சொல்லவும், ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று விஜய் பதிலளித்தப்போது அரங்கம் மீண்டும் ஆர்ப்பரித்தது.

வழக்கமாக தனது படங்களின் விழாவில் மேம்போக்காக அரசியல் பேசிவந்த விஜய், நேற்று நடந்த லியோ வெற்றிவிழாவில் தனது பேச்சில் அரசியல் சற்று தூக்கலாகவே இருக்கப்படி பார்த்துக் கொண்டார். விஜய் மட்டுமல்லாமல், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரின் பேச்சும் கூட விஜய்யின் அரசியல் வருகையை உறுதி செய்வதாகவே இருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x