Saturday, April 27, 2024
Home » இலங்கை – இந்தியா பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு; 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

இலங்கை – இந்தியா பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு; 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

by Rizwan Segu Mohideen
November 2, 2023 4:26 pm 0 comment

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் உலக பெறுமதிச் சங்கிலியின் ஊடாக பிரதான தரப்பினர்களுடன் இணைவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவானது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகும். முன்னுரிமையான துறைகளில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவாக மேம்படுத்தும் நோக்கத்துடன் 2018 முதல் இடைநிறுத்தப்பட்ட ETCA தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29 ஜூலை 2023 அன்று இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும், வர்த்தகத் திணைக்களத்தின் இணைச் செயலாளருமான ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகள் குழு இலங்கை வந்து இந்த விரிவான ஒப்பந்தம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், வர்த்தகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி மற்றும் முதலீட்டுச் சபை, ஜனாதிபதி செயலகத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க தலைமையிலான தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு (NTNC) தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

பண்டங்கள், சேவைகள், ஆரம்ப கட்ட விதிகள், வர்த்தக தீர்வுகள், சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதிகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள், சட்ட மற்றும் நிறுவன விடயங்கள் ஆகியவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்டன. அத்துடன், இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடும் விசேட அமர்வு ஒன்று இடம்பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT