Sunday, April 28, 2024
Home » ரூ. 1 கோடி பெறுமதியான களைக்கொல்லிகள், பூச்சிகொல்லிகள் மீட்பு; இருவர் கைது
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகிலிருந்து

ரூ. 1 கோடி பெறுமதியான களைக்கொல்லிகள், பூச்சிகொல்லிகள் மீட்பு; இருவர் கைது

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் சம்பவம்!

by mahesh
November 1, 2023 8:50 am 0 comment

கற்பிட்டி கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன (29) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவைகள் சுமார் 1 கோடி ரூபா பெறுமதியானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி விஜய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் விசேட படகுப்பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் என்பன 22 உரைப் பைகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக மீன்பிடிக் கப்பலொன்றில் கொண்டு வரப்பட்டுள்ளமை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதெனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT